திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (09:25 IST)

தேர்தலுக்கு முன் வெளியே வருவாரா செந்தில் பாலாஜி? – இன்று மீண்டும் ஜாமீன் மனு விசாரணை!

senthil balaji
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ள நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.



சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து ஜாமீனுக்கு விண்ணப்பித்து வரும் நிலையில் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன.


முன்னதாக அவரது உடல்நலத்தை சுட்டிக்காட்டி ஜாமீன் கேட்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு முதன்மை அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தொடர்ந்துள்ள ஜாமீன் மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் கரூர், அரவக்குறிச்சி ஏரியாவை வலுப்படுத்த செந்தில் பாலாஜி வெளியே வந்தால்தான் சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செந்தில்பாலாஜி வெளியே வருவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது கட்சியினருக்குமே எதிர்பார்ப்பாக உள்ளது.

Edit by Prasanth.K