உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கவிருக்கிறார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்து வருகின்றன. இந்த பதவியேற்பு விழா பற்றிய சில தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
முதல்வர் பதவியேற்பு விழா எப்போது?
யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக மார்ச் 25ஆம் தேதி மாலை 4 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.
யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழா எங்கு நடைபெறுகிறது?
பதவியேற்பு விழா லக்னெளவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பேயி ஏகானா கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.உத்தர பிரதேசத்தில் கடந்த 37 ஆண்டுகளில் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை. அதிலும் முன்பு ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி 2வது முறையாக ஆட்சி அமைக்கும் முதல் கட்சியாக உருவெடுத்துள்ளதால் இந்த பதவியேற்பு விழா மிகப்பெரிய அளவில் நடத்தப்படுகிறது.
யார் எல்லாம் பங்கேற்பார்கள்?
1. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரதமர் மோதி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
2. யோகி ஆதித்யநாத்துடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுவோரும் பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளனர். இதற்கு ஏதுவாக தேர்தலில் தோற்ற அமைச்சர்கள் அரசு பங்களாக்களை மார்ச் 26ஆம் தேதியே காலி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
3. இந்த விழாவை பார்வையிட 60,000க்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் கூட்டத்தை சமாளிக்க பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
4. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளையும் முக்கிய பிரமுகர்களையும் விழாவுக்கு அழைத்துள்ளது.
5. எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள், சமூக சேவகர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், கோயில் பூஜாரிகள், மடாலய துறவிகள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
6. எதிர்கட்சித் தலைவர்களான அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உத்தர பிரதேசத்தில் இருந்தாலும் அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார். இதுபோன்ற விழாக்களில் அவர் பங்கேற்கும் வழக்கம் இல்லை என்று அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பின்னணி
சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி மாநில சட்டமன்ற தேர்தலில், 403 தொகுதிகளில், 255 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் கூட்டணி கட்சிகளான அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சி முறையே 12 மற்றும் 6 இடங்களில் வெற்றி பெற்றன.உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வரலாற்றுபூர்வ வெற்றியானது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் 2024இல் அக்கட்சிக்கு சாதகமான அரசியல் உத்திகளை வகுக்க பலம் சேர்த்துள்ளதாக சில அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.