1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (09:41 IST)

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கம்பீர், தற்போது இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இந்திய கிரிக்கெட்டின் வீரர்களான தோனி மற்றும் கோலி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டாக பார்க்கப்படாமல், தனிநபர் சாகசங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் பேசிவந்தார்.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட போது ரசிகர்களுக்கு ஏற்பட்ட நெருடல் என்னவென்றால் கம்பீர்- கோலி உறவு எப்படி சுமூகமானதாக இருக்கும் என்பதுதான். ஏனென்றால் இதற்கு முன்னர் அவர்கள் சிலமுறை மைதானத்திலேயே வார்த்தைப் போர்களில் ஈடுபட்டது நடந்தது. அதனால் கோலி ரசிகர்கள் கம்பீரை கடுமையாக கேலியும் விமர்சனம் செய்துவந்தனர்.

ஆனால் கடந்த ஐபிஎல் தொடரின் போதே இருவரும் கைகொடுத்துப் பேசி சமாதானம் ஆனார்கள். மேலும் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது “எங்களுக்கு இடையிலான உறவை ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார். இந்நிலையில் நாளை வங்கதேச டெஸ்ட் தொடர் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் கோலி மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகிய இருவரும் உரையாடும் வீடியோ ஒன்றை எடுத்து பகிர பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோ இன்று வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.