1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 5 மார்ச் 2025 (10:29 IST)

நாங்கள் இந்த மைதானத்தில் பயிற்சி கூட செய்ததில்லை… விமர்சனங்களுக்கு கம்பீரின் பதில்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில்  ஆஸி அணி நிர்னயித்த 265 என்ற இலக்கைத் துரத்திய போது மிகவும் பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தார் ஆட்டநாயகன் கோலி. அவருக்குத் துணையாக கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பாண்ட்யா ஆகியோரின் ஆட்டமும் அமைந்தது.

இந்த வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்திய அணி ஒரே மைதானத்தில் தொடர்ந்து விளையாடுவது பற்றி எழும் விமர்சனங்கள் குறித்து கேட்டபோது காரசாரமாக பதில் அளித்துள்ளார்.

அவர் பேச்சில் “இது எப்படி மற்ற அணிகளுக்கு பொதுவான மைதானமோ. அதுபோலதான் எங்களுக்கும். நாங்கள் இந்த மைதானத்தில் இதற்கு முன்னர் பயிற்சி கூட செய்ததில்லை. ஐசிசி கிரிக்கெட் அகாடெமியில்தான் பயிற்சி செய்தோம்.  ஆனால் சிலர் தொடர்ந்து இதைப் பற்றி பேசி வருகின்றனர்” எனக் கூறியுள்ளார். மேலும் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் குறித்து பேசும்போது “அவர் அதிரடியாக ஆடி மற்ற வீரர்கள் எப்படி ஆடவேண்டும் என்பதை காட்டும் விதமாக ஆடுகிறார்” எனக் கூறியுள்ளார்.