ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (10:22 IST)

ஹர்திக் பாண்ட்யா ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருப்பார்… பயிற்சியாளர் பாராட்டு!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. நெருக்கடியான கட்டத்தில் இறங்கி பல போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறவைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ள மெகா ஏலத்துக்காக அவரைக் கழட்டிவிட்டது மும்பை.

இதனால் அவர் இப்போது புதிய அணியான அகமதாபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்காக 15 கோடி ரூபாயை ஒப்பந்த தொகையாக அந்த அணி அறிவித்துள்ளது. இவரைத் தவிர ரஷித் கானை 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். மொத்த ஏலத்தொகையான 90 கோடியில் 37 கோடியை 3 வீரர்களுக்காக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் அகமதாபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் கேரி கிறிஸ்டன் பாராட்டியுள்ளார். அவர் ‘பாண்ட்யா ஒரு இளம் கேப்டன். அவர் வீரர்களை உற்சாகப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவரை அவர் ஐபிஎல்-ல் கேப்டன் பொறுப்பை ஏற்றதில்லை. ஆனால் அவரிடம் கேப்டன்சி பண்புகள் அதிகம் உள்ளன. ரஷித் கான், சுப்மன் கில் ஆகியோரையும் அணியில் எடுத்துள்ளோம். அவர்களும் மிகச்சிறந்த வீரர்கள். தங்கள் திறமையைப் பலமுறை நிரூபித்துள்ளனர்.’ எனக் கூறியுள்ளார்.