1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் என்ன?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கி விட்டது. முதல் மூன்று நாட்களில் 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

இவர்களில் 580 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு 'பாதகமான பக்க விளைவு' ஏற்பட்டுள்ளது. இது மொத்தமாகத் தடுப்பூசி பெற்றவர்களில் 0.2 சதவீதம்  மட்டுமே.
 
இருப்பினும், முதல் இரண்டு நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 64% மட்டுமே என்பது கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. சுமார் 3 லட்சத்து 16 ஆயிரம் பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்த அரசாங்கம் விரும்பியது, ஆனால் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு  மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
 
பல மாநிலங்களில், முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மையத்திற்கு வந்தவர்கள் மிக அதிகமில்லை. டெல்லியில் நிர்ணயிக்கப்பட்டிருந்தவர்களில் 54  சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தனர்.
 
எனவே, தடுப்பூசியால் ஏற்படும் பாதகமான பக்க விளைவுகளைக் கண்டு அதிகம் பேர் தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
 
தடுப்பூசி வழங்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள முதல் நாடு இந்தியாதான் என்று இந்திய  அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
இந்த எண்ணிக்கை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பதிவான எண்ணிக்கையை விட அதிகம்.
 
தடுப்பு மருந்தைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான பக்க விளைவுகள் என்ன?
 
தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படக்கூடிய இதுபோன்ற பக்கவிளைவுகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் மனோகர் அக்னானி  விரிவாக விளக்கினார்.
 
"தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அந்த நபருக்கு ஏற்படும் எதிர்பாராத மருத்துவப் பிரச்னைகளைத் தான் நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான  விளைவு என்று அழைக்கிறோம். இதற்கு, தடுப்பு மருந்தின் காரணமாகவும் இருக்கலாம். தடுப்பூசி செயல்முறை அல்லது வேறு ஏதேனும் காரணமாகவும் இருக்கலாம் இந்த விளைவுகளைப் பொதுவாக, சாதாரணமானவை, தீவிரமானவை, மிகத் தீவிரமானவை என்ற மூன்று பிரிவுகளில் பிரிக்கலாம்."
 
இவற்றில் பெரும்பாலானவை சாதாரணமானவையாகத் தான் இருக்கின்றன என்று கூறும் அவர், இது ஏதோ ஒரு விதமான வலி, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம், மிதமான காய்ச்சல், உடல் வலி, பதற்றம், ஒவ்வாமை, அரிப்பு, சொறி போன்றவையாக வெளிப்படலாம் என்றும் குறிப்பிடுகிறார்.
 
ஆனால் சில விளைவுகள் தீவிரமானவையாக இருக்கலாம் என்றும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு அதிக காய்ச்சல் இருக்கலாம்,  அல்லது 'என்ஃபைலாக்ஸிஸ்' (கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள்) என்ற நிலையும் உருவாகலாம் என்றும் எச்சரிக்கிறார். இருப்பினும் இது தற்காலிகமானது என்றும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு இருக்காது என்று ஆறுதலளிக்கிறார் டாக்டர் மனோகர் அக்னானி.
 
ஆனால் மிகத் தீவிரமான எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம்  என்கிறார். அத்தகைய சந்தர்ப்பத்தில், உயிரிழப்போ வாழ்நாள் முழுமைக்கும் பாதிக்கக்கூடிய ஒரு சிக்கலோ கூட ஏற்படலாம் என்று இவர் விளக்குகிறார்.
 
இந்த நிலை பாதிப்பு மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் ஏற்படுகின்றன. இருந்தாலும் இது மொத்த தடுப்பூசித் திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்தும் ஐயங்களை எழுப்பிவிடுகின்றன.
 
இந்தியாவில் இதுவரை தடுப்பூசிக்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் மூவர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களில் இருவர் சிகிச்சை முடிந்து வீடும் திரும்பி விட்டனர்.
 
டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.எல். ஷெர்வால் கூறுகையில், ஒவ்வொரு தடுப்பூசித் திட்டத்திலும் இதுபோன்ற சில பாதகமான விளைவுகள் காணப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 5 முதல் 10 சதவிகிதம் பேர் வரை இதுபோன்ற எதிர்மறையான  விளைவைப் பெறுவது இயல்பு தான் என்று தெரிவிக்கிறார்.
 
