வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஜூன் 2024 (19:05 IST)

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

Kuwait
குவைத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் சிலரும் உயிரிழந்திருக்கும் நிலையில், அங்கு வாழும் தொழிலாளர்களின் வசிப்பிடச் சூழல் குறித்த கேள்வி எழுந்திருக்கிறது.



குவைத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன?

வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட 90 லட்சம் இந்தியர்கள் தங்கிப் பணிபுரிகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள், விஞ்ஞானிகள் துவங்கி, சாதாரண தொழிலாளர்கள் வரை இதில் அடக்கம். வளைகுடா நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களில், ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக இந்தியர்கள் தொழிலாளர்களாக பணியாற்றும் நாடு, குவைத்.

கடந்த 2022-ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவு அமைச்சகம் தரும் தகவல்களின்படி கிட்டத்தட்ட 9.24 லட்சம் இந்தியர்கள் குவைத்தில் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 1.25 லட்சம் பேர் தமிழர்களாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.

குவைத்தில் என்னென்ன பணி வாய்ப்புகள் உள்ளன?

குவைத்தில் எல்லாவிதமான பணிகளிலும் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், தொழிலாளர்களாகப் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கைதான் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. அங்குள்ள எண்ணெய் நிறுவனங்கள், மின்சார நிறுவனங்கள் ஆகியவற்றில் பெரும்பாலும் தமிழர்களே பணியாற்றுகிறார்கள்.

இது தவிர, பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர்கள், ஓட்டுநர்களாகவும் மெக்கானிக் பணியாளர்களாகவும் தமிழர்கள் பணியாற்றுகின்றனர். வீடுகளில் பணிப் பெண்ணாக பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையும் இங்கு கணிசமாக இருக்கிறது. கட்டத் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பணியாற்றுகிறார்கள் என்றாலும் அந்தப் பணியில் எகிப்து, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தை, குறிப்பாக ராமநாதபுர மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள், என்கிறார் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் நிறுவனரான நெல்லை மரைக்காயர்.

குவைத்தில் ஊதியம் எவ்வளவு கிடைக்கும்?

ஒரு குவைத் தினாரின் மதிப்பு இந்திய ரூபாயில் 272 ஆக இருக்கிறது. "குவைத்தைப் பொறுத்தவரை சாதாரண தொழிலாளர்களுக்கான மிகக் குறைந்த மாதச் சம்பளமே 80 முதல் 120 தினார் வரை இருக்கும். ஒட்டுநர்களுக்கு குறைந்தது 120 தினாரிலிருந்து 150 தினார் வரை சம்பளம் கிடைக்கும். நீண்ட நாட்கள் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு 200 - 250 தினார் வரை ஊதியமாகக் கிடைக்கும்,” என்கிறார் மரைக்காயர்.

மேலும் பேசிய அவர், “டீசல் மெக்கனிக் பணியில் இருப்பவர்கள் 300 முதல் 350 தினார் வரை ஊதியமாகப் பெறுவார்கள். பொறியாளர்களாக இருந்தால் 400 தினாரிலிருந்து 2,000 தினார் வரை ஊதியம் பெற முடியும். ஊதியத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பிட்ட தேதியில் ஊதியங்களைத் தந்துவிடுவார்கள்," என்கிறார் அவர்.

தாங்களாகவே விசா எடுத்து இங்கே வருபவர்கள், வருடத்திற்கு 500 தினார் விசா கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். நிறுவனங்களின் மூலம் வருபவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே இதைச் செலுத்திவிடும்.

ஊதியம் கிடைக்கத் தாமதமாவது, அதிக நேரம் வேலை வாங்கிவிட்டு அதற்கு ஊதியம் தராமல் இருப்பது போன்ற புகார்கள் அவ்வப்போது வருவதுண்டு என்கின்றனர் இங்கு வசிப்பவர்கள்.

குவைத்தைப் பொறுத்தவரை, அந்நாட்டுச் சட்டங்களின்படி வெளிநாட்டவர்கள் இங்கே வந்து தொழில் துவங்க முடியும் என்றாலும் சொத்து எதையும் வாங்க முடியாது. ஆனால், கார்கள் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல, வெளிநாட்டவர் யாரும் ஒருபோதும் குவைத்தின் குடிமகனாக முடியாது.

விசா நடைமுறைகள் என்ன?

