1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (15:52 IST)

இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள்

இலங்கை ஜனாதிபதியாகி இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறார். நாட்டில் இருக்கும் சூழலைப் பார்க்கும்போது அவரது பதவிக்காலம் நெருக்கடிகள் மிகுந்ததாகவே இருக்கப் போகிறது.
 
அவருக்கு என்னென்ன நெருக்கடிகள் இருக்கப் போகின்றன? அரசியல் நிபுணர் நிக்சனுடன் பேசியவற்றில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்களைப் பார்க்கலாம்.
 
ரணிலுக்கு அரசியல் ரீதியிலான நெருக்கடி எப்படி இருக்கும்?
 
இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர். தற்போது அதிபராகி விட்டதால் அந்த உறுப்பினர் பதவியை தனது கட்சியைச் சேர்ந்த வேறொருவருக்கு விட்டுத் தரலாம். அந்த ஒரேயொரு உறுப்பினரை வைத்துக் கொண்டு தனது திட்டங்களை ரணில் விக்கிரமசிங்கவால் செயல்படுத்த முடியாது. அனைத்துக்கும் எஸ்எல்பிபி கட்சியை நம்பி இருக்க வேண்டும்.
 
அதிபர் தேர்தலில் நடந்திருப்பது ரகசிய வாக்கெடுப்பு. ஆனால் நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டுவரப்படும்போது வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அதனால் எம்.பி.க்கள் ரணிலின் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே.
 
இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தன்னுடைய உறுப்பினர்களைக் கொண்டு ரணிலின் திட்டங்களை நாடாளுமன்றத்தில் தடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இது ரணிலின் பதவிக் காலத்தில் அவருக்கு பெரும் சிக்கலாக இருக்கப் போகிறது.
 
நிதியுதவி தரும் அமைப்புகளின் அழுத்தங்கள் எப்படிப்பட்டவை?
 
நிதியுதவி செய்யும் நாடுகள், அமைப்புகள் ஆகியவற்றுடன் இணக்கமாகப் பேசி அவற்றிடம் இருந்து நிதியைப் பெறும் ஆற்றல் கொண்டவர் என்று ரணிலைப் பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் ஐஎம்எஃப், உலக வங்கி போன்ற அமைப்புகள் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன.
 
அவை என்னென்ன நிபந்தனைகளை விதிக்கின்றன என்று ரணிலோ அல்லது மற்றவர்களோ இதுவரை நாடாளுமன்றத்தில் இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் அவை விதிக்கும் சில நிபந்தனைகள் கடுமையாக இருக்கப் போகின்றன என்பது மட்டும் தெரியவருகிறது.
 
உதாரணமாக அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது முதன்மையான நிபந்தனையாக இருக்கும். தற்போது 24 லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் பொதுமக்கள் மத்தியில் எதிப்பு கூடும்.
 
அதே போல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை சுயேச்சையான நிதிக்குழுவின் உதவியுடன் தயாரித்து அதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதலையும் பெற வேண்டும்.
 
மக்களுக்கான சலுகைகள் அளிப்பதை நிறுத்த வேண்டியிருக்கும். இலவசங்களை வழங்க முடியாது. நஷ்டத்தில் இயங்கும் சில அரசு நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்துவிடும்படி நிதி வழங்கும் அமைப்புகள் வலியுறுத்தும்.
 
எல்லாவற்றுக்கும் மேலாக இன நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஐஎம்எஃப் போன்ற நிதி வழங்கும் அமைப்புகள் வலியுறுத்தும். தனியார், ஏர்லைன்ஸ், மின்சார சபையின் சில பகுதிகளை தனியார் மயமாக்கவும் நிதி வழங்கும் அமைப்புகள் நிபந்தனைகளை விதிக்க வாய்ப்பிருக்கிறது. இது பௌத்த தேசிய வாதிகளைக் கொந்தளிக்க வைக்கும்.
 
புவிசார் அரசியல் அழுத்தத்தை சமாளிக்க முடியுமா?
 
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் காலத்தில் இந்தியா நிதியுதவி செய்து வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறது இந்தியா. தற்போதைய சூழலைப் பயன்படுத்தி இந்த முதலீடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடும்.
 
அதே நேரத்தில் சீனாவும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் முக்கியத் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான போட்டிகளில் ஈடுபடக்கூடும்.
 
பலவீனமான பொருளாதாரச் சூழல் காரணமாக இவ்விரு நாடுகளின் அழுத்தங்களுக்கு இலங்கை பணிய வேண்டியிருக்கும்.
 
போராட்டக்காரர்கள் என்னென்ன சவால்களை அளிப்பார்கள்?
 
கொழும்பு நகரின் காலி முகத்திடலில் தொடங்கிய மக்களின் போராட்டம் முதலில் பிரதமரையும், பிறகு ஜனாதிபதியையும் பதவியில் இருந்து அகற்றும் அளவுக்கு வலிமையானதாக இருந்திருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதுமே, போராட்டத்தைத் தொடரப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துவிட்டார்கள். அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகம் தற்போது போராட்டக்காரர்களின் வசமிருக்கிறது. அதை மீட்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவாலானதாக இருக்கும்.
 
அதே நேரத்தில் காலி முகத்திடலில் அமைந்திருக்கும் பண்டாரநாயக சிலையில் இருந்து 50 மீட்டர் சுற்றளவுக்கு எந்தக் கூட்டத்துக்கும் அனுமதியில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி ரணிலின் நிர்வாகம் போராட்டக்காரர்களை ஒடுக்க முற்படலாம். இது கூடுதலான கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.
 
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற முடியுமா?
 
ரணில் விக்கிரமசிங்கவின் செயல்பாடுகள் அதி புத்திசாலித்தனமானவை என்ற கருத்து இருக்கிறது. அவருடைய நகர்வைப் புரிந்து கொள்பவர்கள் குறைவு என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். நாட்டில் பெரும்பாலும் பௌத்த தேசியவாதம் பேசுபவர்களே அதிகம்.
 
இவையெல்லாம் ஏற்கெனவே தற்போதிருக்கும் அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டதே. அதுவே ரணிலுக்கு இப்போது மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவதற்குப் பெரும் சவாலாக இருக்கும்.
 
தமிழர்களின் ஆதரவு ரணிலுக்குக் கிடைக்குமா?
 
மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் 13-ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழர்கள் கோருகிறார்கள். ஆனால் இதுவரையிலான அரசுகள் அனைத்துமே பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
 
13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தி தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரங்களை வழங்க முயன்றால் அது பௌத்த தேசிய வாதிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அமல்படுத்தவில்லை என்றால் தமிழர்களின் ஆதரவை பெறுவதில் ஒருபடிகூட முன்னேற முடியாது.