தேர்தல் சமயத்தில் ரிலீஸுக்கு தயாராகும் சாவர்க்கர், எமெர்ஜென்சி படங்கள்! - தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் சார்ந்த சில முக்கியமான படங்களும் தேர்தலை ஒட்டி முன்னதாக வெளியாக உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலங்கள்தோறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் வட்டாரமே பரபரப்பாக இயங்கி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் திரைத்துறையிலும் பாஜக தலைவர்கள், இந்து மத தலைவர்களை மையப்படுத்திய வாழ்க்கை வரலாற்று படங்கள் முழு வீச்சில் ரிலீஸாகி வருகின்றன.
முன்னாள் பாஜக பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று படம் கடந்த ஜனவரி 19ம் தேதி வெளியாகி இன்றும் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடி வருகிறது. இந்த படத்தில் வாஜ்பாயாக பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார்.
இதையடுத்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரந்தீப் ஹூடா எழுதி, இயக்கி நடித்துள்ள “ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்” திரைப்படம் மார்ச் 22ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான தேதி அறிவிப்பு டீசர் நேற்று வெளியானது. அதில் ஆரம்பத்தில் மகாத்மா காந்தியை வரைவது போல காட்டப்பட்டு, பின்னணியில் ரகுபதி ராகவ ராஜாராம் இசையும் ஒலிக்கிறது. அது சட்டென்று வெடித்து சாவர்க்கராக உருமாற்றம் அடைகிறது. இந்த படம் உண்மையில் சாவர்க்கர் யார் என்பது குறித்த தகவல்களை ஆதாரத்துடன் சொல்ல உள்ளதாகவும், காந்தி கொலையில் அவருக்கு உள்ள தொடர்பு என்ன என்பது குறித்தும் சொல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இதே ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கங்கனா ரனாவத் நடித்து வரும் “எமெர்ஜென்சி” படத்தின் வேலைகளும் வேகமாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியாக நடித்துள்ளார். எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் இந்திராகாந்தியின் அணுகுமுறை அதனால் மக்கள் பட்ட துயரங்களை இந்த படம் பேச உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது ஜூன் மாதத்திலோ இந்த படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து இவ்வாறான அரசியல் படங்கள் வெளியாவது மக்கள் மனதில் தேர்தல் வாக்குப்பதிவில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K