வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (23:12 IST)

கத்தாரில் ஜாகிர் நாயக்: இந்திய அணுகுமுறை மீது ஏன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன?

Qatar
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க விழாவிற்கு இந்தியா அழைக்கப்பட்டது. ஆனால் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் அங்கு வந்துள்ளார் என்ற தகவலைத் தொடர்ந்து  அவரது வருகை தொடர்பான பல கேள்விகள் இந்தியாவில் எழுப்பப்படுகின்றன.
 
கத்தார் ஜாகிர் நாயக்கை அழைத்ததா இல்லையா என்பதை அந்த நாடு அதிகாரபூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆயினும் அவர் கத்தாருக்கு சென்றது குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
 
கத்தாரின் அதிகாரபூர்வ விளையாட்டு சேனலான அல்காஸின் தொகுப்பாளரான அல்ஹாஜ்ரி, "ஷேக் ஜாகிர் நாயக் கத்தாரில் இருக்கிறார். உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் இந்த காலகட்டம் முழுவதும் பல மத சொற்பொழிவுகளை அவர் ஆற்றுவார்,”என்று ட்வீட் செய்துள்ளார்.
 
ஜாகிர் நாயக் கத்தாரில் சொற்பொழிவுகளை வழங்க உள்ளார் என்பதை வேறு சில ட்வீட்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
 
ஜாகிர் நாயக் மீது இந்தியாவில் பண மோசடி மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் கத்தாருக்கு சென்றிருப்பது குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
 
இதனால் இந்தியா - கத்தார் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர்.
 
எனினும் இது குறித்து வெளியுறவு அமைச்சகம் இதுவரை அதிகாரபூர்வமாக கருத்து எதுவும் வெளியிடவில்லை.
 
ஆனால் செவ்வாய்க்கிழமை சண்டீகரில், இந்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜாகிர் நாயக் கத்தாரில் இருப்பது குறித்த கேள்விக்கு எச்சரிக்கையுடன் பதிலளித்தார்.
 
கத்தார் உலக கோப்பை: எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?
 
“இந்த விஷயத்தை இந்தியா எழுப்பியுள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதை தொடர்ந்து எழுப்பும் என்றும் நான் கருதுகிறேன். ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய குடியுரிமை தரப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அவர் அழைக்கப்பட்டுளார்,” என்று ஹர்தீப் பூரி பதில் அளித்தார்.
 
இதற்கிடையே, பாஜக செய்தித் தொடர்பாளர் சாவியோ ரோட்ரிக்ஸ், உலக கோப்பை கால்பந்துப்போட்டியை புறக்கணிக்குமாறு இந்திய அரசிடம் கோரியுள்ளார்.
 
பயங்கரவாதத்திற்கு எதிராக உலகம் போராடும் போது, ​​ஜாகிர் நாயக்கிற்கு வெறுப்புணர்வைப் பரப்ப ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று சாவியோ ரோட்ரிக்ஸ், ஒரு செய்தியில் என்டிடிவி கூறியது.
 
இந்தியாவுக்கு என்ன சங்கடம்?
ஜாகிர் நாயக் கத்தாருக்கு சென்றுள்ளது குறித்து இந்தியா ஏன் கவலையடைந்துள்ளது என்பது கேள்வி.
 
வெறுப்புணர்வை பரப்பியதற்காகவும், தீவிரவாதத்தை ஊக்குவித்ததற்காகவும் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் ஜாகிர் நாயக் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இந்தியாவில் வழக்குகள் நிலுவையில் இருந்தபோது ஜாகிர் நாயக் மலேசியா சென்றார். இப்போது அங்கு குடிமகனாகி வாழ்ந்து வருகிறார்.
 