என்ஃபைலாக்சிஸ் என்பது என்ன?
 
பிபிசியுடனான உரையாடலில், டாக்டர் பி.எல். ஷெர்வால், "தடுப்பூசிக்குப் பிறகு ஒரு நபருக்குக் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்பட்டால், அந்த நிலை  என்ஃபைலாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்குத் தடுப்பூசி காரணம் இல்லை. ஒருவர் எந்த மருந்துக்கு ஒவ்வாமை கொண்டிருந்தாலும், இந்த வகை பிரச்னை  ஏற்படலாம்," என்று கூறுகிறார்.
 
மேலும் அவர், "அத்தகைய நிலைக்கு, AEFI (அட்வர்ஸ் எஃபெக்ட் ஃபாலோயிங்க் இம்யூனைசேஷன்) ஊசி பயன்படுத்தப்படுகிறது. இதற்கான தேவை பொதுவாக  அரிதாகவே உள்ளது. இது, மிகத் தீவிரமான விளைவுகள் என்ற பிரிவின் கீழ் வரும்' என்றும் தெரிவிக்கிறார்.
 
அட்வர்ஸ் இஃபெக்ட் ஃபாலோயிங்க் இம்யூனைசேஷன்(AEFI) நடைமுறை என்பது என்ன?
 
எய்ம்ஸில் மனித சோதனைத் திட்டத் தலைவர் டாக்டர் சஞ்சய் ராயுடன், நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்விளைவுகள் தொடர்பான  அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேசினோம்.
 
நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் நெறிமுறைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன என்றும் இத்தகைய  பாதகமான விளைவுகள் ஏற்பட்டால், தடுப்பூசி மையத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவசரநிலையைச் சமாளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது  என்றும் அவர் கூறினார்.
 
தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ஒவ்வொரு நபரும் தடுப்பூசி மையத்தில் 30 நிமிடங்கள் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், இதனால் எந்தவிதமான  பாதகமான விளைவுகளையும் கண்காணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
 
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் இதற்காக ஒரு 'கிட்' தயாரிக்கப்பட்டுள்ளது, இதில் என்ஃபைலாக்ஸிஸ் நிலைமையைச் சமாளிக்கச் சில ஊசி மருந்துகள், சொட்டு  மருந்துகள், பிற அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
 
எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க, அருகிலுள்ள மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் இது குறித்த அனைத்து விரிவான  தகவல்களையும் Co-WIN செயலியில் எவ்வாறு நிரப்புவது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
அத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு, தடுப்பூசியை முறையாகப் பாதுகாப்பது முக்கியம். தடுப்பூசி வழங்கும் முன்பு, அவரது மருத்துவ வரலாறு குறித்த  முழுமையான தகவல்களைப் பெற வேண்டும். ஒரு மருந்துக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், இந்திய அரசாங்க விதிகளின்படி, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி  கொடுக்க முடியாது.
 
தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தடுப்பூசியைத் தொடர்ந்து வரும் பிரச்னைகள் குறித்து நபருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் வெளியிட்டுள்ள  வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி போடும்போது இதுபோன்ற தகவல்கள் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படுகின்றன.
 
தீவிரமான பாதகமான விளைவுகள்
 
இது மட்டுமல்லாமல், மிகத் தீவிரமான விளைவுகளால் யாராவது உயிரிழந்தால், அது தேசிய AEFI வழிகாட்டுதல்களின்படி விசாரணைக்கு உட்படுத்தப்படும், அதற்காக மருத்துவர்களின் சிறப்புக் குழு உள்ளது.
 
மிகத் தீவிரமான இந்த நிலையில், அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றால், அந்தக் குடும்பத்தின் ஒப்புதலுடன் பிரேதப் பரிசோதனையும் செய்யப்படுகிறது. குடும்பம் இதற்கு ஒப்புதல் அளிக்காத நிலையிலும், ஒரு தனி படிவத்தை பூர்த்தி செய்து விசாரிக்கப்பட வேண்டும்.
 
