வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (00:00 IST)

வட கொரியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன?

வட கொரியா கடந்த காலத்தில் ஒரு கொடூரமான பஞ்சத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படவிருப்பதாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
 
ஒரு ரகசிய நாடாக கருதப்படும் வட கொரியாவில் இருந்து நம்பத் தகுந்த தகவல்கள் கிடைப்பது மிகவும் கடினம்.
 
எனவே அங்கு உணவுப் பற்றாக்குறை எவ்வாறு உள்ளது, இந்த ஆண்டு சூழல் எவ்வாறு இருக்கும்? உணவுப் பொருட்களின் விலை எவ்வாறு உள்ளது? என்ற கேள்விகளுக்கு நமக்கு தெரிந்த விடைகளைப் பார்ப்போம்.
 
அடிப்படை உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது உணவு பற்றாக்குறை இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளில் ஒன்று.
 
பிப்ரவரி மாதம் ஒரு கிலோ மக்காச் சோளத்தின் விலை 3,137 வான் ஆக அதிகரித்தது (இந்திய மதிப்பில் கிட்டதட்ட 200ரூபாய்). இந்த தகவல், உள்ளூர் செய்தி வட்டாரங்கள் மூலம் வட கொரிய செய்தி தளமான `என்கே டெய்லி` சேகரித்த செய்தி ஆகும்.
 
விலைகள் ஜூன் மாதத்தில் மீண்டும் அதிகரித்தன என ஆசியா ப்ரெஸ் வலைதளம் தெரிவிக்கிறது. வட கொரியாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்படும் அலைபேசி மூலம் அங்குள்ள மக்களிடம் பேசி அந்த வலைதளம் பெற்ற தகவல்.
 
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் இரண்டுக்கும் தயாராக வேண்டும்: வட கொரியா
வட கொரியாவில் உணவு பஞ்சம்: முதல் முறையாக ஒப்புக் கொண்ட கிம்
மக்காச் சோளம் அரிசியை காட்டிலும் குறைவாக உண்ணக்கூடிய உணவுப் பொருளாகும். இருப்பினும் அதன் விலை குறைவு என்பதால் அதிகம் உண்ணப்படுகிறது. தற்போது பியாங்யாங்கில் ஒரு கிலோ அரசியின் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவு மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் இந்த விலை மாறிக் கொண்டே இருக்கும்.
 
சந்தை விலைகளை கவனித்தல், பொருளாதார நடவடிக்கைகள் குறித்த சிறந்த தகவல்களை தரும்.
 
ஏனென்றால் பெரும்பாலான வட கொரிய மக்கள் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை சந்தையில்தான் பெறுகிறார்கள் என்கிறார் வட கொரியா குறித்த நிபுணர் பெஞ்சமின் சில்பெர்ஸ்டெய்ன்.
 
"அரசு அதிகாரிகளுக்கு குறைந்த அளவிலான உணவுப் பொருட்களே வழங்கப்படுகின்றன." அனைத்து வீடுகளுக்கும் அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் போதுமானதாக இல்லை. நீண்ட தூரம் சென்று பொருட்களை வாங்கும் நிலையும் உள்ளது. இதனால், பலர் கள்ளச் சந்தைகளில் பொருட்களை வாங்கும் நிலையும் உள்ளது."
 
மோசமான வானிலையால் பயிர் சேதம்
 
உணவுப் பற்றாக்குறை குறித்து பேசும்போது கிம், கடந்த ஆண்டு ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளத்தை காரணம் காட்டினார்.
 
வடகொரியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை அதிகப்படியான மழை பெய்தது, 1981ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக மழை பெய்த காலம் அது. இந்த தகவலை வழங்குவது பாரிசில் உள்ள விவசாய கண்காணிப்பு அமைப்பான GEOGLAM.
 
கொரிய தீபகற்பம் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அடுத்தடுத்த சூறாவளியால் பாதிக்கப்பட்டது. அது அரிசி, மக்காச் சோள அறுவடை காலம்.
 
ஜூன் மாதத்திலிருந்து பஞ்சம் தீவிரமாகலாம். ஏனென்றால் அறுவடை சிறப்பாக இல்லாத காரணத்தால் கடந்த அறுவடையில் கிடைத்த அரசு கையிருப்பு குறையத் தொடங்கியுள்ளது.
 
சீன எல்லைந்து வரும் வட கொரிய படகு
 
 
ஆகஸ்டு மாத தொடக்கத்தில் ஏற்பட்ட `ஹகுபிட்` சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை வடகொரியா வெளிப்படையாக தெரிவித்தது.
 
சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலமும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன.
 
அதற்கு பிறகு வந்த சூறாவளிகள் குறித்து அரசுத் தொலைக்காட்சி பெரிதாக எந்த தகவலும் வழங்கவில்லை. பல தசாப்தங்களாக நடைபெற்ற காடழிப்பு இந்த சூறாவளிகளின் தாக்கத்தை மேலும் மோசமாக்கியது.
 
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது எரிபொருளுக்காக மரங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் அவ்வப்போது நடப்பட்டாலும், காடழிப்பு தொடர்ந்து கொண்டு இருந்தது. வெள்ளச் சூழல் மோசமாகியது.
 
