1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 அக்டோபர் 2021 (14:06 IST)

அரண்மனை - 3: சினிமா விமர்சனம் - ஆர்யா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, யோகி பாபு படம் எப்படி?

நடிகர்கள்: ஆர்யா, சுந்தர் சி, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, யோகி பாபு, விவேக், மனோபாலா, சம்பத், நளினி, மைனா நந்தினி, அமித் பார்கவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, மதுசூதன் ராவ்; இசை: சத்யா சி; இயக்கம்: சுந்தர் சி.

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2014ல் துவங்கிய அரண்மனை வரிசையின் மூன்றாவது படம் இது. இரண்டாவது படம் வெளிவந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் கதை என்னவென்று தனியாகச் சொல்ல வேண்டாம். முதலிரண்டு படங்களில் இருந்த அதே கதை, சிறிய மாறுதல்களுடனும் வேறு நடிகர்களுடனும் வெளியாகியிருக்கிறது.

ஓர் அரண்மனை. அந்த அரண்மையில் இருக்கும் பெண் அநியாயமாகக் கொல்லப்பட்டுவிட, அந்தப் பெண் சம்பந்தப்பட்டவர்களைப் பழிவாங்க துரத்துகிறார். சுந்தர் சி, பெரிய சாமி சிலையின் முன்பாக பூஜைசெய்து, நிறையப் பேருடன் பாட்டுப்பாடி எல்லோரையும் காப்பாற்றுகிறார். முதலிரண்டு படங்களில் இருந்ததைப் போலவே இந்தப் படத்திலும் சுந்தர் சியின் பெயர் ரவிதான்.

தமிழ் சினிமாவில் ஒரு கதை வெற்றிபெற்றுவிட்டால், அதை முடிந்த அளவு கறந்துவிடுவது வழக்கம்தான். ஆனால், அதற்காக ஓர் அளவுக்கு மேல் கறந்தால் ரத்தம் வந்துவிடாதா? இந்தப் படத்தில் அதுதான் நடந்திருக்கிறது.

கடந்த படத்தில் வந்ததைப் போலவே முதலில் குழந்தையிடம் படம் வரைந்து, பந்து விளையாடி, பிறகு நகைச்சுவை நடிகர்களுக்கு முகம் காட்டி, இறுதியாக கதாநாயகனிடம் வந்து நிற்கிறது பேய். முந்தைய படங்களில் இருந்தவர்களில் ஆண்ட்ரியா, மனோபாலா, சுந்தர் சியைத் தவிர பிற நடிகர்கள் எல்லோரும் மாற்றப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.

ஆனால், படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் கவனத்தைத் தக்கவைக்கும்படி எதுவுமே நடப்பதில்லை. பாத்திரங்களின் அறிமுகம், பேய்க்கு ஓர் அறிமுகம், இரண்டு பாடல்கள் என்று நேரத்தை நகர்த்தியிருக்கிறார்கள். இரண்டாம் பாதியில்தான் பேய் கொஞ்சம் மனதுவைத்து முழுமையாகக் களமிறங்கியிருக்கிறது.

கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, பேய்க்கான காரணம் என எதிலுமே புதுமை இல்லாததால், பேயை கதாநாயகன் எப்படி ஒடுக்கப்போகிறார் என்பதையெல்லாம் முன்பே யூகித்துவிட முடிகிறது. இதனால், முழுப் படமுமே சலிப்பூட்டும்வகையில்தான் நகர்கிறது.

யோகிபாபு, மனோபாலா, விவேக், மைனா நந்தினி கூட்டணி படம் நெடுக வந்து சிரிக்க வைக்க முயல்கிறார்கள். சில இடங்களில் அவர்களுக்கு வெற்றிகிடைக்கிறது. இவர்களும் இல்லாவிட்டால், பேயிடம் அடிவாங்கும் யோகிபாபு கதிதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும்.

இந்தப் படத்தில் ஆர்யாவும் இருக்கிறார். திடீர் திடீரென தலைகாட்டி மறைவதோடு அவரது வேலை முடிந்துவிடுகிறது. சார்பட்டா படத்தில் நடித்த ஆர்யாவுக்கு இப்படி ஒரு சுவாரஸ்யமே இல்லாத பாத்திரம்! ஆண்ட்ரியாவுக்கு மட்டும் நடிப்பதற்கு கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு எல்லாம் ஒரே டெம்ப்ளேட்தான் என்பதால் சொல்வதற்கு எதுவுமில்லை.

சுந்தர் சியிடம் ஒரே ஒரு கேள்வி: ரசிகர்களை விடுங்கள், பேய்கள் பாவமில்லையா?