Kuwait labout


குவைத்துக்கு வேலைக்கு வருபவர்கள் பெரும்பாலும் மூன்று விதமான விசாக்களில் வருகிறார்கள்.

1) அரசாங்கப் பணிக்கான விசா
2) இரண்டாவது, எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் வேலை பார்க்க அனுமதிக்கும் விசா
3) மூன்றாவதாக, வீட்டு வேலைகளுக்கான விசா

முறையான வகையில் இங்கே வேலைக்கு வருபவர்களுக்கு பெரும்பாலும் பிரச்னைகள் ஏதும் வருவதில்லை. அப்படி ஏற்பட்டாலும் இந்தியத் தூதரகத்தின் உதவி கிடைக்கும். மாறாக போலி ஏஜென்ட்கள் மூலம் வருபவர்கள், ஏமாற்றப்பட்டால் அவர்கள் மீட்கப்படலாமே தவிர, இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவது கடினம்.

குவைத்தில் வெயில் அதிகம் என்பதால், திறந்தவெளியில் பணியாற்றுபவர்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் நான்கு மணிவரை வேலைபார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக நான்கு மணியிலிருந்து இரவுவரை வேலைபார்க்கலாம், என்கிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன். இவர் குவைத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

குவைத்தில் பணியாளர்கள் தங்குமிடங்கள் எப்படி இருக்கின்றன?

குவைத்தின் அல்-அஹமதியில் இருந்த கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட பிறகு, இங்குள்ள தொழிலாளர்களின் வசிப்பிடங்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. ஆனால், பொதுவாக அங்குள்ள தொழிலாளர் வசிப்பிடங்கள் மோசமாக இருக்காது என்கிறார் மரைக்காயர்.

"தங்கும் இடங்களைப் பொறுத்தவரை, பெரும்பாலான இடங்கள் நன்றாகவே இருக்கும், மிகச் சில இடங்கள் மட்டும் மோசமாக இருக்கலாம். தங்கும் அறைகள் பெரிதாக இருக்கும் என்பதோடு, ஒரு அறையில் இருவர்தான் தங்குவார்கள் என்பதால் பெரிய நெருக்கடியும் இருக்காது. பெரும்பாலும் இதுபோன்ற விபத்துகளுக்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பே இருக்காது. பெரும்பாலும், இதுபோன்ற விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகளாகவே இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்துகூட, சமையலறையில் துவங்கித்தான் பிற இடங்களுக்குப் பரவியிருக்கிறது. ஆகவே, ஒரு தங்குமிடம் நமக்குத் தரப்படும்போது அதை நாம் எப்படி வைத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியமானது," என்கிறார் அவர்.

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மணிகண்டன். "குவைத்தில் பணியாளர்களுக்கான தங்குமிடங்கள் அனைத்துமே பாதுகாப்பானவை. பெரும்பாலும் அவை அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கும். தற்போது நடந்த விபத்தைப் பொறுத்தவரை அதிகாலையில் நடந்ததால், யாரும் கவனிக்காமல் மேல் மாடிவரை பரவிவிட்டது. மற்றபடி, தங்குமிடங்கள் மோசமாகவோ பாதுகாப்பற்றோ இருக்கும் எனச் சொல்ல முடியாது," என்கிறார் மணிகண்டன்.

பொதுவாக, நிறுவனங்கள் தங்குமிடங்களை அளிக்கும் என்றாலும், தொழிலாளர்கள் வெளியில் தங்க விரும்பினால், அதற்கான வாடகையையும் நிறுவனங்கள் தந்துவிடும் என்கிறார் அவர்.

இங்குள்ள தொழிலாளர்களுக்குப் பிரச்சனை ஏற்படும்போது, பொதுவாக இந்தியத் தூதரகமோ, துணைத் தூதரகமோ நன்றாகவே உதவுகின்றன. ஆனால், ஒருவர் பணியிடம் பிடிக்காமல் அங்கிருந்து ஓடிவந்து தூதரகத்தை அணுகினால், தங்குமிடம் கிடைப்பது சிக்கலாகிவிடுகிறது. "அதுபோன்ற தருணங்களில் மட்டும், இந்தியத் தூதரங்கள் தங்குமிடங்களை தற்காலிகமாக ஏற்பாடு செய்துதந்தால் நன்றாக இருக்கும். இதனை ஒரு கோரிக்கையாக வைக்கிறோம்," என்கிறார் மரைக்காயர்.