1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (12:11 IST)

ஸ்டம்புகளை உடைத்து ஆவேசம்.. ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அபராதம்! – நடந்தது என்ன?

Harmanpreet kaur
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆவேசமாக நடந்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்திய – வங்கதேசம் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு போட்டியை வென்றிருந்த நிலையில் கடைசி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த கடைசி போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடியபோது நடுவர் கொடுத்த LBW ஆல் அவர் அவுட் ஆகி வெளியேற்றப்பட்டார். அந்த ஆவேசத்தில் அவர் அங்கிருந்த ஸ்டம்புகளை பேட்டால் அடித்து விளாசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த போட்டி ட்ராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. அதை பெறுவதற்காக வங்கதேச அணி வீராங்கனைகள் வந்து நின்றபோது, அவர்களிடம் ஹர்மன்ப்ரீத் கவுர் “உங்கள் வெற்றிக்காக பாடுபட்டு உழைத்த நடுவர்களையும் அழைத்து வாருங்கள்” என உசுப்பேற்றும் விதமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த வங்கதேச வீராங்கனைகள் அணி அங்கிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுரிக்கு போட்டிகான ஊதிய தொகையில் இருந்து 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K