வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (00:06 IST)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சீனப் போரால் பிரிந்தது ஏன்?

பூபேஷ் குப்தாவுடன் (இடது ஓரம்), முக்கிய இடதுசாரி தலைவரான அஜய் கோஷ் (வலது ஓரம்)
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தேசிய மாநாடு 1925 டிசம்பர் 26 அன்று கான்பூரில் நடைபெற்றது. இருந்தபோதிலும் இந்த கட்சியின் அடித்தளம் 1920 அக்டோபர் 17 அன்று உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் அமைக்கப்பட்டது. அது அப்போது சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது .
 
இந்த கட்சியின் எழுச்சியில் சர்வதேச அளவிலான கம்யூனிஸ்ட் இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
 
ஒருபுறம் மகாத்மா காந்தி ;வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை 1942 ஆம் ஆண்டில், ஆரம்பித்தார். மறுபுறம், இந்திய கம்யூனிஸ்டுகள் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு உதவ வேண்டும் என்று சோவியத் யூனியன் வேண்டுகோள் விடுத்தது. இவற்றிலிருந்து கம்யூனிஸ்டுகள் இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்தனர்.
 
போரில் செய்த பேருதவி: இந்திய மருத்துவருக்கு சிலை வைத்த சீனா
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு: வரலாற்றை மாற்றிய 11 முழக்கங்கள்
இதன் விளைவாக, அது இந்திய சுதந்திர இயக்கத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில், உலகம் முழுவதும் கம்யூனிச சித்தாந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு , திடீரென மோசமடைந்த சோவியத்-சீனா உறவாகும்.
 
சோவியத் யூனியன் இந்தியாவிடம் நட்புக்கரம் நீட்டியபோது, நேருவின் வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் அது வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும் சில மூத்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தனர்.
 
சோவியத் யூனியனின் இந்த வேண்டுகோளை விரும்பாத, மற்றும் நேருவின் கடுமையான எதிர்ப்பாளர்களும், வழிகாட்டுதலுக்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் சாயத்தொடங்கினர்.
 
மோஹித் சென் சீனாவுக்கு அனுப்பப்பட்டார்
ஆனால் அதற்கு சில ஆண்டுகள் முன்பாக 1950 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் வளர்ந்துவரும் தலைவர் மோஹித் சென்னை சீனாவில் தங்க அனுப்பியது.
 
 
"தலைவர் மாவோவை முதன்முறையாக ஒரு பி.எல்.ஏ(Peoples Liberation Army) மாநாட்டில் பார்த்தோம். அங்கு அவர் உரையாற்றவில்லை. ஆனால் அவரைப் பற்றிய பேச்சு இல்லாத உரை அங்கு நிகழ்த்தப்படவில்லை. எப்போதெல்லாம் அவருடைய பெயர் கூறப்பட்டதோ, மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்," என்று மோஹித் சென் பின்னர் தனது சுயசரிதையான 'எ டிராவலர் அண்ட் தி ரோட்' இல் எழுதினார்.
 
"சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு வரவேற்பில் நாங்கள் அவரை மீண்டும் பார்த்தோம். ஒவ்வொரு பிரதிநிதிக்குழுவும் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. என் முறை வந்தபோது அவர் புன்னகையுடன் என் கையை குலுக்கியவாறு சீன மொழியில் 'இந்து ரென்மின் ஹங் ஹாவ்' என்று கூறினார். அதன் பொருள் ' இந்திய மக்கள் 'மிகவும் நல்லவர்கள் "
 
"அதே மாநாட்டில் சீனத் தலைவர்களான லியு ஷாவோ குய் மற்றும் சூ என் லாய் ஆகியோரையும் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. டெங் சியாவ் பிங் அவர்களும் அங்கு இருந்திருக்கலாம். ஆனால் எங்களிடம் அறிமுகப்படுத்தும் அளவிற்கு அப்போது அவருக்கு அத்தனை முக்கியத்துவம் இருக்கவில்லை."
 
