வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (08:28 IST)

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் இதற்காக முதலில் அறிவிக்கப்பட்டிருந்த அணியில் இடம்பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் வருண் சக்ரவர்த்தி கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே ரோஹித்- கில் தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடுவதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்பட்டது.

இப்போது இதற்கு விளக்கமளித்துள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் “ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருண் சக்ரவர்த்தியை அணிக்குள் கொண்டுவந்ததற்கான காரணம், இந்திய அணிக்கு மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த ஒரு பவுலர் தேவைப்படுகிறார். அந்த ஒரே காரணத்துக்காகதான் வருணை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.