வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (23:12 IST)

செளதி, இரான் இடையிலான நெருக்கம் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

Jaishankar
பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவுகள். இந்தியாவில் ஆட்சி மாற்றத்துடன் இந்தப் பிராந்தியம், அதிக ஆழத்துடனும் செயல் உத்தி கண்ணோட்டத்துடனும் பார்க்கப்பட்டது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவு குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் இது.
 
வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு பல முக்கியமான துறைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பல அம்சங்களில் இந்தியா இந்த நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
 
பெரும்பாலான வளைகுடா நாடுகளுடன் இந்தியா நல்லுறவைக் கொண்டுள்ளது. இந்த உறவில் மிக முக்கியமானது எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகமாகும். இது தவிர, வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பணிபுரிவதும், அவர்கள் தாயகத்திற்கு பணம் அனுப்புவதும் இந்த உறவின் முக்கிய அம்சங்களாகும்.
 
கடந்த ஆண்டு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே 'விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்' (CEPA) கையெழுத்தானது. CEPA உடன்படிக்கையின் கீழ், பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிப்பதோடு, சேவைகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இராக்கிடம் இருந்து இந்தியா அதிகபட்ச கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதற்கு அடுத்தபடியாக செளதி அரேபியா வருகிறது. ஆனால், இதற்கிடையே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதும் கணிசமாக அதிகரித்துள்ளது.
 
இத்தகைய சூழ்நிலையில், செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே மாறிவரும் உறவுகளுடன், அங்கு இந்தியாவின் பங்கு குறித்தும் விவாதம் துவங்கியுள்ளது.
 
இந்த விவாதத்தில் சீனாவும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. செளதி மற்றும் இரான் இடையேயான ஒப்பந்தத்தில் அதன் நேரடி பங்கு தெளிவாகத் தெரிகிறது.
 
செளதிக்கும் இரானுக்கும் இடையிலான ஒப்பந்தம்
 
மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக எதிரிகளாக இருந்த செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையிலான உறவுகள் இப்போது மாறி வருவதாகத் தெரிகிறது.
 
இரு நாடுகளும் தூதரக உறவுகளை மீண்டும் துவங்குவதாக அறிவித்துள்ளன. இரண்டு மாதங்களுக்குள் தூதரகத்தை திறப்பதற்கும், பரஸ்பர இறையாண்மைக்கு மதிப்பளித்து உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
 
சீனாவில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே நான்கு நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி ஷாம்கேனி மற்றும் செளதி அரேபியாவின் பாதுகாப்பு ஆலோசகர் முசைத் பின் முகமது அல்-எபனும், இந்த ஒப்பந்தத்தில் வெள்ளியன்று கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் சீனாவின் உயர்மட்ட தூதாண்மை அதிகாரி வாங் யீயும் கலந்து கொண்டார்.
 
இந்த ஒப்பந்தம், பேச்சுவார்த்தை மற்றும் அமைதியின் வெற்றி என அவர் அழைத்தார். கடினமான உலகளாவிய பிரச்னைகளைத் தீர்ப்பதில் சீனா தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
 
இத்தகைய சூழ்நிலையில், வளைகுடா நாடுகளில் இந்தியாவின் நலன்கள், அமெரிக்காவின் ஆர்வம் குறைந்து வருதல் மற்றும் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனாவின் முயற்சிகள் ஆகியவற்றுக்கு இடையே என்ன மாற்றம் ஏற்படும் என்பதை இந்தியாவின் கண்ணோடத்தில் பார்ப்பது முக்கியம்.
 
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இரானும் செளதி அரேபியாவும் பெரும் சர்ச்சைக்குப் பிறகு தங்கள் தூதாண்மை உறவுகளை முறித்துக் கொண்டன.
 
செளதி அரேபியாவில் நன்கு அறியப்பட்ட ஷியா மத தலைவர் தூக்கிலிடப்பட்டதை அடுத்து 2016இல் இரானிய எதிர்ப்பாளர்கள் டெஹ்ரானில் செளதி தூதரகத்திற்குள் நுழைந்தனர்.
 
அப்போதிருந்து, சன்னி பெரும்பான்மை உள்ள செளதி அரேபியாவுக்கும் ஷியா பெரும்பான்மை உள்ள இரானுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.
 
செளதி அரேபியாவிற்கும் இரானுக்கும் இடையிலான நவீனகால போட்டி இரானியப் புரட்சிக்குப் பின்னர் 1979 இல் தொடங்கியது. அப்போது இரான் எல்லா முஸ்லிம் நாடுகளிலும் முடியாட்சியை அகற்றி மத ஆட்சியை அமல்படுத்த அழைப்பு விடுத்தது
.
1981 இல் இராக் இரானைத் தாக்கியது. அதில் செளதி அரேபியா இராக்கை ஆதரித்தது.
 