வரைபடங்களுடன் தொடங்கிய சர்ச்சை
மோஹித் சென் சீனாவில் மூன்று ஆண்டுகள் இருந்தார். இந்தோ-சீன போருக்கு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சீனா தனது வரைபடங்களில் வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பெரிய நிலப்பரப்பை தன்னுடையதாக காட்டத் தொடங்கியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடையத்தொடங்கின.
 
பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை தொடர்பு கொண்டு, இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை கெடுப்பதாக கட்சியினரிடையே விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.
 
இது குறித்து கம்யூனிஸ்டுகளின் நலம் விரும்பியான ஃபெரோஸ் காந்தி மற்றும் பேராசிரியர் கே.என்.ராஜ் ஆகியோரிடமும் கிருஷ்ண மேனன் பேசினார்.
 
"கம்யூனிஸ்டுகளின் தலைமை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுடன் வரைபடங்களைப் பற்றி பேசியது. ஆனால் ஒரு பயனும் ஏற்படவில்லை. சில நாட்களுக்குப் பிறகு சீன அரசு தங்கள் வரைபடங்களில் காட்டப்பட்டுள்ள நிலம் எப்போதுமே சீனர்களுக்கு சொந்தமானது.அவர்களிடமிருந்து பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளால் அது பறிக்கப்பட்டது என்று இந்திய அரசிடம் கூறியது,"என்று பித்யுத் சக்ரவர்த்தி தனது ' கம்யூனிசம் இன் இண்டியா' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 
" 1914 இல் ஏற்படுத்தப்பட்ட மக்மோகன் கோட்டை சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் செய்யாது என்று தெரிவித்தது. சீனாவின் இந்த முடிவு கம்யூனிஸ்டுகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து சீன நண்பர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது."
 
நேருவின் கொள்கைகள் மீது தாக்குதல்
இந்த முழு விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று நேரு முடிவு செய்தார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளன, அவை விரைவில் தீர்க்கப்படும் என்பதே அவரது நிலைப்பாடு. இது குறித்து, கம்யூனிஸ்டுகளைத் தவிர, முழு எதிர்க்கட்சியும் நேருவை சாடியது.
 
1959 ஆம் ஆண்டில் சீனத் தலைமை இரண்டாவது ஆச்சரியமான நடவடிக்கையை மேற்கொண்டது.அது நேருவை பகிரங்கமாக தாக்கிப்பேசியது.
 
நேருவின் கொள்கைகளைத் தாக்கி சீன செய்தித்தாள் 'பீப்பிள்ஸ் டெய்லி' பத்திரிகையில் தலையங்கங்கள் எழுதப்பட்டன. இந்த தலையங்கங்களுக்கு தலைவர் மாவோ ஒப்புதல் அளித்ததாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தலையங்கங்கள் "நேரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ மக்களையும், நில உரிமையாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஏகாதிபத்திய சக்திகளை சூழ்ச்சித்திறனுடன் கையாள்கிறார்," என்று எழுதப்பட்டது.
 
இதுவரையிலான சீன நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்டதாக இது இருந்தது.முன்னதாக 1957 ஆம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எழுதிய கடிதத்தில், "காங்கிரஸ் அரசு அனைத்து முற்போக்கான கொள்கைகளையும் கடைப்பிடிக்கும் போது நீங்கள் ஏன் அதை எதிர்த்து அமர்ந்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை" என்று கூட கூறப்பட்டது. . "
 
முன்னதாக 1956 இல் நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவது மாநாட்டில், உலக அமைதி மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக இந்தியாவுடன் ஒரு செயல்தந்திர உடன்படிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் , ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மற்றும் பி.சுந்தரைய்யா , இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
 
பூபேஷ் குப்தாவும் அஜோய் கோஷும் முதலில் ரஷ்யாவிற்கும் பின்னர் சீனாவுக்கும் சென்றனர்
 
ஃப்ரண்ட்லைன் என்ற ஆங்கில இதழின் 2011 டிசம்பர் 16 ஆம் தேதியின் பதிப்பில், 'கம்யூனிஸ்ட் நினைவுகள் என்ற தலைப்பில் ஏ.ஜி. நூரானி ஒரு கட்டுரை எழுதினார்.
 
"சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தால் மன உளைச்சலுக்கு ஆளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது இரு பெரிய தலைவர்களை பூபேஷ் குப்தாமற்றும் அஜோய் கோஷை, குருக்க்ஷேவ், சுஸ்லோவ் மற்றும் பிற சோவியத் தலைவர்களுடன் பேசுவதற்காக மாஸ்கோவிற்கு அனுப்பியது. இது குறித்து சீனர்களிடம் நேரடியாக பேசுமாறு ரஷ்யர்கள் அவர்களிடம் அறிவுறுத்தினர். பின்னர் பூபேஷ் குப்தாவும், அஜோய் கோஷூம் சீனாவுக்குச் சென்றனர். ஆனால் சீனத் தலைவர்களின் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வர அவர்களால் முடியவில்லை."
 
"இந்திய உடைமை நிலத்தில் இருக்கும் எங்கள் முன்னோர்களின் கல்லறைகளைப் பாதுகாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்தியா அல்லது அதன் மக்களின் நட்பை விட எங்கள் முன்னோர்களின் எலும்புகள் மதிப்புமிக்கவை."என்று சீனா அவர்களிடம் கூறியது.
 
 
19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்
சீனாவிலிருந்து திரும்பிய பின்னர், அஜோய் கோஷ் 'ந்யூ ஏஜ்' செய்தித்தாளுக்கு ஒரு நேர்காணலை அளித்தார். "தலைவர் மாவோ நாங்கள் கூறியதை மிகவும் பொறுமையாகக் கேட்டார். இந்திய-சீன உறவுகள் குறித்து கவலைப்படுவது இயற்கையானது என்று அவர் ஒப்புக் கொண்டார்" என்று அதில் அவர் தெரிவித்தார்..
 
"ஆனால் இந்த வேறுபாடுகள் பரஸ்பர புரிந்துணர்வு மூலம் தீர்க்கப்பட வேண்டும். யாங்சிக்யாங் மற்றும் கங்கை நீர் ஓடிக்கொண்டிருக்கும் வரை, இந்திய-சீன நட்பு தொடரும்." என்றும் தங்களிடம் கூறப்பட்டதாக அஜோய் கோஷ் குறிப்பிட்டார்.
 
ஆனால் இந்த நேர்காணல் பிரசுரமான வெள்ளிக்கிழமை, க்வாங்கா கணவாய் அருகே சீன வீரர்கள் பதுங்கியிருந்ததாக செய்தி வந்தது. அந்த மோதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
"இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தங்கள் சீன சகாக்களிடமிருந்து விளக்கம் கோரினர். ஆனால் அங்கிருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த இரத்தக்களறி குறித்து சீனர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கம்பூனிஸ்ட் கட்சித்தலைமை வேண்டுகோள் விடுத்தது," என்று மோஹித் சென் எழுதுகிறார்,
 
ஆனால் ஆக்கிரமிக்கின்ற மற்றும் பிற்போக்குத்தனமான ராணுவத்தின் வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து நாங்கள் எந்த இரங்கலும் தெரிவிக்க மாட்டோம் என்று 
 
சீனா பற்றி கட்சியில் ஆழமான கருத்துவேறுபாடுகள்
இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், இந்தியா-சீனா உறவுகள் தொடர்பாக ஆழமான கருத்துவேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன. சீனாவை பகிரங்கமாக விமர்சிக்க வேண்டாம் என்ற பெரும்பாலான கம்யூனிச தலைவர்களின் நிலைப்பாட்டை ஸ்ரீபாத் அமிர்த் டாங்கே மற்றும் எஸ்.ஜி.சர்தேசாய் ஆகியோர் எதிர்த்தனர்.
 
