உலக சுகாதார அமைப்பு (WHO) காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளது.
காஸாவின் வடக்கில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில்தான் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. இதனால் இந்த மருத்துவமனை கடந்த சில நாட்களாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தீவிரமான தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸும் அல்-ஷிஃபா மருத்துவமனையும் மறுத்துள்ளன.
இஸ்ரேல், ஹமாஸ், காஸா, அல் ஷிஃபா மருத்துவமனைபட மூலாதாரம்,GETTY IMAGES
உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர், சுமார் 600 பேர் மருத்துவமனையில் தங்கியுள்ளனர், மற்றவர்கள் அதன் பிற அறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர், என்றார்.
"மருத்துவமனையைச் சுற்றியும் சடலங்கள் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தவோ, புதைக்கவோ அல்லது பிணவறைக்கு எடுத்துச் செல்லவோ முடியாத சூழ்நிலை உள்ளது," என்று அவர் கூறினார். "மருத்துவமனை வேலை செய்யவில்லை. இது கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டது," என்று லிண்டெமியர் கூறினார்.
மருத்துவமனையில் சடலங்கள் குவிந்து அழுகிப்போகத் துவங்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அழுகிய உடல்களைப் புதைப்பதறகாக மருத்துவமனையை விட்டு வெளியேற இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்காததால், நாய்கள் இப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து சடலங்களை உண்ணத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் மொஹமட் அபு செல்மியா பிபிசியிடம் தெரிவித்தார்.
மின்தடை காரணமாக இன்க்யுபேட்டர்களில் வைக்கப்பட முடியாமல் இருக்கும் டஜன் கணக்கான குறைமாத குழந்தைகளின் நிலை குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. அவற்றில் ஏழு குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டதாக செல்மியா கூறினார்.
மின்தடையால் இன்க்யுபேட்டரிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தைகள்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த ஆலோசகர் மார்க் ரெகெவ், குழந்தைகளை வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் நடைமுறை தீர்வுகளை வழங்குவதாகவும், ஆனால் ஹமாஸ் அதனை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
கடந்த அக்டோபர் 7-ஆம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல் நடத்திவருகிறது. அப்போதிருந்து அல்-ஷிஃபாவைத் தவிர, காஸா பகுதி முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடை உள்ளிட்ட பரவலான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.
நோயாளிகளை வெளியேற்ற உதவ இஸ்ரேலிய ராணுவம் இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை
மருத்துவர் மொஹமட் அபு செல்மியா, அல்-ஷிஃபா மருத்துவமனையிலுள்ள மோசமான நிலைமை குறித்து பிபிசியிடம் கூறுகையில், அங்கு சமீபத்திய நாட்களில் 32 பேர் இறந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவர்களில் மூன்று குறைமாத குழந்தைகள் மற்றும் 7 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்தனர் என்று அவர் கூறினார். டயாலிசிஸ் தேவைப்படும் இன்னும் பல நோயாளிகள் சிகிச்சை கிடைக்காததால் அடுத்த இரண்டு நாட்களில் இறக்கும் அபாயம் உள்ளது, என்றார்.
நோயாளிகள் அல்லது குறைமாதக் குழந்தைகளை வெளியேற்றுவது தொடர்பாக இஸ்ரேலிய இராணுவம் ஏதேனும் தெரிவித்ததா என்று அபு செல்மியாவிடம் பிபிசி கேட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை என்றார். “அதற்கு பதிலாக நாங்கள் அவர்களை அணுகினோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. குறைமாத குழந்தைகளை வெளியேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை," என்றார்.
மருத்துவமனையில் சடலங்கள் குவிந்து அழுகிப்போகத் துவங்கியுள்ள
மேலும் பேசிய மருத்துவர் அபு செல்மியா, அவர் மருத்துவமனையின் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அங்கு கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முயற்சித்து வருவதாகக் கூறினார். சுமார் 150 சடலங்கள் மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறினார்.
ஆனால் தற்போது அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனைக்குள் வந்த நாய்கள் பிணங்களை உண்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நோயாளிகளை வெளியேற்ற உதவ இஸ்ரேலிய ராணுவம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவர் மீண்டும் கோரிக்கை வைத்தார். "எந்த நோயாளியும் இறக்கக் கூடாது. அவர்கள் உயிர் பிழைக்க வேண்டும், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சேவையைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
அல் ஷிஃபா மருத்துவமனையின் நிலைமை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
"மருத்துவமனையின் மீது குறைவான தாக்குதல் நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் இஸ்ரேலியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
இதற்கு முன் அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித்தொடர்பாளரான மேத்யூ மில்லர் அமெரிக்கா பொதுமக்கள் தாக்குதலில் சிக்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டுத் தளங்களாகப் பயன்படுத்திவரும் மருத்துவமனைகளை உடனடியாகக் காலி செய்வதைப் பார்க்க விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
"ஹமாஸ் வைத்திருக்கும் எரிபொருள் இருப்புகளில் ஒரு பகுதியை எடுத்து, வடக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.