செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (13:11 IST)

சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை - டிரம்ப் திட்டம்

சீனாவின் கம்யூனிஸ் கட்சி உறுப்பினர்கள் மீது பயணத் தடை விதிக்கும் அமெரிக்காவின் திட்டம் "மோசமான ஒன்று" என சீனா தெரிவித்துள்ளது. இருநாட்டு உறவிலும் உரசல்கள் அதிகரித்து வரும் நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.

முன்னதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், டிரம்ப் அரசு இந்த பயணத் தடை குறித்து யோசித்து வருகிறது என்றும், ஆனால் அது சட்ட வரைவாகவே உள்ளது என்றும், அது நிராகரிக்கப்படலாம் என்றும் செய்தி வெளியானது.
 
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் 92 மில்லியன் (9.2 கோடி) உறுப்பினர்கள் உள்ளனர் எனவே தடை விதித்தால் அது எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது  தெரியவில்லை.
 
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாட்டு உறவிலும் பல்வேறு காரணங்களால் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
 
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹாங் காங்கிற்கு வழங்கப்பட்ட முன்னுரிமை வர்த்தக நிலையை ரத்து செய்தார். ஹாங் காங்கின் சுயாட்சி அதிகாரம் பெற்ற நீதியமைப்பை பாதிக்கும் வகையில் சீனா கொண்டு வந்த பாதுகாப்புச் சட்டத்திற்கு, பதில் நடவடிக்கை இது என்று கூறப்பட்டது.
 
மேலும் சீனா கொரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்தும், தென் சீனக் கடலில் ராணுவக் கட்டமைப்பு, சீனா சிறுபான்மை முஸ்லிம்களை நடத்தும் விதம், அதீத வர்த்தக உபரிகள் ஆகியவை தொடர்பாக சீனா மீது டிரம்ப் விமர்சனங்களை வைத்து வருகிறார்.
 
தடை ஏற்படுமா? எவ்வாறு செயல்படும்?
 
இந்தத் தடை சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும். மேலும் அமெரிக்காவில் ஏற்கனவே வசிக்கும் சிலரை வெளியேற்றலாம் என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதே சமயம் இந்தத் திட்டம் இறுதி கட்டத்தை எட்டவில்லை எனவே டிரம்ப் இதனை ரத்து செய்யலாம் எனவும் அந்த பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. மேலும் இது குறித்து வெள்ளை மாளிகை மற்றும் வெளியுறவுத் துறை, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்றும் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த தடையை அமலுக்கு கொண்டுவர அமெரிக்காவிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், கடந்த வருடம் மூன்று மில்லியன் சீனர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தற்போது கடந்த 14 நாட்களில் சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சில விலக்குகளும் உள்ளன.
 
சீனா எவ்வாறு செயலாற்றும்?
 
சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங்கிடம் டிரம்பின் நிர்வாகம், கட்சி உறுப்பினர்கள் மீது முழுத் தடை விதிக்க திட்டமிட்டு வருவது குறித்து கேட்டபோது, அது "உண்மையாக இருந்தால், மிகவும் மோசமானது என நான் நினைக்கிறேன்," என தெரிவித்தார்.

மேலும், "அமெரிக்காவை சேர்ந்த சிலர் சீனாவை ஒடுக்கப்பார்க்கின்றனர். ஒரு சுதந்திர இறையாண்மை நாடாக சீனா அதை தடுக்கும். அதற்கு பதில்  நடவடிக்கையில் ஈடுபடும்." என அவர் தெரிவித்தார்.
 
இந்த பயணத் தடை அமலுக்கு வந்தால் அது நிச்சயம் சீனாவுக்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களை பாதிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிதான் சீனாவின் ஒரே கட்சி. இது நாட்டின் உயர்மட்ட நிர்வாகம் முதல், கீழ் மட்ட நிர்வாகம் வரை கட்டுப்படுத்துகிறது.
 
மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் கட்சியின் உறுப்பினர்கள். தங்களது துறையில் முன்னேற வேண்டுமானால், அது அரசியலாக இருந்தாலும், வர்த்தகம் மற்றும்  பொழுதுபோக்காக இருந்தாலும் சரி கட்சியின் விசுவாசமிக்க உறுப்பினராக இருப்பது அவசியம்.
 
இது இணைய வர்த்தக பெரு நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் அலிபாபா, ஹூவாவேயின் நிறுவனர் ரென் ஷெங்ஃபெய் அல்லது நடிகை ஃபான் பிங்பிங்  அனைவருக்கும் பொருந்தும்.
 
சீன - அமெரிக்கா இடையே உள்ள மேலும் பல சிக்கல்கள்?
 
ஷின் ஜியாங்கில் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான சீன அரசியல்வாதிகள் மீது கடந்த வாரம் டிரம்ப் நிர்வாகம்  தடை விதித்தது.
 
இதுகுறித்து பேசிய ஹுவா ஷின், ஜியாங்கில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் நடக்கிறதா என்பதை அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ வந்து  பார்வையிடலாம் என தெரிவித்தார்.
 
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்ட வர்த்தக போருக்கு பிறகு இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் நிலையை சீனா  கடைப்பிடிக்கும் என ஹுவா தெரிவித்தார்.
 
சீனா கொரோனா தொற்றை கையாண்ட விதத்தால் இந்த ஒப்பந்தம் இரண்டாம் நிலையை அடைவது சந்தேகமே என இந்த வாரம் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
 
தென் சீனக் கடலின் சீனா ராணுவத்தை அதிகரிப்பது குறித்து டிரம்பின் நிர்வாகம் விமர்சித்து வருகிறது. மேலும் சீனா தனது அண்டை நாடுகளிடம் மோதல்  போக்கை கடைப்பிடிக்கிறது என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
 
இதற்கிடையில் இந்த விவகாரம் தடை விதித்தால் அதுகுறித்து அச்சப்பட போவதில்லை என சீனா தெரிவித்திருந்தது. மேலும் அமெரிக்கா அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது என்றும் சீனா தெரிவிக்கிறது.