திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 9 மார்ச் 2023 (11:48 IST)

அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?

அதிமுக – பாஜக உறவில் ஏற்பட்டுள்ள உரசல், விரிசலாகி நிரந்தரப் பிரிவாகுமா? அல்லது கடந்து செல்லும் மேகம்போல இந்த கசப்புணர்வு காலவோட்டத்தில் கரைந்து போய், பரஸ்பர தேவைகள் காரணமாக மீண்டும் ஒட்டிக்கொள்ளுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் சூடாக விவாதிக்கப்படும் பொருளாக இருக்கிறது.
 
ஏற்கெனவே, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது வலுவான குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். பெண் நிர்வாகியுடனான மோசமான உரையாடல் கசிவு வெளியான நிலையில், அந்தக் கட்சியின் ஓபிசி அணி மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகினார். ஆனால் அவரைப் பாதுகாக்க முயன்றதாக அண்ணாமலை மீது குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்நிலையில், அந்தக் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு, முந்தைய நிகழ்வுகளைப் போல பாஜகவுக்குள் நிலவும் உள்கட்சி கொந்தளிப்பைக் காட்டுவதாக மட்டும் முடியவில்லை.
 
மாறாக, கூட்டணிக் கட்சியான பாஜக-வில் இருந்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியேறிய நிர்வாகியை ஏற்றுக்கொண்டதன் மூலம் பாஜகவுக்கும், அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இரண்டு கட்சிகளும் உரசிக் கொள்ளவும் வழி ஏற்படுத்தியுள்ளது.
 
மறுபுறம் திமுகவுடனான தங்கள் உறவு வலுவான கொள்கை உறவு என்பதையும், இந்திய அளவில் திமுக ஒரு கூட்டணியை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் சமீபத்திய கூட்டம் ஒன்றில் உரத்துச் சொல்லியிருக்கிறார் தொல்.திருமாவளவன். அதே நேரம், சில விஷயங்களை தொடுகோடு போல லேசாக ஆனால், தேவையான அழுத்தத்தோடு சொல்லியிருக்கிறார் அவர்.
 
தமிழ்நாட்டில் போலீஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், ஆனால், அது பாஜகவின் திட்டங்களுக்கு ஏற்ப செயல்படுவதைப் போலத் தெரிகிறது என்ற ஒரு கருத்தை அவர் வெளியிட்டார். திமுக ஆட்சியில் இருக்கும்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் காரை பாஜகவினர் வழிமறிக்க முடிகிறது என்ற கவலையையும் அவர் வெளியிட்டார். அத்துடன், பாஜக – பாமக இருக்கும் இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்பதையும் அவர் புதிய அழுத்தத்தோடு சொல்லியிருக்கிறார்.
 
மறுநாளே, தமது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று சேர வேண்டிய தேவையை மிகவும் வலியுறுத்திக் கூறியதோடு, காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று பேசப்படும் கருத்தையும் புறக்கணித்தார். பல வடமாநிலத் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ஒரு வலுவான தேசிய அணியை உருவாக்குவதற்கான தேவையை வலியுறுத்தியது மட்டுமல்ல, அதற்கான நம்பிக்கையையும், ஊக்கத்தையும் விதைக்கும் வகையில் இருந்தது அந்தப் பேச்சு.
 
எனவே, உதயநிதி டெல்லியில் பிரதமர் மோதியை சந்தித்த நிகழ்வு, திருமாவளவன் உரை ஆகியவற்றுக்குப் பிறகு ஏற்பட்ட சந்தேக மேகங்களை துடைக்கும் வகையில் உறுதியான அரசியல் செய்தியை அளித்தது ஸ்டாலின் உரை. ஆனால், போலீஸ் குறித்து திருமாவளவன் வெளியிட்ட கவலை, பாமக குறித்து அவர் குறிப்பிட நேர்ந்தது ஆகியவை விளக்கம் பெறாத கேள்விகளாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக, பாமக திமுகவை நெருங்க விரும்புகிறது என்ற பார்வை பரவலாகப் பகிரப்படும் நிலையில், இந்தக் கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதிமுக – பாஜக உறவு முடிவுக்கு வருமானால், பாமக எங்கே இருக்கிறதோ அதற்கு நேரெதிரான இடத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைக்கும். பாமக தனித்து விடப்பட்டாலோ, பாஜக அல்லது அதிமுகவுடன் சேர்ந்தாலோ விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் திமுக உறவை தொடர்வதில் சிக்கல் ஏற்படாது என்பது வெளிப்படையான புரிதல்.
 
