வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (21:39 IST)

எஃப்ஐஆர் - பட விமர்சனம்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், பார்வதி, கௌதம் நாராயணன், ரெய்ஸா வில்ஸன்; ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்; இசை: அஸ்வந்த்; இயக்கம்: மனு ஆனந்த்.
 
இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என முடிவுகட்டிவிடக்கூடாது. மாறாக, அவர்கள் உயிரைக் கொடுத்தும் நாட்டையே காப்பார்கள் என்று ஒரு கதையை சுவாரஸ்யமான திரைப்படமாகக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், அது நடந்திருக்கிறதா?
 
சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் இர்ஃபான் (விஷ்ணு விஷால்) ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். அவருடைய தாயார் ஒரு காவல்துறை அதிகாரி. இர்ஃபான் தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்போவதாக செய்தி வெளியாகிறது. இந்த நிலையில், ஹைதராபாதில் வைத்து கைது செய்யப்படுகிறார் இர்ஃபான்.
 
மேலும், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்தியாவில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அபுபக்கரும் அவர்தான் என முடிவு செய்கிறது என்ஐஏ.
 
இந்நிலையில், சென்னையில் ஒரு பயங்கரமான தாக்குதலுக்கு திட்டமிடுகிறது ஐஎஸ்ஐஎஸ். உண்மையிலேயே இர்ஃபான் யார், அவருடைய நோக்கம் என்ன, ஐஎஸ்ஐஎஸால் வெற்றிகரமாக தாக்குல் நடந்த முடிந்ததா என்பதெல்லாம் மீதிக் கதை.
 
90களில் இருந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி பல தமிழ் படங்கள் வெளியான நிலையில், சினிமாவில் பயங்கரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் என்ற போக்கை மாற்ற விரும்பியிருக்கிறார் இயக்குநர். ஆனால், அவர் செய்த தவறு என்ன? நல்ல எண்ணம்தான். ஆனால், அது வடிவம் பெறும்போது சற்று குழப்பமாகியிருக்கிறது.
 
கதாநாயகன் இர்ஃபான் பற்றிய முக்கியமான ரகசியத்தை பார்வையாளர்களுக்கு மறைக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். சரிதான். ஆனால், காவல்துறை அதிகாரியாக இருக்கும் அவரது அம்மாவுக்குக்கூடவா அவரைப் பற்றித் தெரியாது. தேசியப் புலனாய்வு முகமையின் உயர் அதிகாரிகள் ஒன்றிரண்டு பேரைத் தவிர யாருக்குமேவா அவரைப் பற்றித் தெரியாமல் அடித்துத் துவைக்கிறார்கள்?
 
படம் நெடுக என்ஐஏ புலனாய்வு செய்யும் விதம் படுதிராபையாக இருக்கிறது. படம் பார்க்கும் சாதாரண ரசிகனுக்கே தோன்றும் விஷயங்களில் எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தின் காட்சி அமைப்புகளைப் புரிந்துகொள்ள அதீத கவனம் தேவைப்படுகிறது. பல தருணங்களில் பாத்திரங்கள் பேசுவதும் புரிவதில்லை.
 
இந்தப் படத்தில் முக்கியமான இஸ்லாமிய கதாபாத்திரங்கள் மூன்று பேர். கதாநாயகன், அவனுடைய தாயார், ஒரு புலனாய்வு அதிகாரி. மூன்று பேருமே உயிரைக் கொடுத்து தங்கள் தேசப்பற்றை நிரூபிக்கிறார்கள். மேலும், கதாநாயகன் சாகும்போது ஒரு பயங்கரவாதியாகத்தானே சாகிறான். அவனைப் பற்றி அரசாங்கத்தின் மேல்மட்டத்திலிருப்பவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதே? இஸ்லாமியர்களைப் பற்றி பொது மனதில் படிந்திருக்கும் எண்ணத்தை மாற்ற வேண்டுமென்றால், பொதுமக்களிடம்தானே அவர்களின் தியாகம் சொல்லப்பட வேண்டும். உயரதிகாரிகளுக்கு மட்டும் தெரிந்து என்ன பயன்?
 
விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனனும் நன்றாகவே நடித்திருக்கிறார். படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருப்பதால், மற்றவர்களின் பங்களிப்பு பெரிதாக பதிவாகவில்லை. ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா ஆகியோரது உழைப்பு படம் முழுக்க தென்படுகிறது. பின்னணி இசை ஓகே.
 
விஷ்ணு விஷாலுக்கு இது ஒரு முக்கியமான படம். ஆனால், இயக்குநருக்கும் முக்கியமான படமெனச் சொல்ல முடியாது.