சர்பராஸ் கான் அணியில் எடுக்க படாததற்கு காரணம் இதுதான்… பிசிசிஐ தரப்பு விளக்கம்!
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு செல்லும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிவரும் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பளிக்கப் படவில்லை.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. இதுபற்றி பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ” அவர் தொடர்ந்து 3 ரஞ்சி கோப்பை சீசன்களில் 100 ரன்களுக்கு மேல் சராசரியோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்னும் அவரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள். அவரை பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. 15 பேர் கொண்ட அணியிலாவது சேர்த்து அவரின் திறமையை அங்கீகரித்ததாக அவரிடம் உணர்த்த வேண்டும்.” என ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக பிசிசிஐ தரப்பு அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் “சர்ஃபராஸ் கான் அணியில் எடுக்கப்படாமல் இருக்க அவரின் கிரிக்கெட் திறன்கள் காரணம் இல்லை. அவர் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்து கொள்ளும் முறை சரியாக இல்லை. ஆக்ரோஷமாக செயல்பட்டு வரும் அவரை நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறோம். அவருக்கு கட்டுபாடு தேவை. அவர் உடல் பிட்னஸும் சர்வதேச தரத்தில் இல்லை. அவர் உடல் எடையை குறைக்க வேண்டும். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் அவரை அணியில் எடுக்காமல் இருக்க நாங்கள் என்ன முட்டாள்களா?” பிசிசிஐ தரப்பு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விளக்கமளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.