ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!
ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனால் அதற்கான சூழல் இந்திய அணியில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா தொடரோடு அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்த உலகக் கோப்பை வரை விளையாட ஆசைப்பட்ட ரோஹித் ஷர்மா அவமதிக்கப்படுவதாக அவரது ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்துப் பேசியுள்ள இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி “ரோஹித்துக்கு இப்போது நடப்பது எனக்கும் நடந்தது. டிராவிட்டுக்கும் நடந்தது. ஏன் எதிர்காலத்தில் ஷுப்மன் கில்லுக்கும் நடக்கும். ரோஹித் ஷர்மா சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால் 2027 ஆம் ஆண்டில் அவருக்கு 40 வயதாக இருக்கும். கிரிக்கெட்டில் அது மிகவும் அதிக வயது” எனக் கூறியுள்ளார்.