வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (21:32 IST)

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல் உங்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? -

Redsea
செங்கடலில் கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கப்பல்களை தாக்கியதைத் தொடர்ந்து, சில நிறுவனங்கள் தங்கள் கப்பல்களின் வழித்தடங்களை மாற்ற முடிவு செய்துள்ளன.
 
கப்பல் நிறுவனங்களின் இந்த முடிவு, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடங்களுள் ஒன்றான செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இத்தகைய தாக்குதல்கள் காரணமாக இந்த முடிவை எடுக்கும் கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
 
இந்த தாக்குதல்களை நடத்தும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களை ஹமாஸ் ஆதரவாளர்கள் என்று அழைத்துக்கொள்கின்றனர். இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.
 
எனினும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட அனைத்துக் கப்பல்களும் உண்மையில் இஸ்ரேலை நோக்கிச் சென்றதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
 
உலகம் முழுவதும் பல கோடி மக்களின் பசி போக்கிய இவரை 'கொலைகார விஞ்ஞானி' என்று அழைப்பது ஏன்?
?
கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் தாக்குதல்களை அதிகரித்தனர்.
 
இரான் ஆதரவு பெற்றதாக இந்த குழு அறியப்படுகிறது. பாப் அல்-மண்டப் வளைகுடா வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ராக்கெட் தாக்குதல்களை இக்குழு நடத்தி வருகிறது.
 
பாப் அல்-மண்டப் வளைகுடா என்பது 20 மைல் அகலமுள்ள நிலப்பரப்பாகும். இது, அரேபிய தீபகற்பத்தில் உள்ள ஏமனில் இருந்து ஆப்பிரிக்க தீபகற்பத்தில் எரித்திரியா மற்றும் ஜிபூட்டியை பிரிக்கிறது. இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கிறது.
 
தெற்கிலிருந்து வரும் சரக்குக் கப்பல்கள் எகிப்தை அடைய பெரும்பாலும் இந்த பாதையைத்தான் பயன்படுத்துகின்றன. இதன்பின், அவை சூயஸ் கால்வாய் வழியாக மேலும் வடக்கு நோக்கி நகர்கின்றன.
 
ஆனால், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் எதிர்காலத்தில் இதுகுறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பல பெரிய கப்பல் நிறுவனங்களான மெடிடரேனியன் ஷிப்பிங் கம்பெனி, மஸ்க் (Maersk) போன்ற நிறுவனங்கள் தங்கள் கப்பல்களின் வழித்தடத்தை மாற்றியுள்ளன.
 
இப்போது இந்தக் கப்பல்கள் செங்கடலுக்குப் பதிலாக வடக்கு நோக்கி சென்று, ஆப்பிரிக்காவின் ’நன்னம்பிக்கை முனை’ (தென்னாப்பிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள கற்பாறைக் குடா) வழியாகச் செல்லும்.
 
எண்ணெய் நிறுவனமான பிபி-யும் (BP), பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை தற்போது நிறுத்துவதாகக் கூறியுள்ளது.
 
சிக்கல் என்னவென்றால், கப்பல்கள் வேறு பாதையில் சென்றால், சரக்குகளை கொண்டு சேர்ப்பதில் 10 நாட்கள் தாமதம் ஏற்படலாம். இதனால், கப்பல் நிறுவனங்கள் அதிக பணத்தை செலவழிக்கும் நிலை ஏற்படும்.
 
வங்கதேசம்: தீ வைக்கப்பட்ட 14 வாக்குச்சாவடிகள் - வாக்குப் பதிவு தொடங்கிய பிறகு நிலைமை என்ன?
 
செங்கடலில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் ஏமன் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
 
பாப் அல்-மண்டப் வளைகுடாவின் முக்கியத்துவம் என்ன?
உலக வரைபடத்தைப் பார்த்தால், எகிப்து வழியாகச் செல்லும் சூயஸ் கால்வாய் மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. இது பாப் அல்-மண்டப் வளைகுடா வழியாக ஏடன் வளைகுடாவுடன் மேலும் இணைகிறது.
 
