வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 மே 2023 (22:24 IST)

அரசர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா எப்போது?

charles
பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா வரும் சனிக்கிழமை (6.5.2023) அன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது.
 
இவ்விழாவில் மனைவி கமீலாவுடன் பங்கேற்கும் அரசருக்கு முடிசூட்டப்படும். இந்த விழாவிற்கு 'Operation Golden Orb' என பெயரிடப்பட்டுள்ளது.
 
எத்தனை மணிக்கு முடிசூட்டு நிகழ்ச்சி நடைபெறும்?
 
முடிசூட்டு விழா சரியாக 11:00 மணிக்கு தொடங்குகிறது. அதற்கு சிறிது நேரம் முன்பாகவே அரசர் சார்ல்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
முடிசூட்டுதல் என்றால் என்ன?
 
அரசரின் தலையில் கிரீடம் சூட்டப்படும் ஒரு மதம் சார்ந்த வழக்கமான நிகழ்ச்சியே முடிசூட்டுதல் எனப்படுகிறது.
 
விளம்பரம்
 
அது இங்கிலாந்து திருச்சபையின் தலைவர் என்ற அங்கீகாரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதுடன், இந்த உரிமை மற்றும் அதிகாரங்களை அரசருக்கு மாற்றும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.
 
இருப்பினும், அரசர் பதவியில் இருப்பதற்கு கண்டிப்பாக கிரீடம் சூட்டப்பட வேண்டும் என எந்தத் தேவையும் இல்லை.
 
அரசர் எட்டாம் எட்வர்ட் முடிசூட்டிக்கொள்ளாமலேயே ஆட்சி செய்தார். சார்ல்ஸைப் பொறுத்தளவில், அரசி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த அடுத்த வினாடியில் இயல்பாகவே அவர் அரசராகிவிட்டார்.
 
இதற்கிடையே இந்த முடிசூட்டு விழாவை முன்னிட்டு 8ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முடிசூட்டு விழாவை மக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.
 
மேலும் விண்ட்சர் கோட்டையில் 7-ம் தேதி 20,000 பார்வையாளர்களைக் கொண்ட மாபெரும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இங்கிலாந்தில் உள்ள பப்கள், பொழுதுபோக்கு விடுதிகள் மற்றும் பார்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று கூடுதலாக இரண்டு மணிநேரம் திறந்திருக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை வடிவமைத்து நடத்துமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
முடிசூட்டு விழாவுக்கு பிரிட்டன் அரசு அறிவித்துள்ள பிரத்யேக சின்னம்
 
முடிசூட்டு விழா என்பது அரசு விழா. இந்த விழாவில் யாரெல்லாம் பங்கேற்கவேண்டும் என்பதை அரசு தான் முடிவெடுக்கிறது.
 
அரச குடும்பத்தைத் தவிர்த்து இந்த விழாவுக்கு பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறைத் தலைவர்கள், உலகம் முழுவதும் உள்ள அரச குடும்பத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவில் வசிக்கும் இளவரசர் ஹாரி இந்த விழாவில் பங்கேற்கப் போவதாகவும், அவரது மனைவி பங்கேற்க மாட்டார் என்றும் கூறியுள்ளார்.
 
இளவரசர் ஹாரி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட தனது சுயசரிதை சர்ச்சைக்கு வித்திட்ட நிலையில், அதன் பின் தற்போது தான் அரச குடும்பத்துடன் அவர் பொதுவெளிக்கு முதன்முதலாக வரவிருக்கிறார்.
 
முடிசூட்டு விழா நடைபெறும் நாள் நாள் இளவரசர் ஹாரியின் மகனும், இளவரசருமான ஆர்ச்சியின் நான்காவது பிறந்த நாள். அந்த நாளில் அவர் தனது தாயுடன் அமெரிக்காவில் தான் இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
இருப்பினும், இளவரசர் ஆணட்ரூ, இந்த முடிசூட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அரசரின் மனைவி கமீலாவின் பேரக்குழந்தைகள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ள நிலையில், அரசர் சார்ல்ஸின் பேரன் இளவரசர் ஜார்ஜ் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இவ்விழாவில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக அவருடைய மனைவி ஜில் பைடன் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளார்.
 
