திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (15:02 IST)

குமரியில் ஜாமீன் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்ம மரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 
 
காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்ததாக உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளை சேர்ந்தவர் சசிகுமார். அவரது மகன் அஜித் (22). அஜித் தொழில் கல்வி முடித்துவிட்டு சரக்கு வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
 
கடந்த ஏப்ரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் அஜித் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குலசேகரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அஜித் 15 நாட்களுக்கு தினசரி குலசேகரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 23ஆம் தேதி கையெழுத்திட குலசேகரம் காவல் நிலையம் சென்ற இளைஞர் அஜித் வீடு திரும்பவில்லை.
 
இந்த நிலையில் குலசேகரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் அஜித்தின் வீட்டிற்கு சென்று, அஜித் விஷம் அருந்தி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளதாக கூறி அஜித்தின் தந்தை சசிகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர்.
 
இதனிடையே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் சனிக்கிழமை மதியம் உயிரிந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக தந்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
 
தனது மகனின் உயிரிழப்பிற்கு குலசேகரம் காவல்துறையினரே காரணம் என கூறி அஜித்தின் தந்தை சசிகுமார் உடலை பெற மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
 
புகாரின் அடிப்படையில் குலசேகரம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கை தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 
சசிகுமார் தனது மகனின் உயிரிழப்பின் மீது சந்தேகம் எழுப்பி உள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை வேண்டுகோள் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் மருத்துவக் குழு மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
 
காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது கன்னியாகுமரி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
காவல்துறை திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றச்சாட்டு
 
மர்மமான முறையில் உயிரிழந்த அஜித் தந்தை சசிகுமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், 'கடந்த 3 மாதத்திற்கு முன்பு எனக்கும் எனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் எங்களிடம் எந்த விதமான விசாரணையும் நடத்தாமல் எனது மகன் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
பின்னர் அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளி வந்த என் மகன் கடந்த ஒரு வாரமாக ஜாமீன் கையெழுத்து போட காவல் நிலையத்திற்கு சென்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர் திரும்பி வரவில்லை.
 
அன்று மாலை காவல் நிலையத்தில் இருந்து வந்த காவலர் ஒருவர் அஜித் வீட்டில் இருந்து காவல் நிலையம் வரும் போது விஷமருந்தி இருந்ததாகவும், தற்போது வயிற்று வலி காரணமாக அஜித்தை காவல் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
 
மேலும் அந்த போலீஸ் சொன்னதை அப்படியே ஒரு பேப்பரில் எழுதி வந்து அதில் என்னை கையெழுத்திடும் படி மிரட்டும் தோணியில் பேசினார். நான் கையெழுத்து போடாமல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அஜித் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரை பார்க்க முடியாது என மருத்துவர்கள் திருப்பி அனுப்பினர்.
 
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) என் மகன் இறந்து விட்டதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவித்தனர். ஆனால் நாங்கள் என் மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது ஒரு முறை கூட பார்க்க அனுமதிக்கவில்லை. இது என் மகன் உயிரிழப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
காவல்துறை சார்பில் இன்று உடற்கூறு ஆய்வு செய்து உடலை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், உடலை வாங்க மாட்டோம். என் மகன் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இதில் முதல்வர் தலையிட்டு விசாரிக்க வேண்டும்' என அஜித்தின் தந்தை சசிகுமார் தெரிவித்தார்.
 
காவல் துறை செய்தி குறிப்பு மூலம் விளக்கம்
இளைஞர் அஜித் மரணம் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடந்த ஏப்ரல் மாதம் அஜித்தின் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கைது செய்யப்பட்டு பின்னர் கடந்த 17ஆம் தேதி பத்மநாபபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் குலசேகரம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார.
 
விடுவிக்கப்பட்ட அஜித் கடந்த 23ந் தேதி பகல் 1 மணி அளவில் குலசேகரம் காவல் நிலையத்திற்கு வந்து காவல் நிலைய வாசல் கதவுக்கு வெளியே நின்று கொண்டு தனது செல்போன் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் அதை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு காவலர் காவல் நிலையத்தில் செல்போன் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
 
பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற அஜீத் சிறிது நேரம் கழித்து காவல் நிலையம் வாசல் கதவின் வெளியே வந்து நின்று கொண்டு தான் விஷம் அருந்தி விட்டு வந்திருப்பதாக கூறி தனது கையில் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்த பொருளை எடுத்து மீண்டும் சாப்பிட்டுள்ளார்.
 
இதை பார்த்த காவலர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வர காலதாமதமானதால் காவல் நிலையத்தில் வெளியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர் ஒரு தனியார் ஜீப்பில் அஜித்தை அழைத்துக் கொண்டு குலசேகரம் அரசு மருத்துவமனையில் விஷம் சாப்பிட்டு விவரம் கூறி சேர்த்துள்ளார்.
 
அங்கு மருத்துவர்கள் முதல் சிகிச்சை அளித்து விட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி அஜித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிகழ்வுகள் காவல் நிலையத்தில் வெளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை 11:45 மணிக்கு அஜித் இறந்துவிட்டார்.
 
அஜித் குலசேகரம் பகுதியில் உள்ள ஏதோ ஒரு கடையில் இருந்து விஷம் வாங்கி சாப்பிட்டு உள்ளதற்கான முகாந்திரம் தெரிகிறது" இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.