இரான் செறிவூட்டிய யுரேனியம் அதிகம் தயாரிப்பதால் என்ன பிரச்சனை?

bbc
Last Modified வெள்ளி, 12 ஜூலை 2019 (18:21 IST)
அணுசக்தி எரிபொருளை அளவுக்கு அதிகமான அளவில் தயாரிப்பதை இரான் தொடர்ந்து செய்யும் என்று ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் இரானுக்கு ஏற்பட்ட இழப்பை ஐரோப்பிய நாடுகள் சரிசெய்யும் வரை இது தொடரும் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.

ஆனால், உலக நாடுகளுடன் போடப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இரான் விலகாது என்று பிபிசியிடம் பேசிய ஐநாவுக்கான இரான் தூதர் மாஜீத் தக்டய் ரவான்சீ தெரிவித்தார்.

இந்த சூழல் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிக அளவில் தயாரிப்பதினால், அணு ஒப்பந்த விதிமுறைகளை இரான் மீறியுள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிக அளவில் தயாரிப்பதால் என்ன ஆகும் என்பதை தற்போது பார்க்கலாம்.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்றால் என்ன?

bbc

யுரேனியம் ஹெக்ஸாஃபளோரைட் வாயுவை மையவிலக்கு கருவிக்குள் செலுத்தி யு-235 எனப்படும் அணுக்கரு பிளப்புக்கு மிகவும் பொருத்தமான யுரேனியம் ஐசோட்டோப்பை பிரித்தெடுப்பதன் மூலம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிக்கப்படுகிறது. (ஒரு தனிமத்தில் மாறுபட்ட அணு எண் கொண்ட வகைகள் இருக்குமானால், அவை அந்த தனிமத்தின் ஐசோட்டோப்புகள் எனப்படும்).

3 முதல் 5 சதவீதம் யு-235 ஐசோட்டோப் கொண்ட குறைந்த அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு வணிகரீதியிலான அணு மின் உலைகளுக்கான எரிபொருளைத் தயாரிக்க முடியும்.

20 சதவீதம் அல்லது அதற்கு மேல் செறிவு கொண்ட அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆராய்ச்சி உலைகளுக்காக பயன்படுத்தப்படும். 90 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதம் செறிவு கொண்டவை ஆயுதத் தரத்திலானவை.

அணு ஒப்பந்தத்தின்படி, 3.67 சதவீத விகிதம் செறிவு கொண்ட யுரேனியம் தயாரிக்கவே இரானுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரான் என்ன செய்தது?

bbc

அணு ஒப்பந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும் சர்வதேச அணுசக்தி நிறுவனம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு வைத்துக்கொள்வதற்கான அளவை இரான் மீறியதாக ஜூலை முதல் தேதி உறுதிப்படுத்தியது.

"தங்களது தேவைக்கு ஏற்ப" 3.67 சதவீத விகிதத்துக்கு அதிகமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரிக்க தொடங்கிவிட்டதாக ஜூலை 7ஆம் தேதி அன்று இரான் அறிவித்தது.

இரான் அணுசக்தி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வன்டி கூறுகையில், பூஷர் அணு உலைக்கு எரிபொருள் வழங்க முதலில் 5 சதவீதம் விகிதம் அளவிற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை அதிகப்படுத்துவதாக தெரிவித்தார்.

இது ஏன் முக்கியம்?

bbc

300 கிலோ வரை கையிருப்பு அளவை உயர்த்துவதால், தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்க ஆலோசனை குழுவான ஆயுதங்கள் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒரு அணுகுண்டு செய்வதற்குத் தேவையான பொருட்களை தயாரிக்க 1,050 கிலோ அளவு 3.67 சதவீத விகிதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இரானுக்கு தேவைப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இரான் தயாரிக்குமானால் அது ஆபத்தாக அமையலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அணு ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன் 2016ஆம் ஆண்டு, இரானிடம் 20 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தது. ஒரு குண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களும் இருந்தன. தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், இரானால் செய்திருக்க முடியும்.

தற்போது இந்த ஒப்பந்தத்தை இரான் மீறியுள்ளதால், ஐநா மற்றும் ஐரோப்பிய யூனியன் விலக்கிய தடைகள் மீண்டும் அமல்படுத்தப்படலாம்.

அணுஒப்பந்த விதமுறைகளை இரான் மீறியது ஏன்?


bbc

மே 2018ல் அணுஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்ததில் இருந்து, இரானின் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டு வருகிறது.

ஒப்பந்தத்தில் பல தவறுகள் இருப்பதாக கூறிய டிரம்ப், ஒப்பந்த விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அதனை இரான் மறுத்துவிட்டது.

டிரம்பின் இந்த விலகல் முடிவை விமர்சித்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள், ஒப்பந்தத்தை தாங்கள் தொடரப் போவதாக தெரிவித்தனர்.

இரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு விதிவிலக்கு அளிப்பதை அமெரிக்கா நிறுத்தியதால், இரான் மீதான அழுத்தம் அதிகமானது.

அமெரிக்கா விதித்த தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒப்பந்த விதிமுறைகளை மீறுவோம் என்று ஏற்கனவே இரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்திருந்தார்.

இரானுக்கு அணுகுண்டு தயாரிக்க வேண்டுமா?

bbc

தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் எந்தத் திட்டமும் இல்லை என்று இரான் கூறுகிறது.
ஆனால், உலக நாடுகள் இதனை நம்பத் தயாராக இல்லை. 2003ஆம் ஆண்டு வரை, அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்கும் நடவடிக்கைகளில் இரான் ஈடுபட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பு சேகரித்த ஆதாரங்களை சுட்டிக்காட்டி அவை கூறுகின்றன.

இந்த நடவடிக்கைகள் 2009 வரை தொடர்ந்ததாக அணுசக்தி அமைப்பு கூறியது.

2015ஆம் ஆண்டிற்கு பிறகும் கூட அணுஆயுத நடவடிக்கையில் தொடர்ந்து இரான் ஈடுபட்டதாக கூறி இஸ்ரேல் ரகசியமாக எடுத்த காணொளிகளை வெளியிட்டது. அந்தக் குற்றச்சாட்டை "அபத்தமானது" என்று கூறி இரான் மறுத்தது.

அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளில் தற்போது இரான் ஈடுபடவில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தது.


இதில் மேலும் படிக்கவும் :