தற்போது இரு நாடுகளும் சிரியா, யேமன், லெபனான் மற்றும் லிபியாவில் பரஸ்பரம் சிக்கியுள்ளன.
 
இந்த நாடுகளின் குழப்பத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்கள், நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
 
இந்தியாவின் நலன்கள் இரு நாடுகளுடனும் இணைந்திருப்பதால், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.
 
ஆனால் தற்போது இந்தியாவுக்கு நிலைமை சற்று சாதகமாக உள்ளது என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். ஏனெனில் முன்பு எதிரிகளாக இருந்த இந்தியாவின் இரண்டு நண்பர்கள், இப்போது பரஸ்பரம் நண்பர்களாகி வருகின்றனர். இதனால் இந்தியாவின் இக்கட்டான நிலை சற்று மேம்படக்கூடும்.
 
இரான் மற்றும் செளதி அரேபியா இடையேயான இருதரப்பு உறவுகள் வளைகுடா நாடுகளிலும், உலகம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளின் இருதரப்பு பிரச்சனைகள் உலகளாவிய பிரச்சனைகளாக மாறின. எகிப்து, துருக்கி, ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகளும் இதில் மறைமுகமாக ஈடுபட்டன,” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய நிபுணர் பேராசிரியர் ஏ.கே.பாஷா கூறினார்.
 
“இந்தியாவைப் பொருத்த வரையில், இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, இந்தியா தனது வர்த்தகத்தைக் குறைக்க வேண்டியிருந்தது. படிப்படியாக, இந்த விஷயம் மிகவும் சிக்கலானது, UAE, செளதி அரேபியா மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளுடன் இந்தியா ஆழமான உறவுகளை உருவாக்கத் தொடங்கியது. அதே நேரத்தில், இரான் இந்தியாவிடமிருந்து விலகிச் சென்றது மற்றும் சீனாவுடனான அதன் நெருக்கம் அதிகரித்தது.”
 
“இந்தியாவுக்கு இது கடினமாக இருந்தது. ஆனால் இதுவரை அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி வந்தாலோ, ஆப்கானிஸ்தானில் வேறு ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலோ, இந்திய - இரான் உறவு மீது தாக்கம் ஏற்படும்,” என்று ஏ.கே.பாஷா மேலும் தெரிவித்தார்.
 
இருப்பினும், இரான் மற்றும் செளதி அரேபியாவின் சமீபத்திய நடவடிக்கை குறித்து உடனடியாக முடிவுக்கு வருவது பொருத்தமானதாக இருக்காது என்று ஏ.கே.பாஷா கருதுகிறார். இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான இந்த தூதாண்மை உறவுகளை சிறிது காலம் கவனிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறுகிறார். அதன் உடனடி விளைவுகள் இந்தியாவில் காணப்படவில்லை. இது ஒரு நல்ல படியாகும். ஆனால், அதை சீனா தனக்கு சாதகமாக்கிக் கொண்டது பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும்.
 
அரபு நாடுகளில் சீனாவின் அதிகரிக்கும் பங்கு, இந்தியா கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் கே. பரத்வாஜ், கருதுகிறார். ஆனால் தற்போதைய மாற்றத்தில் சீனாவின் பங்கு மிகைப்படுத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.
 
“செளதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறுவது முற்றிலுமாக சரியல்ல. செளதி அரேபியாவும் இரானும் கடந்த 3-4 ஆண்டுகளாக தங்கள் உறவை மேம்படுத்த முயற்சி செய்து வருகின்றன. முறைசாரா பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால், இப்போது அதை முறைப்படுத்த வேண்டியிருந்ததால், இந்த விவகாரம் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
 
“ஆசியாவில் இந்தியா மிக முக்கியமான நாடு. செளதி அரேபியா மற்றும் இரானுக்கும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு, சீனாவைப் போலவே இந்தியா பெரிய சந்தையாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரமும் 6-7 சதவிகிதம் வளர்ந்து வருகிறது,” என்று பேராசிரியர் பரத்வாஜ் விளக்கினார்.
 
“மத்திய ஆசிய நாடுகளுடனான இணைப்பு தொடர்பாகவும், இரானுடனான உறவை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. சபாஹார் துறைமுகத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது. இரான் மற்றும் செளதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் இந்தியாவை நட்பு நாடாக பார்க்கின்றன. கூடவே காஷ்மீர் விஷயத்தில் மென்மையான நிலைப்பாட்டை எடுக்கின்றன” என்றார் அவர்.
 