ஆனால் இந்த விஷயத்தில் சீனாவின் மீது எந்த தவறும் இல்லை என்று சுந்தரைய்யா தலைமையிலான, கட்சியின் செல்வாக்கு மிக்க பிரிவு கருதியது. "சீனாவின் கூற்றுகளில் உண்மை இருக்கிறது என்பதை வரைபடங்கள் மற்றும் பழைய ஆவணங்களின் அடிப்படையில் சுந்தரைய்யா நிரூபிக்க முயன்றார்,"என்று வித்யுத் சக்ரவர்த்தி தனது 'கம்யூனிசம் இன் இண்டியா ' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
"இந்திய கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் இந்திய முதலாளித்வ அரசு, ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவைப் பெற எந்த அளவிற்கும் செல்லும் என்று சுந்தரைய்யா வலியுறுத்தினார். எந்த சூழ்நிலையிலும் நேருவின் பிற்போக்கு அரசுக்கு பின்னால் நாம் நிற்கக்கூடாது. சிபிஐ எப்போதுமே நேருவை எதிர்த்து அவரை அதிகாரத்திலிருந்து நீக்க முயற்சித்தது."
 
"இந்த பிரச்சாரத்தில், அவருக்கு பி.டி.ரணடிவ், எம் பாசவ்புனையா, பிரமோத் தாஸ்குப்தா மற்றும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோரின் ஆதரவு கிடைத்தது. சுந்தரைய்யாவின் வாதங்களை அஜோய் கோஷ் எதிர்த்தார். ராஜேஸ்வர் ராவ், பூபேஷ் குப்தா, எம்.என். கோவிந்தன் நாயர் மற்றும் அச்சுத மேனன் ஆகியோர் அஜோய் கோஷுக்கு ஆதரவாக நின்றனர். "
 
அம்ரித் டாங்கே சீனர்களுக்கு எதிராக பகிரங்கமாக வாதிட்டார்
இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்திய உடனேயே ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது டெல்லியில் வசித்து வந்த ஸ்ரீபாத் அமிர்த் டங்கேவுக்கு இதுகுறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.
 
மோஹித் சென் தனது சுயசரிதை 'எ டிராவலர் அண்ட் தி ரோட்' இல் , "பத்திரிகையாளர் சந்திப்பில், ஈ.எம்.எஸ்ஸிடம் சீனத் தாக்குதல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. சீனர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கருதிய பகுதிக்குள் நுழைந்தனர், தங்களுடையது என்று நினைக்கும் நிலத்தை பாதுகாப்பதில் இந்தியர்கள் ஈடுபட்டனர் என்று அவர் பதிலளித்தார். "
 
"நம்பூதிரிபாட் பதிலளிக்கும் நேரத்தில், அங்கு நுழைந்த டாங்கே கேலியாக அவரிடம், 'இந்த நிலத்தைப் பற்றி உங்கள் சொந்த கருத்து என்ன? என்று கேட்டார். ஈ.எம்.எஸ் எந்த பதிலும் அளிப்பதற்கு முன்பு, டாங்கே ' சீனா இந்தியா மீது தாக்குதல் தொடுத்தது மட்டுமல்லாமல் நிலத்தையும் கைப்பற்றியுள்ளது. நாட்டைப் பாதுகாக்க நேரு விடுத்த வேண்டுகோள் மற்றும், சீனர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படவேண்டும் என்பதையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கிறார்கள்' என்று கூறினார். அவரது இந்த அறிக்கை கம்யூனிஸ்டுகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "
 
சீனாவை எதிர்த்த சோவியத் கம்யூனிஸ்டுகள்
 
டாங்கே இத்துடன் நிற்கவில்லை. அவர் மாஸ்கோவிற்கும் உலகின் பிற நாடுகளுக்கும் சென்று சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலகின் பிற கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேசினார். சீனாவின் தலைமையை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவுக்கு ஆதரவாக நிற்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்.
 
அதற்கு பதிலளித்த சீனா, அனைத்து 'உண்மையான கம்யூனிஸ்டுகளையும்' நேருவின் அரசை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதை அகற்ற உதவுமாறும் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் டாங்கேவின் நடவடிக்கை ஆதரிக்கப்பட்டது.
 
ஆனால் சுந்தரைய்யா, பிரமோத் தாஸ்குப்தா, ரணதிவே உள்ளிட்ட சில தலைவர்கள் இந்த திட்டத்தை எதிர்த்தனர். இந்த குழுக்களில் ஒன்று நடுநிலையானது. கட்சி, சீன கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பதையோ அல்லது விமர்சிப்பதையோ அக்குழு விரும்பவில்லை.
 