கிம்மின் நிர்வாகம் ஜீன்ஸ், வெளிநாட்டு படங்களுக்கு தடை விதித்தது ஏன்?
வடகொரிய சுரங்கங்களில் குழந்தைகள் தானாக முன்வந்து பணியாற்றுவதாக கூறும் அரசு
கடந்த மார்ச் மாதம் சர்வதேச காடுகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு 68 ஆயிரம் ஏக்கர் மரங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 2 லட்சத்து 33 ஹெக்டேர் நிலப்பரப்பில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
 
வட கொரியா குறித்த வலைப்பூவான 38 நார்த், வட கொரியா பேரழிவு மேலாண்மையில் மேம்பட்டுள்ளது என்று தெரிவித்தாலும், மேலும் திறன்பட செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது.
 
மோசமான உரத் தட்டுப்பாடு
 
வட கொரிய விவசாய துறையில் அதிகம் அறியப்படாத பிரச்னையாக உரத் தட்டுப்பாடு உள்ளது.
 
எளிதாக கிடைக்ககூடிய மாற்று உரங்களை கண்டறிய வேண்டும் என 2014ஆம் ஆண்டு விவசாயத் தலைவர்களுக்கு கிம் கடிதம் ஒன்றை எழுதினார்.
 
"விலங்குகளின் கழிவுகள், மனிதக் கழிவுகள், பூமிக்கு அடியில் இருக்கும் மண் என உரமாக மாறும் அனைத்தையும் பயன்படுத்துங்கள்," என கிம் குறிப்பிட்டார் என அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கேசிஎன்ஏ தெரிவித்தது.
 
நாடு செழிப்பாக இருப்பதாக காட்டும் அரசு விளம்பரம்
பட மூலாதாரம்,DPRK GOVERNMENT
படக்குறிப்பு,
நாடு செழிப்பாக இருப்பதாக காட்டும் அரசு விளம்பரம்
 
வட கொரியா உர உற்பத்தியில் தன்னிறைவு பெறவில்லை. வட கொரியாவின் முக்கிய உரத் தொழிற்சாலையான கிக்கெய் ஆசியா (பிற பொருட்களுடன் உரத்தையும் தயாரிக்கிறது), மூலப்பொருட்கள் கிடைக்காமல் மூடவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.
 
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த 2020 ஜனவரியில் வர்த்தக கூட்டாளியான சீனாவுடனான எல்லையை மூடியது அதற்கு காரணமாக கூறப்படுகிறது.
 
சமீப ஆண்டுகளில் வட கொரியாவுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான ஏற்றுமதி நடைபெற்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அது வெறும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்தது என சீன அதிகாரப்பூர்வ சுங்கத் தகவல் தெரிவிக்கிறது.
 
இரண்டு பக்கங்களில் (வட கொரியாவில் சினுனுஜு, சீனாவில் டாங்டாங்) எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் குறைந்த அளவிலான வாகன போக்குவரத்தே நடந்ததாகத் தெரியவந்துள்ளது.
 
இதன்மூலம் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் எல்லைகள் திறக்கப்படவில்லை எனத் தெரிவதாக கேந்திர, சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
 
2019 செப்டம்பரில் 100 வாகன போக்குவரத்து இருந்தது எனில் 2021 மார்ச்சில் அது 15ஆக குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
செயற்கைக்கோள் புகைப்படம்
பட மூலாதாரம்,MAXAR (SUPPLIED BY EUROPEAN SPACE IMAGING)
இருப்பினும் அதே இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு சரக்கு ரயில்களின் போக்குவரத்து இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றதாகத் தெரிகிறது. இதன்மூலம் வர்த்தகம் மீண்டும் அதிகரிக்கும் என கண்காணிப்பாளர்கள் நம்புகின்றனர்.
 
இருப்பினும் எல்லைகள் எப்போது திறக்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என வட கொரியாவை கண்காணிக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
உணவு உதவி பிரச்னைகள்
எல்லைகள் மூடியிருப்பது வட கொரியாவுக்கு உணவு உதவிகள் சென்று சேருவதையும் சிக்கலாக்கியுள்ளது.
 
சீனாதான் வட கொரியாவுக்கு அதிகம் உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் அது பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 80 சதவீத அளவு குறைந்துவிட்டது.
 
கடந்த தசாப்தத்தில் கொடையளிக்கும் நாடுகளிடமிருந்து போதுமான உணவுகள் வட கொரியாவுக்கு செல்லவில்லை என ஐநா தெரிவிக்கிறது.
 
மேலும் பல சர்வதேச உணவு உதவி அமைப்புகளும் கொரோனா கட்டுப்பாட்டுகளால் அங்கு பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 
பெருந்தொற்று காலத்திற்கு முன்னதாகவே அங்கு வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள் குறித்த கணக்கெடுப்பை எடுக்க முடியவில்லை என உலக உணவு திட்டத்தை சேர்ந்த குன் லி பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"2020ஆம் ஆண்டில் சவால்கள் இருந்தபோதிலும், உலக உணவு திட்டம் 7 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் சத்துணவு உதவிகளை வழங்கியது" என அவர் தெரிவித்தார்.
 
இரண்டு, மூன்று மாத கால அளவுக்கு வட கொரியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
 
இந்த இடைவெளி வர்த்தக இறக்குமதி அல்லது உணவு உதவியால் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், இந்த ஆண்டு ஆக்ஸ்டு - அக்டோபரில் கடுமையான பஞ்சத்தை வீடுகள் எதிர்கொள்ளும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.