ஷிகர் தவான் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்கப்பட்டுள்ளார்.
அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வரும் ரிஷப் பந்த், பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்தில் இறங்கி விரைவாக ரன்கள் குவிக்கக்கூடியவர். எனவே இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெறுவதால் உண்டாகும் தாக்கம் குறித்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
ரிஷப் பந்த் அணியில் இடம்பெறுவதால் உண்டாகும் தாக்கம் குறித்து கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான ரகுராமன் கூறுகையில், ரிஷப் பந்த் இயல்பாக ஒர் அதிரடி வீரர். மிக குறைந்த பந்துகளில் அதிரடியாக அதிக அளவு ரன்கள் எடுத்து எதிரணியை திணறடிக்கும் வல்லமை அவருக்கு உண்டு. அதனால் உடனடியாக அவரை தொடக்க வீரராக களமிறக்குவதுதான் சரி.
நடுவரிசை பேட்டிங்கில் அவரை களமிறக்குவதைவிட தொடக்க வீரராக களமிறக்கினால் நிச்சயம் அது எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக அமையும். மேலும், ரோகித் அல்லது கே. எல். ராகுலுக்கு திடீரென காயம் ஏற்பட்டால் தொடக்க வீரர் என்ற முறையில் ரிஷப் பந்த்தை கண்டிப்பாக அணி சார்ந்திருக்கும்.
அதனால் லீக் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் அவரால் சிறப்பாக பங்களிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.