நான் போகாத Play offக்கு யாரும் போகக்கூடாது! – வஞ்சம் வைக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்?
கடந்த சில ஐபிஎல் லீக் போட்டிகளில் திடீர் ஃபார்மிற்கு வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் பெரிய அணிகளை அடித்து கீழே தள்ளி வருவது பலருக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் எந்த அணி முதல் நான்கு இடங்களுக்குள் வரப்போகிறது என பெரும் யுத்தமே நடந்து வருகிறது. ஒரு அணிக்கு 14 லீக் போட்டிகள் என்ற கணக்கில் முதல் 7 லீக் போட்டிகள் முடிவடைந்தபோது 5ல் வென்று சென்னை முதலிடத்தை பிடித்திருந்தது. அடுத்தடுத்து குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என வலுவான அணிகள் அணி வகுத்தன.
ஆனால் ஆரம்பம் முதலே சுமாராக விளையாடி வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைஸர்ஸ் அணிகள் தரவரிசையில் 9, 10வது இடங்களிலேயே தங்கின. ஆனால் லீக் போட்டிகளின் இரண்டாவது பாதியில் திடீர் ஃபார்மிற்குள் நுழைந்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் பெரிய அணிகளுக்கு தலைவலியாகவே மாறியுள்ளது என சொல்லலாம்.
ப்ளே ஆஃப் செல்வதற்கு முதல் 4 இடங்களுக்குள் நுழைய ராஜஸ்தான், லக்னோ, சென்னை, மும்பை, குஜராத், பெங்களூர் என அணிகள் போட்டிப் போட்டு நிற்கும் வேளையில் பெரிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி வருகிறது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
முதலில் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸை கடைசி வரிசையில் நின்று அடித்து வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்திய டெல்லி, நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும் அடித்து துவைத்து பாயிண்டுகளை பறித்துள்ளது. அடுத்து டெல்லி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் மோத உள்ளது.
தற்போது 10 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள டெல்லி அணி இனி உள்ள 4 போட்டிகளில் வெல்ல முடியுமா? ப்ளே ஆஃப் செல்ல முடியுமா? என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே உள்ளது. ஆனால் ப்ளே ஆஃப்க்கு போராடி வரும் அணிகள் டெல்லியிடம் தோல்வியடைந்தால் அவர்களது ப்ளே ஆப் கனவு தகர்க்கப்படும். டெல்லியுடன் மோதிய குஜராத் தப்பிக் கொண்டாலும், ஆர்சிபி ப்ளே ஆப்க்கு தகுதி பெற முடியாத சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இன்னும் எந்தெந்த அணிகளுடைய ப்ளே ஆப் கனவை டெல்லி தகர்க்க போகிறதோ என்ற பரபரப்பு கூடியுள்ளது.
Edit by Prasanth.K