1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2025 (10:43 IST)

சாம்பியன்ஸ் ட்ராபி! பும்ரா இல்லைன்னா அந்த வீரராவது வரணும்! - முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பரிந்துரை!

bhuvneshwar kumar

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளில் பும்ரா பங்கேற்க முடியாவிட்டால் அவருக்கு பதிலாக புவனேஸ்குமாரை தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பரிந்துரை செய்துள்ளார்.

 

 

8 கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

 

இந்த போட்டிகளுக்கான அணி வீரர்கள் பட்டியலை தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியில் யார் யார் விளையாட போகிறார்கள் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் அணி தேர்வில் பல விவாதங்கள் நடந்து வருவதாக தெரிகிறது.

 

மேலும் ஆஸ்திரேலியா தொடரில் பல விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முதுகெலும்பாக விளங்கிய ஜாஸ்பிரிட் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். மார்ச் மாதம் வரை அவர் விளையாட முடியாது என்பதால் அவருக்கு பதிலாக யார் இடம்பெறுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் “இன்றளவும் புவனேஸ்வர்குமாரால் இரண்டு புறமும் பந்தினை ஸ்வீங் செய்ய முடியும். 2022 உலகக்கோப்பை டி20யில் அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரை இந்திய அணி தற்போது மறந்தேவிட்டது. பும்ரா சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்க முடியாவிட்டால் அவருக்கு பதிலாக புவனேஸ்குமாரை கொண்டு வருவது அணிக்கு நல்லதாக அமையும்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K