1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (15:04 IST)

ஹிஜாப் சர்ச்சை: இஸ்லாமிய பெண்களின் ஆடைகளுக்கு தடை உள்ள உலக நாடுகள்!

கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சிலர் இது தங்கள் சட்டப்பூர்வமான உரிமை என்றும் சிலர், கல்வி நிறுவனங்களில் மதச் சின்னங்களை அணிவது முறையன்று என்றும் கருதுகின்றனர்.
 
ஆனால் சில நாடுகளில், பல ஆண்டுகளுக்கு முன்பே, பொது இடங்களில் முகத்தை மூடுவது அல்லது நிகாப், புர்கா, பர்தா போன்ற முகத்தையும், உடலையும் மறைக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான ஆடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. சில நாடுகளில், விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் முறையும் உள்ளது.
 
ஃபிரான்ஸ்
11 ஏப்ரல் 2011 அன்று, பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மூடும் இஸ்லாமிய முக்காடுகளான நிகாப்களைத் தடை செய்த முதல் ஐரோப்பிய நாடாக ஃபிரான்ஸ் ஆனது. இந்தக் கட்டுப்பாட்டின் கீழ், எந்தப் பெண்ணும், பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் சரி, வெளிநாட்டவராக இருந்தாலும் சரி, முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. விதியை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
 
அப்போது ஃபிரான்ஸ் அதிபராக இருந்தவர் நிக்கோலா சர்கோசி. தடையை விதித்த சர்கோசி நிர்வாகம், பர்தா பெண்களுக்கு எதிரான அடக்குமுறை என்றும் ஃபிரான்ஸில் அது வரவேற்கப்படாது என்றும் கருதியது.
 
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2016-ம் ஆண்டு ஃபிரான்ஸில் இன்னொரு சர்ச்சைக்குரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. பெண்களின் முழு உடலையும் மறைக்கும் 'புர்கினி' (புர்கா + பிகினி) என்னும் நீச்சலுடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், பின்னர் ஃபிரெஞ்சு உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை ரத்து செய்தது.
 
பிரான்சில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மேற்கு ஐரோப்பாவிலேயே இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது, ஆனால் 2,000 முஸ்லிம் பெண்கள் மட்டுமே உடலை முழுவதுமாக மறைக்கும் பர்தா அணிகின்றனர் என்று கருதப்படுகிறது.
 
அவ்வாறு செய்வதற்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு பெண்ணை முகத்தை மறைக்க யாராவது வற்புறுத்தினால், அவருக்கு 30 ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுகிறது.
 
பெல்ஜியம்
பெல்ஜியத்திலும் 2011 ஜூலையில் முகம் முழுவதையும் மூடுவது தடை செய்யப்பட்டது. இந்தப் புதிய சட்டம் பொது இடங்களில் அணிந்திருப்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத எந்த ஆடையையும் தடை செய்தது.
 
டிசம்பர் 2012 இல், பெல்ஜிய நீதிமன்றம், இச்சட்டம், மனித உரிமைகளை மீறவில்லை என்று கூறி இந்தத் தடையை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது. பெல்ஜியம் நாட்டின் இந்தச் சட்டத்தை 2017ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றமும் உறுதி செய்தது.
 
நெதர்லாந்து
நவம்பர் 2016இல், நெதர்லாந்தில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களிலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போதும் முகத்தை முழுவதுமாக மூடும் இஸ்லாமிய முக்காடுகளைத் தடை செய்வதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
 
எனினும், இந்தத் தடை சட்டமாக மாற நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. இறுதியாக ஜூன் 2018இல் முகத்தை மூடுவதை நெதர்லாந்து தடை செய்தது.
 
இத்தாலி
இத்தாலியின் சில நகரங்களில் முகத்தை மறைக்கும் இது போன்ற உடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் நோவாரா நகரமும் அடங்கும். இத்தாலியின் லோம்பார்டி பகுதியில், புர்கா மீதான தடை டிசம்பர் 2015இல் ஒப்புக் கொள்ளப்பட்டு, ஜனவரி 2016 முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும், இந்த விதி நாடு முழுவதும் பொருந்தாது.
 
ஜெர்மனி
6 டிசம்பர் 2016 அன்று, அப்போதைய ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல், "நாட்டில் எங்கெல்லாம் முகத்தை மூடும் ஆடைகள், சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட முடியுமோ அங்கெல்லாம் தடை செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
 
ஜெர்மனியில் இதுவரை அத்தகைய சட்டம் இல்லை என்றாலும், வாகனம் ஓட்டும்போது முகத்தை மறைப்பது சட்டவிரோதமானது. ஜெர்மனியின் நாடாளுமன்றத்தின் கீழ் சபை, நீதிபதிகள், வீரர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் தடைக்கு ஒப்புதல் அளித்தது. இங்கு முகம் முழுவதையும் மறைக்கும் பெண்கள், தேவைப்படும் போது முகத்தைக் காட்டுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரியா
அக்டோபர் 2017 இல், ஆஸ்திரியாவில் பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற பொது இடங்களில் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டது.
 