இந்நிலையில், அதிமுக – பாஜக உரசல் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்று மூத்த பத்திரிகையாளரும், அதிமுக விவகாரங்களை கூர்ந்து கவனிப்பவருமான தராசு ஷ்யாமிடம் கேட்டோம்.
 
“அதிமுக பாரதிய ஜனதா இரண்டு கட்சிகளுக்கும் இடையே உறவு விரிசல் விட்டுவிட்டது,” என்று கூறியே அவர் தமது உரையாடலைத் தொடங்கினார்.
 
“2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இது தெரிந்தது. அப்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் பொன்னையன், அன்வர் ராஜா போன்றோர் பாரதிய ஜனதாவை எதிர்த்து பேட்டிகள் கொடுத்தனர். ஆனாலும் அதிமுகவுக்கு ஆட்சியில் நீடிக்க வேண்டிய நிர்பந்தம், அப்போது நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது பத்தாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தது.
 
எனவேதான் தேசிய அளவில் பியுஷ் கோயல் வரை வந்து பேசி 5 சீட்டுகள் பெற்று பாஜ அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்த அந்த கூட்டணி தேனி ஒரு தொகுதியை தவிர வேறு எங்கும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட்டணி இல்லை.
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இரட்டை இலை பெற்று, உட்கட்சி போட்டி வேட்பாளர் இல்லாமல் போட்டியிட்டால் திமுகவை தோற்கடிக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி பாஜக மேலிடத்தில் கூறினார். அது தப்பு கணக்கானது.
 
எனவே தான் அண்ணாமலை இடைத்தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவிக்கும் போது எடப்பாடி முடிவை விமர்சித்தார். அது முதல் இதுவரை உரசல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஜெயக்குமார் மாதிரி இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட்டணி இருப்பது போலப் பேசுகிறார்கள். ஆனால் தொலைக்காட்சிகளில் பேசுபவர்கள் பாஜக-வை கடுமையாக தாக்குகிறார்கள். குறிப்பாக அண்ணாமலையின் தலைமையை கேள்விக்குரியதாக மாற்றுகிறார்கள். அதிமுகவின் அதிகாரபூர்வமான செய்தித் தொடர்பாளர்கள் வெளிப்படையாகவே பொது வெளியில் கருத்துத் தெரிவிக்கிறார்கள்,” என்று கூறினார் ஷ்யாம்.
மேலும் இது பற்றிக் கூறிய அவர் “இந்த நிலையில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி தொடர் புள்ளியா முற்றுப்புள்ளியா என்கிற சஸ்பென்ஸ் மட்டுமே நீடிக்கிறது. தலைவர்கள் கைகுலுக்குவதால் மட்டும் அரசியல் கூட்டணி வெற்றி பெறாது. தொண்டர்கள் கைகுலுக்கி தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பு தேவை. அது அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை,” என்றார்.
 
அதே நேரம் பாஜக தனித்து போட்டியிட்டாலும் அந்தக் கட்சியால் சில இடங்களில் வெல்ல முடியும் என்றும், அந்தக் கட்சி வேறுசில கட்சிகளை சேர்த்துக்கொண்டு வானவில் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
 
“பாஜக தானே தனியாக கூட்டணி அமைத்து 2014 தேர்தலில் புதுச்சேரி உட்பட மூன்று இடங்கள் பெற்றது. அதே பார்முலாவில் ஐந்து அல்லது ஆறு இடங்கள் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
 
2019 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் மூன்றாவது இடம் பெற்ற டிடிவி தினகரன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாமக, ஜான் பாண்டியன் புதிய நீதி கட்சி ஆகியோரை இணைத்துக்கொண்டு தனி கூட்டணி அமைக்கும் எண்ணமும் பாஜகவுக்கு இருக்கிறது. இறுதி முடிவு டெல்லி கையில்.
 