தடுப்பூசிக்குப் பிறகு கடுமையான பாதகமான விளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், வழிகாட்டுதல்களின்படி, முழு நடைமுறையும்  விரிவாக ஆராயப்பட வேண்டும். விசாரணையின் மூலம், தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து காரணமாகவோ அல்லது தடுப்பூசியின் தரத்தில் ஏற்பட்ட  சிக்கல் காரணமாகவோ அல்லது தடுப்பூசியின் போது ஏற்படும் இடையூறுகள் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் கலவையின் காரணமாகவோ இந்தத் தீவிரப் பக்க விளைவு ஏற்பட்டிருந்தால், விசாரணையில் அது வெளிப்படும்.
 
நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து ஏற்படும் ஒவ்வொரு எதிர்மறையான விளைவிற்குமான காரணம் குறித்த விளக்கம், உடனுக்குடன் வெளியிடப்படவேண்டும்  என்று உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது.
 
பாதகமான விளைவுகள் எவை என்பது எவ்வாறு இறுதிசெய்யப்படுகின்றன?

எய்ம்ஸில் தடுப்பூசிகளை மனித உடலில் செலுத்தி சோதனை செய்யும் திட்டத்தின் தலைவர் டாக்டர் சஞ்சய் ராய் கூறுகையில், "தற்போது அமைக்கப்பட்டுள்ள AEFI நெறிமுறைகள் இதுவரையிலான சோதனைத் தரவை அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய நெறிமுறைகள் பொதுவாக நீண்ட கால சோதனைத் தரவை  அடிப்படையாகக் கொண்டே தயார் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் நிர்வகிக்கப்படுவது குறித்து நீண்டகால ஆய்வுத் தரவு  இல்லை. ஆகவே, நோய்த்தடுப்பு நெறிமுறையைத் தொடர்ந்து வரும் இந்த பாதகமான விளைவு தற்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்  தயாரிக்கப்பட்டுள்ளது, " என்று தெரிவித்தார்.
 
அனைத்துத் தடுப்பூசித் திட்டங்களுக்கும் ஒரே அளவிலான பாதகமான விளைவுகள் தான் ஏற்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
 
ஒவ்வொரு தடுப்பூசிக்குப் பிறகும், ஒரு வகையான எதிர்மறையான விளைவு ஏற்படும் என்று கூறுவதற்கில்லை. சில நேரங்களில் அறிகுறிகள் வேறுபடும். இது தடுப்பூசி தயாரிக்கும் முறை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைப் பொறுத்தது.
 
உதாரணமாக, பி.சி.ஜி தடுப்பூசி போடப்பட்ட பிறகு, அந்த இடத்தில் ஒரு கொப்பளம் போன்ற வீக்கம் காணப்படுகிறது. அதேபோல், சில குழந்தைகளுக்கு டிபிடி(DPT)  தடுப்பூசிக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்படுகிறது. போலியோ சொட்டு மருந்துக்குப் பிறகு, இத்தகைய பின் விளைவு எதுவும் இல்லை. அதே போல,  கொரோனாவின் தடுப்பூசி - கோவிஷீல்டு மற்றும் கோவேக்சினின் விளைவுகளும் ஒரே மாதிரியாக இருக்காது.
 
கோவேக்சின், கோவிஷீல்டின் பாதகமான விளைவுகள் என்னென்ன?
 
டாக்டர் சஞ்சய் ராய் கோவேக்சினின் சோதனை செயல்முறையை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, கோவாக்சினில் மூன்று கட்ட சோதனையில் கடுமையான பாதகமான விளைவுகள் எதுவும் காணப்படவில்லை. அதன் மூன்றாம் கட்டம் குறித்த முழுமையான தரவு இன்னும் வரவில்லை  என்றாலும். மூன்றாம் கட்டத்தில் 25 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
கோவேக்சினால் ஏற்படக்கூடிய லேசான அறிகுறிகள்- வலி, உட்செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம், லேசான காய்ச்சல், உடலில் வலி மற்றும் தடிப்புகள் போன்றவையே. சோதனையின் போது இவையும் கூட 10 சதவீதத்தினருக்கே இருந்தன. 90 சதவீத மக்களுக்கு எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
 
கோவிஷீல்டு தடுப்பூசியில் லேசான காய்ச்சல் மற்றும் சில ஒவ்வாமை எதிர்வினைகள் இருந்தன.
 