நார்வே
நார்வேயில், ஜூன் 2018 இல் இயற்றப்பட்ட சட்டம் கல்வி நிறுவனங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதைத் தடை செய்கிறது.
 
ஸ்பெயின்
ஸ்பெயினில் தேசிய அளவில் தடைக்கான திட்டம் எதுவும் இல்லை என்றாலும், 2010 இல் பார்சிலோனா நகரில் உள்ள நகராட்சி அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் நூலகங்கள் போன்ற சில பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மூடும் இஸ்லாமிய முக்காடுகளைத் தடை செய்வதாக அறிவித்தது.
 
இருப்பினும், லிடா நகரில் விதிக்கப்பட்ட தடை ஸ்பெயினின் உச்ச நீதிமன்றத்தால் பிப்ரவரி 2013இல் ரத்து செய்யப்பட்டது. இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
 
பிரிட்டன்
பிரிட்டனில் இஸ்லாமிய உடைக்கு எந்தத் தடையும் இல்லை, ஆனால் அங்குள்ள பள்ளிகள் தத்தம் சீருடைகளையும் ஆடை விதிகளையும் வகுக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 2016 இல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத பிரிட்டிஷ் பொதுமக்கள் இங்கிலாந்தில் புர்காவைத் தடை செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 
ஆப்ரிக்க நாடுகள்
2015ஆம் ஆண்டில், பர்தா அணிந்த பெண்கள் பல பெரிய தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். இதற்குப் பிறகு, சாட், கேமரூனின் வடக்குப் பகுதி, நைஜரின் சில பகுதிகள் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் முழுவதுமாக முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டது.
 
துருக்கி
துருக்கி 85 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரப்பூர்வமாக மதச்சார்பற்ற நாடாக இருந்தது. துருக்கியின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க், இது பிற்போக்குவாதம் என்று கூறி ஹிஜாபை நிராகரித்தார்.
 
உத்தியோகபூர்வ கட்டடங்கள் மற்றும் சில பொது இடங்களில் ஹிஜாப் தடை செய்யப்பட்டது, ஆனால் நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் இந்தப் பிரச்னையில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.
 
பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி பதவியில் இருப்பவர்களின் மனைவிகள் மற்றும் மகள்கள் உட்பட அனைத்து துருக்கிய பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் தலையை மறைக்கும் ஆடைகளை அணிகிறார்கள்.
 
2008இல், துருக்கிய அரசியலமைப்பை திருத்தி, பல்கலைக்கழகங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டன. பின்னர் தளர்வாக கட்டப்பட்ட ஹிஜாப்புக்கு ஒப்புதல் கிடைத்தது. இருப்பினும், கழுத்து மற்றும் முழு முகத்தை மறைக்கும் நிகாப் மீதான தடை தொடர்ந்தது.
 
2013 இல், துருக்கி தேசிய நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றது. இருப்பினும், நீதித்துறை, ராணுவம் மற்றும் காவல்துறை போன்ற சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்தது. 2016ஆம் ஆண்டு துருக்கியும் பெண் காவலர்கள் ஹிஜாப் அணிய அனுமதித்தது.
 
டென்மார்க்
டென்மார்க் நாடாளுமன்றம் 2018 இல் முழுவதுமாக முகத்தை மூடுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்டத்தின்படி, ஒருவர் இரண்டாவது முறையாக இந்தத் தடையை மீறியதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு முதல்முறையை விட 10 மடங்கு அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதேசமயம் யாரேனும் ஒருவரை பர்தா அணிய வற்புறுத்தினால் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்ற அறைகளில் நீதிபதிகள் தலையில் முக்காடு மற்றும் சிலுவை, தொப்பி அல்லது தலைப்பாகை போன்ற பிற மத அல்லது அரசியல் சின்னங்களை அணிவதைத் தடை செய்வதாக அரசாங்கம் அறிவித்தது.
 
ரஷ்யா
ரஷ்யாவின் ஸ்வட்ரோபோல் பகுதியில் ஹிஜாப் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுபோன்ற தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை. ஜூலை 2013 இல், ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் இந்த முடிவை உறுதி செய்தது.
 
சுவிட்சர்லாந்து
2009ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் நீதித்துறை அமைச்சர் ஈவ்லின் விட்மர், அதிகமான பெண்கள் நிகாப் அணிவதைக் கண்டால் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறினார். செப்டம்பர் 2013 இல், சுவிட்சர்லாந்தின் டிசினோவில் 65 சதவீத மக்கள் பொது இடங்களில் எந்த சமூகமும் முகத்தை மூடுவதைத் தடைசெய்வதறு ஆதரவாக வாக்களித்தனர். இந்தப் பகுதியில் இத்தாலிய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
 
சுவிட்சர்லாந்தின் 26 மாகாணங்களில் இதுபோன்ற தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. சுவிட்சர்லாந்தின் 80 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முஸ்லிம்கள்.
 
பல்கேரியா
அக்டோபர் 2016 இல், பல்கேரியாவின் நாடாளுமன்றம் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் குறைக்கப்பட வேண்டும் என்ற மசோதாவை நிறைவேற்றியது.