அந்தக்குழுவினருக்கு, பூபேஷ் குப்தா மற்றும் நம்பூதிரிபாட் ஆகியோரின் ஆதரவு இருந்தது. கோபால் பானர்ஜி, டாங்கேயின் வாழ்க்கை வரலாற்றில், "சோவியத் செய்தி முகமையான 'டாஸ்'ல் வெளியான தலையங்கம், சீனர்களை கடுமையாக விமர்சித்ததோடு கூடவே, நேருவை பாராட்டியபோது டாங்கேயின் நிலைப்பாடு வலுப்பெற்றது. இதனுடன், இந்திய பிராந்தியத்திலிருந்து சீன ராணுவம் வெளியேறவேண்டும் எனக்கூறப்பட்டது," என்று எழுதியுள்ளார்.
 
"குருக்‌ஷேவ், சீனத் தலைவர்களான மாவோ மற்றும் சூ என் லாயைத் தொடர்பு கொண்டு, சீனப் படைகள் இந்தியப் பிரதேசத்திலிருந்து விலகவில்லை என்றால், தான் சீனாவுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்திவிடப்போவதாக மிரட்டினார். சோவியத் அச்சுறுத்தலால் தான் சீனா, ஒருதரப்பான போர்நிறுத்தத்தை அறிவித்தது." என்றும் அந்தப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
சீனாவின் ஆலோசனையின் பேரில் கட்சியில் பிளவு
டாங்கேயின் நிலைப்பாட்டை ஏற்காத சில தலைவர்கள் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். இந்தியாவைத் தாக்கி சீனா எந்த தவறும் செய்யவில்லை என்ற தனது கருத்தில் அது உறுதியாக இருந்தது.
 
"சீன தாக்குதலின் விளைவுகளில் ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதி அடிப்படைவாதத்திலிருந்து தேசியவாதத்திற்கு நகர்ந்ததாகும். மற்ற பிரிவு அடிப்படைவாத சித்தாந்தத்தை கைவிடவில்லை. கூடவே கட்சியில் 'முதலாளித்துவ தேசியவாதத்தின்' பிரதிநிதிகளை தொடர்ந்து தீவிரமாக எதிர்த்தது," என்று ஏ.ஜி. நூரானி எழுதியுள்ளார்.
 
கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான ஹரேகிருஷ்ண கோனார் ,சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை சந்திக்க சீனா சென்றார். கட்சியை பிரிக்குமாறு சீனர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். மாவோவை மேற்கோள் காட்டி, 'ஒன்று இரண்டாக மாற முடியும். ஆனால் இரண்டு ஒருபோதும் ஒன்றாக ஆக முடியாது." என்று அவர்கள் கூறினர்.
 
1964 ஆம் ஆண்டில் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் பெரும்பாலான தலைவர்கள் அதில் இணைந்தனர். ஆந்திராவில் சுமார் பாதி பேர் சிபிஎம் உடன் சேர்ந்தனர்.
 
பூபேஷ் குப்தா, நம்பூதிரிபாட் போன்ற இரு தரப்பிலும் உள்ள சில தலைவர்கள் பிளவை விரும்பவில்லை. கருத்தியல் ரீதியாக நம்பூதிரிபாட் பிளவிற்கு எதிரானவர். ஆனால் டாங்கேயுடனான அவரது பகை அவரை மற்ற கட்சிக்கு அழைத்துச் சென்றது.
 
நம்பூதிரிபாட் முதலமைச்சராகப் பதவியேற்கும் காட்சி
 
ஏ.கே.கோபாலனின் சித்தாந்தம் தேசியவாதமானது. அப்படி இருந்தபோதிலும், அவர் தனது தலைவரான நம்பூதிரிபாட் சென்ற அதே கட்சியைத் தேர்ந்தெடுத்தார்.
 
மறுபுறம், டெங் சியாவோ பிங்கின் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, மாவோ எடுத்த பல முடிவுகளை தலைகீழாக மாற்றியது. ஆனால் இந்தியாவுடனான மோதல் தொடர்பான அதன் அதிகாரபூர்வ நிலைப்பாடு மாவோ காலத்தைப்போலவே தொடர்ந்தது. 'இந்தியாவுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட வேண்டும்' என்பதுதான் அது.