இது மட்டுமின்றி பொதுமக்களுக்கு சேவை புரிந்த பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த 850 பிரதிநிதிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
 
முடிசூட்டு விழாவில் பங்கேற்கபவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்
பட மூலாதாரம்,BUCKINGHAM PALACE
படக்குறிப்பு,
முடிசூட்டு விழாவுக்கான அழைப்பிதழ்
 
முடிசூட்டு விழாவில் என்ன நடக்கும்?
முடிசூட்டு விழா என்பது கடந்த 1,000 ஆண்டுகளாக ஒரே மாதிரி தான் நடத்தப்பட்டுவருகிறது. ஐரோப்பாவில், பிரிட்டனில் மட்டும் தான் இது போன்ற முடிசூட்டு விழா நடத்தப்படுகிறது.
 
இதற்கிடையே, கடந்த 1953-ம் ஆண்டு அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு நடைபெற்ற முடிசூட்டு விழாவை விட சிறிய நிகழ்ச்சியாகவும், மிகக்குறைந்த நேரமே நடைபெறும் நிகழ்வாகவும் இந்த விழா இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முடிசூட்டு விழா ஊர்வலமும் சிறிய அளவிலேயே நடத்தப்படவுள்ளது. அரசி எலிசபெத்தின் முடிசூட்டு விழாவின் போது சுமார் 16,000 பேர் பங்கேற்ற ஊர்வலம் 45 நிமிடங்களில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.
 
இந்த முறை அரசரும், அவரது மனைவியும் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய ரதத்தில் தான் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்குச் செல்கின்றனர். இந்த ரதத்தில் குளிர்சாதன வசதியும், மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்களும் இருக்கின்றன.
 
2014-ம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட வைரவிழா ரதத்தில் விழாவுக்குச் செல்லும் அரசர் பின்னர், கடந்த 1830-ம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு முடிசூட்டு விழாவுக்கும் பயன்படுத்தப்படும் தங்க ரதத்தில் பக்கிங்ஹாம் அரண்மனைக்குத் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆயுதமேந்திய 6,000 ராணுவ வீரர்கள் பங்கேற்கும் ஒரு மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் நாடுகளில் இருந்து வரும் ஏராளமான ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.
 
ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினரும் இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டள்ள நிலையில், அவர்கள் பங்கிங்ஹாம் கோட்டையிலிருந்து இந்த அணிவகுப்பை கண்டு ரசிப்பார்கள்.
 
 
700 ஆண்டு கால பழமையான இருக்கையின் பின்னால் நின்றுகொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப், அரசரை அங்கீகரித்து ஒரு அறிவிப்பை வெளியிடுவார். அப்போது, "God Save the King!" என அனைவரும் முழக்கங்களை எழுப்புவார்கள். ராணுவ இசை மற்றும் வாத்திய கருவிகள் முழங்கும்.
 
பின்னர் அரசர் அந்த இருக்கையில் அமரவைக்கப்பட்டு அவரது வழக்கமான ஆடைகள் அகற்றப்படும். அப்போது பார்வையாளர்களிடம் இருந்து தங்கஇழைகளால் தயாரிக்கப்பட்ட திரைமூலம் அவரை மறைத்து, அவரது தலை, உடல் பகுதியில் புனித எண்ணெய் தேய்த்துவிடுவார். அரசருக்கென்றே சிறப்பாகத் தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் எந்தப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அம்பர்கிரீஸ், ஆரஞ்சு மலர்கள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பொருட்கள் அடங்கியுள்ளன. மேலும், விலங்குகளிடம் இருந்து பெறப்பட்ட எந்தப் பொருளும் இந்த எண்ணெயில் இல்லை.
 