வெறுப்பைத் தூண்டும் பேச்சு, நாசகார நடவடிக்கை, பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் நாயக் அங்கும் கூட உரையாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியா, வங்கதேசம், கனடா, இலங்கை மற்றும் பிரிட்டனில் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஒளிபரப்பும் பீஸ் (Peace) டிவிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இது ஒருபுறமிருக்க, இந்திய குடியரசுமுன்னாள் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த ஆண்டு தோஹா சென்றபோது ​​அங்குள்ள அரசு நூபுர் ஷர்மா விவகாரம் தொடர்பாக இந்திய தூதரை அழைத்து அதிருப்தி தெரிவித்தது தொடர்பாகவும் இந்தியர்கள் கோபமடைந்துள்ளனர்.
 
அந்த காலகட்டத்தில் முகமது நபிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக நூபுர் ஷர்மா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
 
 
நூபுர் ஷர்மா விவகாரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய கத்தார் வெளியுறவு அமைச்சகம், தோஹாவில் உள்ள இந்திய தூதர் தீபக் மித்தலை அழைத்துரை அழைத்துப் பேசியது.
 
இது தொடர்பான கத்தாரின் அதிருப்தியை வெளிப்படுத்தும் அதிகாரபூர்வ குறிப்பை, கத்தார் வெளியுறவு அமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முரையிக்கி இந்திய தூதரிடம் அளித்தார்.
 
கத்தார் வெளியுறவு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பு ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்தது.
 
இந்தியாவின் ஆளும் கட்சி மேற்கொண்ட நடவடிக்கை இதில் வரவேற்கப்பட்டது. சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் தலைவர்களை இடைநீக்கம் செய்வது மற்றும் வெளியேற்றுவது குறித்து இதில் பேசப்பட்டது.
 
கூடவே, இந்திய அரசிடம் இருந்து பகிரங்க மன்னிப்பு மற்றும் இந்தக் கருத்துகளுக்குக் கண்டனம் ஆகியவற்றையும் கத்தார் எதிர்பார்க்கிறது என்றும் கூறப்பட்டது.
 
இந்த ஆண்டு மே மாதம், பாஜக முன்னாள் தலைவர் நூபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
 
முகமது நபி குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன் பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
 
நூபுர் ஷர்மா மற்றும் ஒரு சர்ச்சைக்குரிய ட்வீட் தொடர்பாக நவீன் குமார் ஜிண்டல் மீதும் பாஜக நடவடிக்கை எடுத்தது.
 
ஆனால் அதற்குள் விஷயம் கட்டுமீறிப்போனது. அரபு நாடுகள் மட்டுமின்றி வேறு பல நாடுகளும் இந்த விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
 
ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டு
இதற்கு முன்னதாக, ஜாகிர் நாயக் ’பிஸ்’ (Peace) டிவி சேனலைத் தொடங்கினார். இது துபாயில் இருந்து ஒளிபரப்பப்பட்டது. அவர் தனது உரைகளில் இஸ்லாத்தை பிரசாரம் செய்தார்.
 
பின்னர் அவர் பீஸ் டிவி உருது மற்றும் பங்களாவையும் தொடங்கினார்.
 
கடந்த ஆண்டு உள்துறை அமைச்சகம், ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எஃப்) மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
 
மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு UAPA இன் கீழ் IRF-ஐ தடை செய்தது.
 
ஐஆர்எப்-க்கு தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இதுபோன்ற செயல்களில் நாயக்கின் இந்த அமைப்பு தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டிருந்தது.
 
இது நாட்டின் அமைதிக்கும், மத ஒற்றுமைக்கும் கேடு விளைவிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது.
 
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத செயல்களுக்கு அது தூண்டி விடுவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
 
மலேஷியாவில் உள்ள புத்ராஜெயா மசூதியில் ஜாகிர் நாயக்
படக்குறிப்பு,
மலேஷியாவில்
 
ஜாகிரின் சர்ச்சைக்குரிய கருத்து
ஜாகிர் நாயக் தனது ஆத்திரமூட்டும் பேச்சுகள் மற்றும் மத சொற்பொழிவுகள் மூலம் இந்தியாவில் உள்ள தனது ஆதரவாளர்களை அடைய முயற்சிக்கிறார் என்று இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் பயங்கரவாத எதிர்ப்பு தீர்ப்பாயத்தில் கூறியிருந்தார்.
 
