புதன், 13 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (12:11 IST)

போன தடவ ஸ்ட்ரெச்சர்.. இந்த தடவ சிக்ஸரு..! – ஹர்திக் பாண்ட்யாவின் ஆசியக்கோப்பை கதை!

Hardik Pandya
நேற்று நடந்த ஆசியக்கோப்பை டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஹர்திக் பாண்ட்யா தனது கடந்த கால மோசமான அனுபவங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆசியக்கோப்பை டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.

இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்ந்தெடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியை 20 ஓவர்கள் முடியும் முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் காலி செய்த இந்திய அணி 147 ரன்களுக்குள் பாகிஸ்தானை ஆட்டமிழக்க செய்தது.

பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்து வெற்றிப்பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா வென்றார்.
Hardik Pandya

20 வது ஓவரின் நான்காவது பந்தை அடிக்கும் முன்பு தினேஷ் கார்த்திக்கை பார்த்து “நான் பாத்துக்கறேன்” என்று கண் காட்டிய ஹர்திக் பாண்ட்யா தூக்கி அடித்த சிக்ஸரில் ரசிகர் கூட்டம் ஆர்பரிக்க இந்தியா வெற்றி பெற்றது.

ஆனால் கடந்த 2018ல் ஆசியக்கோப்பையில் இதே ஹர்திக் பாண்ட்யாவுக்கு மோசமான அனுபவங்களும் ஏற்பட்டன. 2018 ஆசியக்கோப்பை டி20 போட்டியில் இதே பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியபோதுதான் ஹர்திக் பாண்ட்யா பின் தண்டு வடத்தில் அடிபட்டு விளையாட முடியாமல் ஆனார். பின்னர் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு குணமாகி திரும்ப வந்தார்.

தற்போது இந்த போட்டியில் வென்றதையும், 2018 போட்டியில் அடிபட்டு ஸ்ட்ரெச்சரில் சென்றதையும் இணைத்து பதிவிட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா “பின்னடைவை விட மறுபிரவேசம் சிறப்பானது” என பதிவிட்டுள்ளார். அவருக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.