பதவியில் அமர்த்தும் சடங்கு:
 
பின்னர் அரசரிடம் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அளிக்கப்பட்டு, அரசு அதிகாரங்களை அளிக்கும் செங்கோல் வழங்கப்படும். பின்னர் நியாயம், இரக்கம் போன்ற உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தால் உருவாக்கப்பட்ட வாத்து ஒன்றும் அளிக்கப்படும். அதன் பின் இறுதியாக அரசரின் தலையில் ஆர்ச் பிஷப் புனித எட்வர்ட்டின் கிரீடத்தைச் சூட்டுவார்.
 
அரியணை ஏற்றுதல்:
 
பின்னர் முடிசூட்டும் இருக்கையிலிருந்து எழுந்து அரியணையை நோக்கி அரசர் செல்வார். அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அரியணையில் அமரவைக்கப்படுவார். பின்னர் இதே போல் அரசரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்படும்.
 
முடிசூட்டு விழாவில் எந்த கிரீடங்கள் பயன்படுத்தப்படும்?
17ஆம் நூற்றாண்டில் பயன்டுத்தப்பட்ட புனித எட்வர்டின் தங்க கிரீடம் அரசருக்கு அணிவிக்கப்படும். எடை அதிகமுள்ள இந்த கிரீடம், முடிசூட்டும் போது மட்டுமே பயன்படுத்தப்படும்.
 
 
அரச குடும்பத்தினர் பயன்படுத்தும் சில விலைமதிப்பில்லாத அணிகலன்கள் மற்றும் வைர கற்கள் எப்படி அக்குடும்பத்துக்குக் கிடைத்தன என்பது குறித்த விவாதம் அரசி எலிசபெத் மரணத்துக்குப் பின் மீண்டும் சூடு பிடித்தன. இரண்டு கிரீடங்களில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் குறித்தே இந்த விவாதத்தில் பெரிதும் பேசப்பட்டது.
 
அந்த கிரீடங்களில் ஒன்று பிரிட்டன் பேரரசுக்குச் சொந்தமானது. இந்த கிரீடத்தைத் தான் முடிசூட்டு விழா முடியும் வரை அரசர் சார்ல்ஸ் அணிந்திருப்பார். மேலும் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் தோன்றும் போதும் அணிந்திருப்பார். இதில் பதிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய ஒரு வைரக்கல் ஏழாம் எட்வர்டின் 65-வது பிறந்த நாளில் தற்போதைய தென்னாப்பிரிக்கா அப்போது வழங்கிய வைரமாகும்.
 
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மற்றொரு வைரக்கல், கோஹினூர் வைரக்கல்லாகும். உலகிலேயே அதிக விலைமதிக்கத்தக்க வைரக்கற்களில் ஒன்றான இந்த கல் எங்களுக்குச் சொந்தமானது என இந்தியா, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகள் உரிமை கோரி வருகின்றன.
 
இந்நிலையில், தற்போதைய முடிசூட்டு விழாவில் கோஹினூர் வைரக்கல் பயன்படுத்தப்படாது என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசரின் மனைவி கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் அணிவிக்கப்படும் என்றும் இது லண்டன் டவரிலிருந்து தற்போது எடுக்கப்பட்டு இந்த முடிசூட்டு விழாவுக்கு ஏற்றாற் போல் அளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
முடிசூட்டு விழாவுக்கு என்ன செலவாகும்?
 
இது ஒரு அரசு விழா என்பதால் இதற்காகும் செலவுகள் அனைத்தையும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசே ஏற்கும்.
 
ஏற்கெனவே பிரிட்டனில் கடும் பொருளாதார நெருக்கடிகள் நிலவும் நிலையில், உலக அரங்கில் பிரிட்டனின் கௌரவத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இதை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.