ஜாகிர் நாயக் மற்றும் அவரது அறக்கட்டளையான  இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை - வளைகுடா நாடுகளில் இருந்து நிதி சேகரித்தது, அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஷெல் நிறுவனங்களை உருவாக்கியது என்று அவருக்கு எதிரான உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
இவை இளைஞர்களை, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றப் பயன்படுத்தப்படுகின்றன என்று இந்திய அரசு கூறினாலும், அவற்றை நாயக் நிராகரித்து வருகிறார்.
 
தனது பேச்சு திரித்துக் கூறப்படுவதாக என்று கூறுகிறார்.
 
நாயக்கின் பேச்சுக்களையும்,உரைகளையும் எல்லா முஸ்லிம் நாடுகளும் கண்காணித்து வருகின்றன.
 
அவரது உரைகளில் ஷியாக்கள் மற்றும் அஹ்மதியர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று அவரது விமர்சகர்கள் பலர் கூறுகிறார்கள்.
 
இஸ்லாத்தின் சன்னி பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் செளதி அரேபியா, 2015 ஆம் ஆண்டில் ஜாகிர் நாயக்கிற்கு, 'இஸ்லாமுக்கு அவர் அளித்த சேவை' க்காக, கிங் பைசல் சர்வதேச விருது வழங்கிச் சிறப்பித்தது.
 
இதுவரையிலான ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷை 'ஒயிட் காலர் தீவிரவாதி' என்று அவர் கூறுகிறார்.
 
ஒசாமா பின்லேடனை தீவிரவாதியாகவோ அல்லது புனிதராகவோ அவர் கருதவில்லை.
 
'தி வீக்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர், இந்தக்கருத்தை தெரிவித்திருந்தார்.
 
“நான் அவரை (ஒசாமா பின்லேடனை) தீவிரவாதி என்றோ, புனிதர் என்றோ சொல்லவில்லை. அவர் என்ன என்பது  எனக்குத் தெரியாது,”என்றார் அவர்.
 
 ”அவர் (ஒசாமா பின்லேடன்) இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிராகப் போராடுகிறார் என்றால் நான் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர் தீவிரவாதிகளை பயமுறுத்துகிறார் என்றால் மிகப்பெரிய தீவிரவாதியான அமெரிக்காவை அச்சுறுத்துகிறார் என்றால் நான் அவருடன் இருக்கிறேன்” என்று 1998இல் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியைத் தெளிவுபடுத்தும்படி அவரிடம் கேட்கப்பட்டது.
 
 
“நான் சொல்லும் போதனைகளைப் பின்பற்றி ஒருவராவது முக்தி பெற்றால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்,” என்று அவர் கூறுவார்.
 
தென்னாப்பிரிக்க முஸ்லிம் அறிஞரான ஷேக் அகமது தீதத், தன்னை மிகவும் ஈர்த்ததாக ஜாகிர் நாயக் 'தி வீக்' இதழிடம் தெரிவித்தார்.
 
நாயக்கின் தந்தை ஒரு மனநல மருத்துவர் மற்றும் சகோதரர் ஒரு மருத்துவர். நாயக்கின் தாயார் முதுகலைப் பட்டதாரி. நாயக்கை இதய நிபுணராக ஆக்க அவர் விரும்பினார்.
 
உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த தென்னாப்பிரிக்க மருத்துவர் கிறிஸ்டியன் பர்னார்ட்டைப் போல தான் இருக்க வேண்டும் என்று தனது தாய் விரும்பியதாக நாயக் கூறினார்.
 
”ஷேக் அகமது தீதத்தை சந்தித்த பிறகு நான் என் அம்மாவிடம்  நான் தீதத் போல ஆகவேண்டுமா அல்லது  பெர்னார்ட் போலவா என்று கேட்டேன். அதற்கு அவர் இருவரைப்போலவும்  உன்னை பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னார்,” என்று நாயக் 'தி வீக்' இதழிடம் பேசுகையில் தெரிவித்தார்.
 
