வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (13:36 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர், தற்போது இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இந்திய கிரிக்கெட்டின் வீரர்களான தோனி மற்றும் கோலி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டாக பார்க்கப்படாமல், தனிநபர் சாகசங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் பேசிவந்தார்.

ஆனால் கடந்த ஐபிஎல் தொடரின் போதே இருவரும் கைகொடுத்துப் பேசி சமாதானம் ஆனார்கள். மேலும் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது “எங்களுக்கு இடையிலான உறவை ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார். இந்நிலையில் நாளை வங்கதேச டெஸ்ட் தொடர் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோ ஒன்றை எடுத்து பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

அதில் விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி அணுகுமுறை குறித்து கம்பீர் பாராட்டிப் பேசியுள்ளார். அதில் “டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங் யூனிட்டை உருவாக்கியுள்ளீர்கள். 20 விக்கெட்களையும் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள். அதனால்தான் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த கேப்டனாக இருக்கிறீர்கள். அதற்கான பாராட்டுகளை உங்களுக்கு வழங்கியே ஆகவேண்டும்.” என பாராட்டியுள்ளார்.