இந்திய அரசு, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்குப் போடப்படும் தடுப்பூசியின் மிகப்பெரிய திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. போலியோ தடுப்பு மருந்துத் திட்டத்தின் போது, இந்தியாவில் மூன்று நாட்களில் ஒரு கோடி குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்தியா இவ்வளவு பெரிய திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது என்றால், AEFI நெறிமுறைகள் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றன என்றே பொருள்,
 
தடுப்பூசியால் ஒருவருக்காவது பிரச்னை ஏற்படாமல் இருப்பதில்லை. அதற்காக மக்கள் அஞ்சுகிறார்களா? தடுப்புசி பெறத் தயங்குவதற்கு இது ஒரு காரணமா?
 
இது வரை போடப்பட்ட தடுப்பூசிகளில், மருத்துவமையில் சேர்க்கப்படவேண்டிய நிலை மூவருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.
 
பின்விளைவுகள், தடுப்பூசி பெறத் தயங்குவதற்கு நேரடியான காரணமாக இருப்பதில்லை. தடுப்பூசி பெறத் தயங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம், தடுப்பூசி பற்றிய சரியான தகவல்கள் மக்களுக்குத் தெரியாதது.
 
தடுப்பூசிப் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பான ஐயங்கள் இருந்தாலும் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குகிறார்கள். தடுப்பூசித் திட்டம் தொடங்கும்  போது பெரும்பாலும் இந்தத் தயக்கம் மக்களிடையே காணப்படுகிறது, பின்னர் அது காலப்போக்கில் குறைகிறது. ஆனால் பாதகமான விளைவுகள் தீவிரமாக  இருந்தால், மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்கலாம். மற்றபடி, சிறு சிறு அறிகுறிகள் சாதாரண நடைமுறையின் ஒரு பகுதியாகும்.
 
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற ஓர் அமைப்பு, இந்தியாவில் மக்கள் மத்தியில் எவ்வளவு தடுப்பூசி மீதான தயக்கம் உள்ளது என்பது குறித்து ஆன்லைனில் சில  காலமாக ஆய்வு செய்து வருகிறது. ஜனவரி 3ஆம் தேதி தரவுகளின்படி, இந்தியாவில் 69 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தத் தயங்கினர்.
 
இந்தியாவின் 224 மாவட்டங்களைச் சேர்ந்த 18,000 பேரின் ஆன்லைன் பதிலின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின்  கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் மக்கள் மத்தியில் இந்தத் தயக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் தடுப்பூசித் திட்டம் தொடங்கிய பின்னர்,  மக்கள் மத்தியில் இந்தத் தயக்கம் அதிகரித்துள்ளதா என்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
 
எம்-ஆர்என்ஏ தடுப்பு மருந்துகள் குறித்த ஐயம்
 
தற்சமயம், பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், கொரோனாவின் ஒன்பது தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இவற்றில் இரண்டு ஃபைசர் மற்றும் மாடர்னா.  இவை இரண்டும் எம்-ஆர்என்ஏ தடுப்பூசிகள். இந்தத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் தடுப்பூசி முதன்முறையாக மனிதர்கள் மீது பயன்படுத்தப்படுகிறது.  டாக்டர் சஞ்சய் கருத்துப்படி, இந்தத் தடுப்பூசிகள் போட்ட பிறகு, சில கடுமையான பாதகமான விளைவுகள் பதிவாகியுள்ளன.
 
மீதமுள்ள நான்கு தடுப்பூசிகள் வைரஸை செயலிழக்கச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதில் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் மற்றும் சீனாவின்  தடுப்பூசி ஆகியவை அடங்கும்.
 
மீதமுள்ள இரண்டு தடுப்பூசிகள் ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனீகா (கோவிஷீல்ட்) மற்றும் ஸ்பூட்னிக் - 5 ஆகியவை. அவை வெக்டர் வாக்சின் என்று அழைக்கப்படுகின்றன. எம்-ஆர்என்ஏ தடுப்பூசி தவிர, வேறு எந்தத் தடுப்பூசியையும் பயன்படுத்துவதில் கடுமையான பாதகமான விளைவுகள் எதுவும்  தெரிவிக்கப்படவில்லை.