வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஜூலை 2018 (12:10 IST)

வாட்ஸ் ஆப் படுகொலைகளை இந்தியாவில் தடுப்பது யார்?

வாட்ஸ் அப்பில் வேகமாக பரவும் சில செய்திகள் படுகொலைக்கு காரணமாகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்திய அரசு இதனை தடுக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும்படி வாட்ஸ் அப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது.




இந்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம், ''பொறுப்பற்ற செய்தி' வேகமாக பரவுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் இந்த விஷயத்தில் அதற்குள்ள கடமை, பொறுப்பிலிருந்து விலகி விட முடியாது என்றும் இந்திய அரசு கூறி உள்ளது.

ஏன் அரசு இவ்வாறாக வலியுறுத்தி உள்ளது, நடைமுறையில் இது சாத்தியமா என்று பிபிசி-யின் ஆயிஷா பெரெரா இங்கு விளக்குகிறார்.

ஏன் அரசு இவ்வாறாக கேட்டுக் கொண்டுள்ளது?

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு கும்பல்களால் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்திய ஊடகங்கள் இந்த எண்ணிக்கை அதிகம் என்கின்றன.

குழந்தை கடத்துபவர்கள் என்று வாட்ஸ் ஆப்பில் பரவிய வதந்திதான் வன்முறைக்கு வித்திட்டது. படுகொலைகளுக்கும் காரணமாக அமைந்தது. பெரும்பாலும் இதில் கொல்லப்பட்டவர்கள் வெளியூர்காரர்கள். அந்த மண்ணின் மொழி தெரியாத அந்நியர்கள்.

இந்த புரளியானது முதலில் இந்தியாவின் தென்பகுதியில்தான் தொடங்கியது. அது நாடு முழுவதும் வேகமாகப் பரவியது. இந்த படுகொலையில் பங்கெடுத்தவர்கள் என்று குறைந்தது 20 பேர் மேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்தில் பரவும் இந்த வதந்திகளை தடுப்பது கடினம் என்கிறது காவல் துறை.


இதில் விசித்திரம் என்னவென்றால் வதந்திகளுக்கு எதிராக பிரசாரம் செய்ய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஏன் நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்கிறது?

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. அச்சம் தருவதாகவும் உள்ளது.

இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான கைபேசி இணைப்புகள் உள்ளன. லட்சகணக்கான மக்கள் குறுகிய காலத்தில் இணைய சேவையை பெறுகின்றனர் என்கிறது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

பிபிசி-க்கு முன்பு அளித்த நேர்காணல் ஒன்றில் உண்மையை சரிபார்க்கும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் பிரதிக் சின்ஹா, "தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக எல்லோருக்கும் அதிகமான தகவல் வந்து குவிகிறது. குறிப்பாக கிராம பகுதியில் வசிக்கும் மக்களிடம் தகவல் குவியும் போது அவர்களால் உண்மை எது பொய் எது என்று பகுபாய்வு செய்ய முடிவதில்லை. தங்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் உண்மை என்று அவர்கள் கருதுகிறார்கள்" என்கிறார்.



வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரிய சந்தை. ஏறத்தாழ 20 கோடி பயனாளிகள் அந்த நிறுவனத்திற்கு இங்கு இருக்கிறார்கள். வாட்ஸ் ஆப் செய்திகளை பரப்ப மட்டும் பயன்படவில்லை. சில சமயம் அது கும்பல்களை சேர்க்கவும் பயன்படுகிறது.

தங்கள் மொபைலில் தங்களுக்காகவே இருக்கும் தனிப்பட்ட ஆப் என்பதால், மக்கள் இதனை ஆழமாக நம்புகிறார்கள். அதாவது இதில் வரும் செய்திகள் அனைத்தையும் உண்மை என்று கருதுகிறார்கள். அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்துதான் வாட்ஸ் ஆப்பில் செய்தி வருகிறது. இதன் காரணமாக, இந்த செய்தியினை சரிபார்க்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை.

இந்த நிலைமை மோசமாக ஆகும் என்கிறார் தொழிற்நுட்ப ஆய்வாளர் பிரசாந்தோ கே ராய். இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 கோடி அளவுக்கு உயரும். அதில் பெரும்பான்மையானவர்கள் குறைந்த அளவு படிப்பறிவு கொண்டவர்கள். அவர்கள் பெரும்பாலும் இசை மற்றும் காணொளியைதான் அதிகம் நுகர்வார்கள் என்கிறார் அவர்.

