தோனியை சம்மதிக்க வைக்க ராஞ்சி செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான்!. அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது.
இந்நிலையில்தான் டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விதியால் தோனி கிட்டத்தட்ட அடுத்த சீசனில் ஆடுவது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இப்போது சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ள தகவல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு கிளியூட்டியுள்ளது. அவர் “எங்களுக்கும் தோனி அடுத்த சீசனில் ஆடவேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் தோனி இது சம்மந்தமாக இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. அவர் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தன்னுடைய முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது தோனியிடம் பேச்சுவார்த்தை நடத்த சி எஸ் கே நிர்வாகிகள் ராஞ்சி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தோனியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.