“சீனா மற்றும் இந்தியா இரண்டுமே இங்கு தங்கள் சொந்த செயல் உத்தி, பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைக் கொண்டுள்ளன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் இவற்றில் இல்லை,” என்று பேராசிரியர் பரத்வாஜ் குறிப்பிட்டார்.
 
“அண்டை நாடுகளைப் பொருத்தவரை, பிராந்திய பாதுகாப்பு தொடர்பாக இந்தியா நேரடி சவாலை எதிர்கொள்கிறது. ஆனால், வளைகுடா நாடுகளுக்கு பாதுகாப்பு தொடர்பான சமன்பாடுகள் உள்ளன. மத்திய கிழக்கில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால், எரிசக்தி துறையில் போட்டி அதிகரிக்கும். ஆனால் மீதமுள்ள முதலீட்டு வாய்ப்புகள் இரு நாடுகளுக்கும் சமமாக இருக்கும்.”
 
இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே இந்தியாவின் அமைப்பு ரீதியான பிரச்சனைகள் மற்றும் அரசியல் சமன்பாடுகளும் முக்கியமானதாகிவிடுகின்றன. இங்கே இந்தியாவின் கைகள் ஓரளவுக்கு கட்டப்படுவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
 
"பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி மூலம் சீனா தனது செல்வாக்கையும் வர்த்தகத்தையும் அதிகரித்து வருகிறது. அதை இந்தியாவும் செய்ய வேண்டும். ஆனால் சீனாவிடம் இருக்கும் அளவுக்கு இந்தியாவிடம் மூலதனம் இல்லை," என்று ஏ.கே.பாஷா கூறுகிறார்.
 
சீனா அரசியல் செல்வாக்கை தெளிவாகத் தெரியும்படி பயன்படுத்த முடியும். இந்தியா இதை செய்ய விரும்பவில்லை. அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கோபப்படுத்த இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவுடன் நேரடி பதற்றம் இருப்பதால் சீனா இதை செய்ய முடியும்.
 
”இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால், ஏதாவது ஒன்றைச்செய்ய நேரம் பிடிக்கிறது. சீனாவைப் போல அது முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் தான் எந்த முடிவையும் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. சீனா இதை தனக்கு ஓரளவு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது,” என்று சஞ்சய் கே பரத்வாஜ் குறிப்பிட்டார்.
 
இஸ்லாமிய நாடுகள் மற்றும் சீனா என்று வரும்போது பாகிஸ்தானின் பங்கை மறுக்க முடியாது. சீனாவை இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமாகக் கொண்டு வருவதில் பாகிஸ்தான் ஒரு முக்கிய இணைப்பாக நிரூபணமாகியுள்ளது.
 
செளதி மற்றும் இரான் இடையேயான ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து பங்களிக்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்காக சீனாவையும் பாகிஸ்தான் பாராட்டியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான்-சீனா ஜோடி இந்தியாவுக்கு எத்தகைய சவாலாக அமையும்?
 
பாகிஸ்தான் தற்போது சீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், ஆனால் பின்னர் இஸ்லாமிய நாடுகளில் அதன் முக்கியத்துவம் குறையலாம் என்றும் இது குறித்து சஞ்சய் கே பரத்வாஜ் கருதுகிறார்.
 
“பாகிஸ்தானுக்கு செளதி அரேபியாவின் ஆதரவு உள்ளது. அணுசக்தி வளம் காரணமாக செளதி அதை இஸ்லாத்தின் பாதுகாப்பு கவசமாகக் கருதுகிறது. ஆனால்,வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்திருப்பதால் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.
 
”மறுபுறம் சீனா, இரான் மற்றும் செளதி அரேபியாவுக்கு அருகில் வந்தால், பாகிஸ்தானின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே செல்லும். வளைகுடா நாடுகளில் இணையான குழுவை அமைக்க சீனா முன்பு ஒரு செயல்திட்டத்தை வகுத்தது. இதில் துருக்கி, மலேஷியா, இரான் ஆகிய நாடுகள் ஒன்றிணைய இருந்தன. இப்போது இரான் மற்றும் செளதி அரேபியா இடையே பதற்றம் முடிவுக்கு வந்துவிட்டால், பாகிஸ்தானின் பங்கு தானாகவே குறைந்துவிடும்.”
 
இருப்பினும், செளதி அரேபியாவிற்கும் இரானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இரு நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது, இந்த மாறிவரும் உறவுகள் நிச்சயமற்ற நிலையில் உள்ளன என்று அவர்கள் கருதுகின்றனர்.