செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (10:34 IST)

கமலா ஹாரிஸ் பதவியேற்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது குவியும் கவனம்

கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு இந்திய-அமெரிக்க வம்சாவளி சமூகத்தினரிடையே அவரைப் பற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ளன.
 
ஜமைக்காவைப் பூர்விகமாகக் கொண்ட தந்தை டொனால்டு ஹாரிஸுக்கும், இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட தாய் சியாமளா கோபாலனுக்கும் கமலா ஹாரிஸ் பிறந்தார்.
 
1964ஆம் ஆண்டு டொனால்டு ஹாரிஸ் அமெரிக்காவில் குடியேறினார். அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1965இல் தான் அமெரிக்காவில் குடியேற்றம் மற்றும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 
இந்தச் சட்டம் அமெரிக்காவில் குடியுரிமை கோருபவர்களுக்கு அவர்கள் பிறந்த நாட்டின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுக்கு இருந்த திறமைகளின் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்தது.
 
இதன் காரணமாக ஆசிய நாடுகளிலிருந்து பல்வேறு துறைகளில் திறன் பெற்றிருந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு குடிபெயரத் தொடங்கினார்கள்.
 
அமெரிக்காவில் உள்ள இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை
1957ஆம் ஆண்டு தலிப் சிங் சாந்த் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அமெரிக்க தேர்தலில் வென்ற முதல் இந்திய அமெரிக்கர் ஆனார்.
 
அதன்பிறகு பியூஸ் 'பாபி' ஜிண்டால், பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட பலரும் அமெரிக்கத் தேர்தலில் வென்று உள்ளார்கள்.
 
அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் எண்ணிக்கை வெறும் 1.5 சதவிகிதம்தான்.
 
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களின்படி 2000வது ஆண்டில் அமெரிக்காவில் சுமார் 19 லட்சம் இந்தியர்கள் இருந்தனர். 2015ஆம் ஆண்டு இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து 39 லட்சத்து 82 ஆயிரம் ஆனது.
 
பிற குடியேற்ற சமூகங்களை விட இந்திய அமெரிக்கர்கள் அதிக பணம் படைத்தவர்கள் மட்டுமல்ல; அதிகமான கல்விப் பின்புலமும் உடையவர்களாக இருக்கிறார்கள்.
 
பியூ ரிசர்ச் அமைப்பின் தகவலின்டி அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் 40 சதவிகிதம் பேருக்கு முதுநிலைப் பட்டம் உள்ளது. இந்திய வம்சாவளியினரின் 7.5 சதவிகிதம் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். இதுவே ஒட்டுமொத்த அமெரிக்காவின் விகிதம் 15. 7 சதவிகிதமாக உள்ளது.
 
சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் எப்படி அமெரிக்க தேர்தலில் தாக்கம் செலுத்த முடியும். இதைப் புரிந்துகொள்ள இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் அந்நாட்டு தேர்தல்களில் எவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.
 
இந்திய அமெரிக்கர்கள் வாக்களிப்பது எவ்வாறு?
அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் பேர் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் உள்ளனர். மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் அதிகம் வளர்ச்சியடையும் குடியேற்ற சமூகமாக இவர்கள் உள்ளனர்.
 
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி 2000 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையே இந்திய வம்சாவளியினரின் மக்கள் தொகை 137.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
 
அவர்களில் பெரும்பாலானவர்கள் நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ போன்ற பெரு நகரங்களில் வசிக்கிறார்கள்.
 
நியூயார்க்கில் மட்டும் சுமார் 6 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கிறார்கள். சிகாகோவில் 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
 
அமெரிக்காவுக்கு வெளியே பிறந்தவர்களில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்று அடிப்படையில் பார்க்கும்போது மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்திய அமெரிக்கர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள் என்று பியு ரிசர்ச் அமைப்பு கூறுகிறது.
 
2014இல் மேற்கொள்ளப்பட்ட NAAS என்னும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி 48 சதவிகித இந்திய - அமெரிக்கர்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் அல்லது ஜனநாயக கட்சி ஆதரவு மனநிலையுடன் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 22% பேர் மட்டும்தான் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும்போது எப்போதுமே ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினரிடையே இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்கான போட்டி தொடங்கிவிடும்.
 