நாயக் தனது மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் 1990 இல் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
 
மும்பையில் பிறந்த நாயக், சிறுவயதில் திக்கியவாறு பேசுவார். ஆனால் இப்போது அவர் சரளமாகப் பேசுகிறார்.
 
ஜாகிருக்கு எதிரான கடினமான கட்டம்
 
'தாவா'வின்(இஸ்லாமிய பயிற்சிவகுப்பு) செயல்பாடுகளால் நாயக் 1990களிலேயே பேச்சில் அடிபட ஆரம்பித்தார்.
 
ஆனால் 2000-ம் ஆண்டு வாக்கில் அவருடைய பேச்சுக்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன.
 
குறிப்பாக பீஸ் டிவி மூலம் இஸ்லாம் மதத்திற்கு ஆதரவாக அவர் பேசிய பேச்சுகள் விவாதத்திற்கு உள்ளாகின.
 
இஸ்லாத்தை மற்ற மதங்களை விட உயர்ந்தது என்று கூறுவதாகவும், மற்ற மதங்களை இழிவுபடுத்துவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது பேச்சுகள் மதவெறியை பரப்புவதாக கூறப்பட்டது.
 
2016-ம் ஆண்டு வங்கதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் இறந்தபோது நாயக்கின் வாழ்க்கையில் பெரும் பிரச்சனை தொடங்கியது.
 
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் ஜாகிரின் பேச்சுகளால் தான் ஈர்க்கப்பட்டதாக  கூறினார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து மும்பை காவல்துறையின் சிறப்புப் பிரிவு இது குறித்து விசாரணை நடத்தியது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு ஜாகிர் நாயக்கின் அமைப்பு ஐஆர்எஃப் தடை செய்யப்பட்டது.
 
இதையடுத்து நாயக் இந்தியாவை விட்டு வெளியேறி மலேஷியா சென்றார். இந்திய அரசு அவரை தப்பியோடிய நபராக அறிவித்தது.
 
இதற்குப் பிறகு, 2019 இல் இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த  குண்டுவெடிப்பில் 250 பேர் கொல்லப்பட்ட  சம்பவத்திற்குப்பிறகும் ஜாகிர் மீது  பார்வை திரும்பியது.
 
தாக்குதல் நடத்தியவர்கள் ஜாகிர் நாயக்கின் பேச்சிலிருந்து உத்வேகம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இலங்கையிலும் அவரது சேனல் மூடப்பட்டது.
 
ஜாகிர் இப்போது மலேஷியாவின் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார். ஆனால் அங்கும் அவர் உரை நிகழ்த்த அனுமதி இல்லை.
 
தற்போது ஜாகிர் நாயக் கத்தாருக்கு அழைக்கப்பட்டது தொடர்பாக இந்தியாவில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதற்கு இந்தியா பெரிதாக எதிர்வினையாற்ற வேண்டாம் என இரு நாட்டு உறவைப் புரிந்து கொண்டவர்கள் கூறுகின்றனர்.
 
”இது ஒரு ‘நாசூக்கான விஷயம்’. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பார்க்கும்போது ​​இதில் இந்தியா கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது அவசியம்,” என்று கத்தாருக்கான இந்தியத் தூதராக இருந்த கேபி ஃபேபியன் கூறினார்.
 
”இந்தியா மற்றும் கத்தார் இடையேயான உறவை மனதில் கொள்ள வேண்டும். இந்தியாவின் எட்டு லட்சம் பேர் அங்கு வசிக்கின்றனர். அங்கிருந்து நமக்கு திரவ இயற்கை வாயு கிடைக்கிறது. நமது  பல நிறுவனங்கள் அங்கு தொழில் செய்து வருகின்றன. இவற்றை மனதில்கொண்டு, இந்தப் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது,” என்று ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர் தெரிவித்தார்.