1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 மே 2023 (06:19 IST)

13 ஆண்டுகள் போராடி சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே!

CSK Vs MI
நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பையை அணியை இந்த சீசனில் இரண்டாவது முறையும் வென்று புதிய சாதனையை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளின் இரண்டாம் பாதி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. ஏற்கனவே வான்கடே மைதானத்தில் வைத்து மும்பையை சிஎஸ்கே வென்றதால், இந்த முறை சென்னை மைதானத்தில் வைத்து மும்பை பதிலடி கொடுக்க முயலும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதலில் பேட்டிங்கில் இறங்கிய மும்பை அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி சென்னை மைதானத்தில் விக்கெட் மழையை பொழிந்தது சிஎஸ்கே. மும்பை கேப்டன் ரோகித் சர்மாவை மீண்டும் டக் அவுட்டாக்கி வெளியே அனுப்பியது. 140 ரன்களே இலக்கு என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி அடுத்து சிக்ஸர், பவுண்டரி மழையை பொழிய தொடங்க சென்னை மைதானமே திக்குமுக்காடி போனது.

18வது ஓவரிலேயே மொத்த மேட்ச்சையும் முடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே. இதுவரை சென்னை – மும்பை அணிகள் எத்தனையோ முறை மோதிக் கொண்டுள்ள போதிலும் மும்பை அணியை மற்ற மைதானங்களில் எளிதாக தோற்கடித்து விடும் சென்னை அணி தனது ஹோம் க்ரவுண்டான சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் மும்பையிடம் தோற்று விடுவது தொடர்கதையாக இருந்து வந்தது.

ஒன்று, இரண்டு சீசனாக அல்ல கடந்த 13 வருடங்களாக நடந்த போட்டிகளில் சேப்பாக்கத்தில் ஒருமுறை கூட மும்பையை சென்னை வென்றது கிடையாது என்றே வரலாறு இருந்து வந்தது. நேற்றைய போட்டியில் மும்பையை மிக எளிதாக நொறுக்கி வெற்றியை கைப்பற்றி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.