திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (14:53 IST)

காஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை - தற்போதைய நிலை என்ன?

ஜம்மு காஷ்மீரில் ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்படும், என்றும் அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பாக்கில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா தெரிவித்தது பின்வருமாறு, அங்கு அமைதியான சூழல் இருப்பதாகவும், ஆனால், பழைய ஸ்ரீநகரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
 
ஸ்ரீநகரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு எப்படி இருந்ததோ, அதே போலதான் இன்றும் உள்ளது. பாதுகாப்புப் படையினர் அதிகளவில் இருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் பேரிகேடுகள் மற்றும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன. 
அனுமதி இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக கூறினாலும், அனுமதிக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு நாங்கள் பாதுகாப்புப் படையினரால் நிறுத்தப்பட்டோம் என்கிறார் ஆமிர்.
 
பழைய காஷ்மீரில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமரிலில் உள்ளது. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. வட மற்றும் மத்திய காஷ்மீர் பகுதிகள் குறித்து எந்த தகவலும் இல்லை. தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்பதால் மற்ற பகுதிகள் குறித்து அறிய முடியவில்லை.
 
ஒரு சில இடங்களில் மட்டுமே லேண்ட்லைன் சேவைகள் வேலை செய்கின்றன. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் அவை செயல்பாட்டில் இல்லை என்றும் ஆமிர் தெரிவித்தார்.