இதற்கு காரணம் என்ன தெரியுமா? இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருக்கும் போர்க்கள மாகாணங்களான ஃப்ளோரிடா, பென்சில்வேனியா, மிஷிகன் ஆகிய மாகாணங்களில் இந்திய அமெரிக்கர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். இந்த மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த அமெரிக்காவின் தேர்தல் முடிவை மாற்ற வல்லவை.
 
கடந்த தேர்தலில் இந்தியன் அமெரிக்கன் ஆட்டிட்யூட் சர்வே கருத்துக்கணிப்பில் 70 சதவிகித இந்திய அமெரிக்கர்கள் டொனால்டு டிரம்பை விட ஜோ பைடனுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள் என்று தெரியவந்துள்ளது.
 
எச்1பி (H1B) விசா
உலகிலேயே எச்1பி வகை விசாவை கொண்டுள்ளவர்களில் அதிகமானவர்கள் இந்தியர்கள்தான்.
 
சர்வதேச அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆண்டுதோறும் வழங்கப்படும் 85,000 எச்1பி விசா பெற்றவர்களில், சுமார் 70 சதவிகிதத்தை பெறுபவர்கள் இந்தியர்களாக இருக்கிறார்கள்.
 
ஆனால் தேர்தலுக்கு சில காலம் முன்பு தங்களது 'அமெரிக்கக் கனவை' பின்தொடரும் இந்தியர்களின் திட்டமான இந்த எச்1பி விசா திட்டத்தை நிறுத்தி வைத்தார் டிரம்ப்.
 
அமெரிக்கர்களின் பணி வாய்ப்பைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு நிர்வாக ஆணையைப் பிறப்பித்தார் அவர்.
 
அதன்படி அமெரிக்க அரசின் முகமைகள் நேரடியாகவோ அவர்களின் கிளை அமைப்புகள் மூலமாகவோ வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தஅவர் தடை விதித்தார். இவர்களில் பெரும்பாலானவர்கள் எச்1பி விசா உடையவர்கள். இந்த விசாவைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் அமெரிக்கா செல்லும் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவர்களுக்கு இது ஒரு பலத்த அடியாக இருந்தது.
 
இது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட AAPI கருத்துக் கணிப்பில் எதிரொலித்தது.
 
அமெரிக்காவில் வசிக்கும் 35 சதவிகித ஆசிய இந்தியர்கள் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவதை ஏற்க மாட்டோம் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்திருந்தார்கள்.
 
தற்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் இந்திய சுதந்திர தினத்தின் போது எச்1பி விசா குறித்து பேசியிருந்தார். இப்போது பெரும்பாலானவர்கள் கவனம் அவர் மீது உள்ளது.
 
அந்த உரையில் வெறுப்பின் காரணமாக நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு உள்ளானவர்கள், சட்டப்பூர்வ குடியேற்றத்தின் மீது விதிக்கப்படும் தடைகள், திடீரென நிறுத்தப்படும் எச்1பி விசா ஆகியவற்றால் பாதிக்கப்படுவோர் குறித்து தாம் வருத்தம் கொண்டுள்ளதாக பைடன் தெரிவித்திருந்தார்.
 
இதற்கு முந்தைய அதிபர் தேர்தலில் 84 சதவீத இந்திய அமெரிக்க வம்சாவளியினர் ஒபாமா அதிபர் ஆவதற்கு வாக்களித்திருந்தனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
 
குடியரசு கட்சியினரை விட ஜனநாயக கட்சியினர் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாட்டு குடியேறிகள் ஆகியோரை ஏற்றுக்கொள்வதில் தாராளவாத மனநிலையுடனேயே கடந்த சில தசாப்தங்களாக இருந்து வருகின்றனர்.
 
கமலா ஹாரிஸ் புதிய அரசில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் இந்திய அமெரிக்க வம்சாவளியினர் அமெரிக்காவில் இன்னும் ஒளிர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.