தங்கக் கட்டிய தகரம்னு நினைச்சுட்டு இருக்காங்க! – குஜராத்தை மலைக்க வைத்த புவனேஸ்வர் குமார்!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வென்றாலும் சன்ரைசர்ஸ் அணியின் புவனேஸ்வர் குமார் ஆட்டம் பலரை வியக்க வைத்துள்ளது.
நேற்று நடந்த ஐபிஏல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 188 ரன்களை குவித்த நிலையில் அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 154 ரன்களில் ஆட்டமிழந்ததால் ப்ளே ஆப் தகுதியை இழந்தது. குஜராத் அணி இந்த வெற்றி மூலம் 18 புள்ளிகளை பெற்று முதல் அணியாக ப்ளே ஆப் சென்றுள்ளது.
நேற்றைய போட்டியில் குஜராத் அணி வீரர் சுப்மன் கில்லின் 101 ரன்கள், சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டம் பெரிதும் பேசப்பட்ட அளவு சன்ரைசர்ஸ் அணியின் புவனேஸ்வர் குமாரின் ஆட்டமும் பலரை வியக்க வைத்துள்ளது.
குஜராத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான வ்ரித்திமான் சஹாவை டக் அவுட் ஆக்கிய புவனேஷ்குமார், ஹர்திக் பாண்ட்யாவை 15வது ஓவரில் 8 ரன்களில் தூக்கினார். கடைசி ஓவரில் உக்கிரமாக விளையாடிய புவனேஸ்வர் குமார் முதல் பந்தில் ஷுப்மன் கில் விக்கெட், இரண்டாவது பந்தில் ரஷித் கான், 5வது பந்தில் முகமது ஷமி என ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தமாக குஜராத்தின் 5 விக்கெட்டுகளை ஒரே போட்டியில் தட்டி தூக்கியுள்ளார் புவனேஷ்குமார்.
அதேபோல சன்ரைசர்ஸின் அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்த போதும் கடைசி வரை நின்று விளையாடிய புவனேஸ்வர் குமார் 3 பவுண்டரிகள் வரை அடித்து 27 ரன்கள் வரை குவித்தார்.
முதலில் ரஷித் கான் சன்ரைசர்ஸ் அணியில் இருந்தபோதும் அவர் பெரிதாக வெளியே தெரியவில்லை. ஆனால் தற்போது குஜராத் அணியில் கலக்கி வருகிறார். அதுபோல புவனேஷ்வர் குமாரும் அடுத்தடுத்த சீசன்களில் சரியான அணி மற்றும் கேப்பிட்டன்சியில் விளையாடினால் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.
Edit by Prasanth.K