"காணொளிகள் மூலமாகதான் சுலபமாக பொய் செய்திகள் பரவுகின்றன. உதாரணத்திற்கு, ஏதேனும் பழைய கலவர வீடியோவை எடுத்துக் கொள்ளுங்கள், அதனை புது வீடியோ அதாவது அண்மையில் ஏற்பட்ட கலவரம் என்று பரப்புங்கள். சில நிமிடங்களில், அது வைரலாக பரவும்" என்கிறார் பிரசாந்தோ கே ராய்

தொழில் நுட்பமே நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

வாட்ஸ் அப் மறையாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, அதன் மெடா டேட்டா, அந்த குறுஞ்செய்தி யாரால் எப்போது உருவாக்கப்பட்டது என்று கண்டறிவது கடினம் என்கிறார் ராய்.


"செய்தியை அனுப்புபவர்கள் மற்றும் பெறுபவர்கள் மட்டும்தான் செய்தியை பார்க்க, படிக்க முடியும். வாட்ஸ் அப் நிறுவனத்தால் கூட அது என்ன செய்தி என்று படிக்க முடியாது," என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறுகிறது,

ஆனால் சீனாவில் பயன்படுத்தப்படும் வீசேட் மறையாக்கம் செய்யப்படவில்லை. அந்த நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே அது வடிவமைக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தால் வீ சேட்டில் பகிரப்படும் செய்திகளை கண்காணிக்க முடியும். இந்தியாவிலும் சிக்னல், டெலிகிராம் போன்ற ஆப்கள் உண்டு. ஆனால், அதனை பெரும்பான்மையான இந்தியர்கள் பயன்படுத்துவதில்லை.

வாட்ஸ் ஆப் என்ன சொல்கிறது?

வாட்ஸ் ஆப் நிறுவனம் அரசாங்கத்திடம் "அண்மையை வன்முறை சம்பவங்கள் தங்களை திடுக்கிடச் செய்தது" என்று கூறி உள்ளது. இதனை எதிர்கொள்ள அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம்" என அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்கிறது.

ஆனால் அதே நேரம் மறையாகத்தில் மாற்றம் கொண்டுவர வாட்ஸ் மறுத்துவிட்டது. இயற்கையாக மக்கள் பயன்படுத்தும் பாங்கிலேயே வாட்ஸ் ஆப் வெகு அந்தரங்கமானது என்கிறது அந்த நிறுவனம்.

புரளிகள் தொடர்பான பிரசாரத்தை மேற்கொள்ள வாட்ஸ் ஆப் திட்டமிட்டுள்ளது. மேலும், அது உள்ளூர் குழுக்களுடன் இணைந்து இது தொடர்பாக பணியாற்றி வருகிறது.

இது போதுமானதா?

வாட்ஸ் ஆப் போன்ற தளங்கள் பேச்சு சுதந்திரத்திற்கானவை. மேலும் அவை கட்டுப்படுத்தப்படக்கூடாதுதான். ஆனால் அதற்காக இம்மாதிரியான சூழ்நிலையில் அவர்களுக்கு பொறுப்பில்லை என்று அர்த்தமில்லை. என்கிறார் மீடியாநாமா என்ற வலைதளத்தின் நிறுவனர் நிக்கில் பாவா.


நடைமுறை சாத்தியமான பல்வேறு நடவடிக்கைகளை வாட்சாப் மேற்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, அனைத்து செய்திகளையும் தனிப்பட்ட செய்திகளாக கருதலாம். அதன் மூலம் அந்த செய்தியை பிறர் காப்பி பேஸ்டோ அல்லது ஃபார்வடோ செய்ய முடியாது.

"ஃபார்வேட் செய்யப்படும் செய்திகள் அனைவருக்குமான செய்தியாக ஆக்கப்பட்டு அதற்கான அடையாளம் உருவாக்கப்பட்டு அது பின் கண்டறியப்பட வேண்டும்" என்கிறார் அவர்.

மேலும் ஆட்சேபனைமிக்க கருத்துக்கள் குறித்து பயன்பாட்டாளர்கள் புகார் அளிக்க வேண்டும் என்றும், முதன்முறை பயன்பாட்டாளர்கள் வாட்சப் பயன்பாடு குறித்து வீடியோ ஒன்றை பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.


"அரசியல் கட்சிகள், குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக வாட்சாப் பயன்படுத்துதல் குறித்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அதிகாரபூர்வமற்ற தகவல்களை பரப்புவதில்லை என அரசியல் கட்சிகள் உறுதியேற்க வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்துகிறார்.