என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி போன்ற திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணியால் சமீபத்தில் எந்தவொரு முக்கியமான தொடரையோ, அல்லது கோப்பையையோ கைப்பற்ற முடியவில்லை.
இதற்கெல்லாம் காரணம் அணிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த அணிக்கு தற்காலிகமாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுக்கொண்ட கேரி கிரிஸ்டன் கூட இதைப் பற்றி புலம்பியிருந்தார். இந்த பூசல்கள் காரணமாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாமின் பேட்டிங் திறன் கூட சமீபகாலமாக வெளிப்படவில்லை. அதனால் அவரிடம் இருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு ஒரு வீரராக மட்டும் செயல்பட்டு வருகிறார்.
இந்திய அணியில் கோலியை கிங் என்று அழைப்பது போல பாகிஸ்தானில் பாபரை கிங் என்று அழைத்து வந்தனர். இந்நிலையில் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று சொல்லியுள்ள பாபர் “நான் ஒன்றும் கிங் இல்லை. என்னை அப்படி அழைக்காதீர்கள். நான் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.