மறுபுறம், மத்தியதரைக் கடலில் இருந்து வரும் பாதை ஜிப்ரால்டர் வழியாக வடக்கு அட்லாண்டிக்கில் விரிகிறது.
 
இந்த வழியில், ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்லாமல், வடக்கு அட்லாண்டிக்கில் இருந்து சரக்குக் கப்பல்கள் மத்திய தரைக்கடலை அடைந்து பின்னர் செங்கடல் வழியாக நேரடியாக அரபிக்கடலை அடையலாம்.
 
சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் எந்தக் கப்பலும் இந்தியப் பெருங்கடலை அடைய வேண்டுமானால், அது செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் வழியாகச் செல்ல வேண்டும்.
 
சூயஸ் கால்வாய் ஆசியா முதல் ஐரோப்பா வரை இணைக்கும் வேகமான கடல் பாதையாகும். கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்துக்கு இது மிகவும் முக்கியமானது.
 
சரக்கு பகுப்பாய்வு நிறுவனமான வோர்டெக்சாவின் கூற்றுப்படி, 2023-இன் முதல் பாதியில், ஒவ்வொரு நாளும் சுமார் 9 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இந்த வழியாக மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
 
எஸ்&பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் (S&P Global Market Intelligence) ஆய்வாளர்கள் கூறுகையில், ஆசியா மற்றும் வளைகுடாவில் இருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிற்கு செல்லும் பொருட்களில் குறைந்தது 15 சதவிகிதம் இந்த வழியே செல்கிறது. இதில் 21.5 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் 13 சதவீதம் கச்சா எண்ணெய் உள்ளது.
 
எண்ணெய் இறக்குமதி-ஏற்றுமதிக்கு மட்டும் இந்த பாதை பயன்படுத்தப்படுவது அல்ல. இந்த வழியாக செல்லும் கப்பல்களில் ஏற்றப்படும் கொள்கலன்களில் தொலைக்காட்சிகள், உடைகள், விளையாட்டு பொருட்கள் போன்ற பிற பொருட்களும் கொண்டு செல்லப்படும்.
 
நுகர்வோர் மீது என்ன தாக்கம் இருக்கும்?
கப்பல்களின் பாதை செங்கடல் வழியாக செல்லாமல் நன்னம்பிக்கை முனை வாயிலாக சென்றால், அது விநியோகச் சங்கிலியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
 
எஸ்&பி குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸின் விநியோகச் சங்கிலி ஆராய்ச்சித் தலைவர் கிறிஸ் ரோஜர்ஸ் கூறுகையில், "இதனால் நுகர்வோர் தரப்பில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும்” என்றார்.
 
கப்பல் போக்குவரத்து பரபரப்பாக இல்லாத நேரத்தில் இந்த இடையூறு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
 
இதனால் கடைகளுக்கு பொருட்கள் வந்து சேருவதில் குறைந்தது 10 நாட்கள் தாமதம் ஏற்படலாம். ஏனெனில் செங்கடல் வழியாக அல்லாமல் நன்னம்பிக்கை முனை வழியாக செல்லும் பாதை 3,500 கடல் மைல்கள் அதிக நீளம் கொண்டது.
 
மரச்சாமான்கள் நிறுவனமான Ikea மற்றும் பிரிட்டிஷ் சில்லறை விற்பனை நிறுவனமான Next ஆகியவை கப்பல் வழித்தடங்கள் தொடர்ந்து தடைபட்டால் விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளன.
 
சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான தூரம் மட்டுமின்றி, அதை எடுத்துச் செல்லும் செலவும் அதிகரிக்கும். கடந்த ஒரு வாரத்தில், இந்த செலவுகள் சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மீதான அதிக செலவும் நேரடியாக நுகர்வோரை சென்றடையும்.
 
