கோபக்கார இளைஞனில் இருந்து பொறுப்பான பயிற்சியாளர்… கம்பீருக்கு இன்று பிறந்தநாள்!
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக கவுதம் கம்பீர் எப்போதும் இருப்பார். 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி உலகக் கோப்பை வென்ற இறுதிப் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக கம்பீர் இருந்தார்.
2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆண்டு. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தங்களது தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக் மற்றும் சச்சின் ஆகியோரின் விக்கெட்களை வெகு விரைவாக இழந்தது.
அப்போது பதற்றமான அந்த சூழலில் மிகச்சிறப்பான இன்னிங்ஸை கட்டமைத்தனர் கம்பீரும், கோலியும். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். கம்பீர் சிறப்பாக விளையாடி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் தவறவிட்டார். ஆனால் அவரின் அந்த இன்னிங்ஸ் அவ்வளவாகக் கவனிக்கப்படவில்லை. அதை கம்பீரே பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்பிறகு கம்பீருக்கு இந்திய அணியில் பெரியளவுக்கு எதிர்காலம் இல்லை. கடைசியில் அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்து அரசியலுக்கு சென்று மக்களவை உறுப்பினராகவும் இருந்து தற்போது இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆகியுள்ளார். வீரராக இருக்கும் போது எதிரணி வீரர்கள் மட்டுமில்லாமல் தன்னுடைய அணி வீரர்களுடனும் சண்டை போடும் அளவுக்கு ஆக்ரோஷமான வராக கம்பீர் இருந்தார். கோலி மற்றும் அவருக்கு இடையே நடந்த மோதல்களே இதற்கு சாட்சி.
ஆனால் இப்போது பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள அவர் நிதானமான ஒரு மனிதராக முதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால் இப்போதும் அவருக்குள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷம் இருக்கதான் செய்கிறது. இந்நிலையில் கம்பீர் இன்று 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.