எனவே தான் அண்ணாமலை கிளை மேலாளர் மட்டும்தான் என்று அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். இந்த நிலையில் கூட்டணி நீடித்தாலும் இரண்டு கட்சிகளுக்கும் எந்த பயனும் இல்லை” என்றார் ஷ்யாம்.
 
ஒரு வேளை அதிமுக கூட்டணி உரசல் நிரந்தரப் பிளவாக மாறிவிட்டால், பாஜக வேறு பெரிய கூட்டணியைத் தேட முயலுமா என்று கேட்டபோது, பாஜக தனியாக ஒரு வானவில் கூட்டணியை அமைக்கும் என்று தெரிவித்தார் அவர்.
 
பாஜக முன் இருக்கும் வாய்ப்புகள்
“மேலே குறிப்பிட்ட டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், ஓபிஎஸ் போன்ற தலைவர்களுக்கு அவரவர் பகுதிகளில் செல்வாக்கு உண்டு. மொத்தமாகப் பார்த்தால் இப்படி 7-8 தொகுதிகள் வருகின்றன. அவர்களோடு பாஜக இணைந்து கூட்டணி அமைத்தால் சில வெற்றிகள் சாத்தியம்தான் என்று கூறிய ஷ்யாம்,
 
அதேபோல எடப்பாடி பழனிசாமிக்கும் அவரை சார்ந்த சில தலைவர்களுக்கும் மேற்கு மண்டலத்தில் செல்வாக்கு இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணியில் இல்லாமல் போனால் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அதிமுகவுக்கு வரலாம். அப்படி பார்த்தாலும் சில தொகுதிகளில் அதிமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு எல்லாமே மனக்கணக்குதான். வெற்றிக் கணக்காக முடியுமா என்பது காலத்தின் பதில்” என்றார் அவர்.
 
இது அண்ணாமலையின் அணுகுமுறை சிக்கல் மட்டும்தானா, மத்திய பாஜகவே இந்த அணுகுமுறையை கடைபிடிக்க விரும்புமா? தமிழ்நாட்டில் அதிமுக போன்ற ஒரு பெரிய கட்சி, இயல்பான கூட்டணி என்று பார்க்கப்படும் கட்சியை விட்டு விலகி இது போன்ற சிறிய சக்திகளுடன் கூட்டணி வைக்கும் சோதனை முயற்சியை இந்த தேர்தலில் பாஜக நினைத்துப் பார்க்குமா? பாஜக கூட்டணியை விரும்பும்பட்சத்தில் அதை நிராகரிக்கும் வலிமை அதிமுக தலைமைக்கு இருக்குமா? என்ற கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
 
“மத்திய பாரதிய ஜனதா தலைவர்களோடு அண்ணாமலைக்கு நெருக்கம் அதிகம் எனவே அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை என்பது என் கருத்து” என்றார் அவர்.
 
“இப்படி இந்த உறவு பிளவை நோக்கிச் செல்வது, அதிமுக, பாஜக இரண்டுக்குமே நிம்மதியைத் தருமா? இல்லை யாராவது ஒருவர் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா... அல்லது இருவருமா” என்று அவரிடம் கேட்டபோது,
 
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாதிரி ஒற்றை தொகுதிக்கான தேர்தல் என்றால் திமுக கான்சன்ட்ரேட் செய்ய முடியும். 2024 மக்களவைத் தேர்தல் வரும்போது ஆட்சி மீது அதிருப்தி அதிகமானால் அது தங்களுக்கு லாபம் தரும் என்பது அதிமுகவின் கருத்து. அதற்குள் முக்கிய வாக்குறுதிகளையாவது திமுக நிறைவேற்ற வேண்டும். அதற்கும் மத்திய அரசு நிதி வேண்டும். கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு உதைக்கிறது”என்கிறார் ஷ்யாம். இது திமுக பாஜக ஒன்றை ஒன்று நெருங்கும் நெருக்கடியைத் தருமா என்று கேட்டபோது, 2024க்கு அது அந்த வாய்ப்பு இல்லை என்றார் அவர்.
 