இருப்பினும், சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான விலை, கடந்தாண்டின் விலையை விட மிகக் குறைவாகவும், 2021-இல் காணப்பட்ட விலையைக் காட்டிலும் மிகவும் குறைவாகவும் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் காரணமாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபோது, ​​தேவை அதிகரித்த நிலையில் சரக்குகளை கப்பல்களில் எடுத்துச் செல்வதற்கான செலவுகள் அதிகரித்தன.
 
விநியோகச் சங்கிலியில் இடையூறு தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை உயரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
 
எண்ணெய் விலை நுகர்வோரின் செலவுகளை நேரடியாக பாதிக்கலாம் மற்றும் இதன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கலாம். சமீப காலங்களில், பிரிட்டனில் பணவீக்கம் படிப்படியாக குறைந்து, 4.6 சதவீதத்தை எட்டியுள்ளது.
 
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் விநியோகத்தில் குறுக்கீடு காரணமாக, அதன் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இயற்கை எரிவாயுக்கான செலவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனினும், ஏப்ரல் 2024-க்கு முன்பாக இந்த செலவு அதிகரிக்கும் வாய்ப்பு குறைவு என நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
ஏனென்றால், விநியோக நிறுவனங்கள் எரிசக்திக்கு விதிக்கும் விலையில் விலை வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு இந்த ஆண்டு ஜனவரியில் விதிக்கப்பட்டது. எனவே எரிசக்தி விலை உடனடியாக அதிகரிக்காது.
 
சரக்குகளை ரயில் அல்லது விமானத்தில் கொண்டு செல்ல முடியாதா?
 
"நீங்கள் ரயில் மூலம் சரக்குகளை கொண்டு செல்ல வேண்டும் என்றால், ரஷ்யா வழியாக செல்ல வேண்டும். ஆனால், யுக்ரேன் மீதான தாக்குதல் காரணமாக ரஷ்யா மீது பல தடைகள் உள்ளன. எனவே, அதனை செயல்படுத்த முடியாது” என கிறிஸ் ரோஜர்ஸ் கூறுகிறார்.
 
வளைகுடா நாடுகள் வழியாக சாலை மார்க்கமாக இஸ்ரேலுக்கு பொருட்களை கொண்டு செல்ல முயற்சித்தாலும், கப்பல் போக்குவரத்து செலவு 3 சதவீதம் மட்டுமே குறையும்.
 
சூயஸ் கால்வாயை அடைய ஏமன் கடற்கரைக்கு அப்பால் உள்ள சிறிய பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாகச் செல்ல வேண்டும்.
 
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்கா சர்வதேச கடற்படை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
 
அதன் போர்க்கப்பல்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு உதவுகின்றன. இப்போது பிரிட்டன், கனடா, பிரான்ஸ், பஹ்ரைன், நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளன.
 
இந்தப் பிராந்தியத்தில் கப்பல்களை பாதுகாப்பாக பயணிப்பதற்கான முயற்சிக்கு மற்ற நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
 
ஆனால், பாதுகாப்பு அதிகரித்த பிறகும் கூட, சில கப்பல் நிறுவனங்கள் இன்னும் இந்த வழியைப் பயன்படுத்துவதில் அச்சங்களைக் கொண்டிருக்கின்றன. அந்நிறுவனங்கள் இப்போது செங்கடலைப் பயன்படுத்த விரும்பவில்லை.
 
பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு, மஸ்க் நிறுவனம் மீண்டும் தங்கள் கப்பல்களை செங்கடல் வழியாக அனுப்ப முயன்றது. எனினும் அந்த முயற்சிகளை அந்நிறுவனம் நிறுத்த வேண்டியிருந்தது.
 
மஸ்க் நிறுவனம் செங்கடலில் தனது சரக்குக் கப்பல் ஒன்றில் தாக்குதலுக்குப் பிறகு, இந்த வழியாக கப்பல்களை அனுப்ப மீண்டும் தடை விதித்துள்ளது.