திமுக நிலை மாறுமா?
 
 
இந்த கேள்வியை மற்றொரு மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பாரதி தம்பியிடம் முன்வைத்தோம். “அப்படி ஒருபோதும் திமுக யோசிக்காது. கடந்த காலத்தில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், அப்போது இருந்ததைவிட இப்போது தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்புணர்வு அதிகம். அப்படி ஒரு கூட்டணியை விரும்பினால்கூட அந்த முடிவை எடுப்பது திமுகவுக்கு சாத்தியமாக இருக்காது.
 
அரசியல் கணக்கும், சமூக நெருக்கடியும் அந்த இடத்தை நோக்கிச் செல்ல திமுகவை அனுமதிக்காது. அவர்களே விரும்பினாலும்கூட. ஆனால், திமுக-வுக்குள் இருந்து வரும் தகவல்கள், அந்தக் கட்சி பாஜக எதிர்ப்பை அடிப்படை அரசியலாக வைத்தே தங்கள் அரசியலையும், தேர்தல் உத்திகளையும் வகுப்பதாக காட்டுகின்றன. எனவே திமுக – பாஜக உறவு ஏற்படுமா என்ற கேள்வியை உலவ விடுவதே, திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்” என்றார்.
 
எடப்பாடி பழனிசாமியால் பாஜகவைப் பகைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியுமா, இந்த உரசலை எப்படிப் புரிந்துகொள்வது, இந்த மோதல் போக்கு தேர்தல் வரை நீடிக்குமா என்று கேட்டபோது, “ஓபிஎஸ் போல அல்லாமல், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் கொஞ்சம் இருக்கிறது.
 
அது கொள்கை வழியான எதிர்ப்பு அல்ல. ஆனால், கீழே அடிமட்டத்தில் இருந்து வந்து தலைமையைக் கைப்பற்ற முடிந்திருப்பது, பணபலம், தமது கவுண்டர் சாதி தரும் ஆதரவு ஆகியவை இந்த துணிச்சலை அவருக்கு தந்திருக்கும். ஆனால், பாஜகவை பொருத்த வரை அதிமுகவுடன் மோதலை நீடிப்பது அவர்களது விருப்பமாக இருக்காது. பெரிதும், இது அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாக கூட்டணிக்குள் எழுந்துள்ள நெருக்கடியாகவே தெரிகிறது. எனவே, தலைமை ஒருவேளை அவரை அழைத்து கண்டித்து, நிலைமையை சரி செய்ய முயலக்கூடும்” என்றார்.
 
பாஜக - திமுக நெருங்க வாய்ப்பில்லை என்பதுதான் ஷ்யாம், பாரதி தம்பி இருவரும் கூறும் கருத்தும். அவர்கள் இதை வெவ்வேறு புரிதல்களில் இருந்து கூறுகிறார்கள் என்பது வேறு. அதே நேரம், பாஜக – அதிமுக உறவு நிரந்தர விரிசலாக முடியுமா என்பதில் இரு வேறு கருத்துகளே நீடிக்கின்றன. அது பாஜக சாம பேத தான தண்டங்களை பிரயோகித்து அதிமுக உறவை தக்க வைக்க விரும்புமா, அதை அதிமுக தாக்குப் பிடித்து நிற்க முடியுமா என்ற இரண்டு கேள்விகளுக்குமான விடைகளைப் பொறுத்தே இருக்கிறது.