1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (15:32 IST)

ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் - திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: டாம் ஹாலண்ட், ஜென்டயா, பெனிடிக்ட் கம்பர்பேட்ச், ஜேகப் படலோன், மரிசா டோமெய்; இயக்கம்: ஜோன் வாட்ஸ்.
 
இப்போது Spider - Man வரிசை படங்களை எடுப்பதில் பெரிய சவால் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் திரும்பத் திரும்ப ஒரே கதையோடு வெவ்வேறு நடிகர்களை வைத்துக்கொண்டு பல ஸ்பைடர் மேன் படங்கள் வந்துவிட்டன. ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வேண்டுமென்றால், ஸ்பைடர் மேனை வைத்துக்கொண்டு புதிதாகவும் வித்தியாசமாகவும் ஏதாவது செய்தாக வேண்டும். இயக்குனர் ஜோன் வாட்ஸ் இந்தப் படத்தில் அதைச் சாதித்திருக்கிறாரா?
 
இந்தப் படத்தின் கதை இதுதான்: Spider Man Far from Home படம் முடிந்த இடத்திலிருந்து இந்தப் படத்தின் கதை துவங்குகிறது. பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர் மேன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இதனால் பீட்டர் பார்க்கரும் அவன் நண்பர்களும் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில்கூட இடம் கிடைப்பதில்லை. இதனால், தான்தான் ஸ்பைடர் மேன் என்பதை ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மறந்துவிடும்படி செய்ய டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் உதவி கேட்கிறான் பீட்டர்.
 
அவர் அந்த முயற்சியில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சனையில், பல்வேறு பிரபஞ்சங்கள் திறந்துகொள்கின்றன. அங்கிருந்து க்ரீன் காப்லின், மணல் மனிதன், மின்சார மனிதன், பல்லி மனிதன் போன்றவர்கள் இந்த பிரபஞ்சத்திற்குள் வந்துவிடுகிறார்கள். அவர்கள் இதே பிரபஞ்சத்தில் இருந்து அட்டகாசம் செய்யவும் விரும்புகிறார்கள். டாக்டர் ஸ்ட்ரேஞ் உதவியுடன் ஸ்பைடர் மேனால் அவர்களைத் திருப்பி அனுப்ப முடிந்ததா என்பது மீதிக் கதை.
 
சந்தேகமே இல்லாமல் சமீபத்தில் வெளிவந்த ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் மிக விறுவிறுப்பான திரைப்படம் என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். ஸ்பைடர் மேன் வரிசை திரைப்படங்களுக்கு என ஒரு கதை இருக்கிறது: பீட்டர் பார்க்கருக்கு எப்படி ஸ்பைடர் மேன் ஆகும் திறமை வந்தது என்ற சம்பவங்களில் ஆரம்பித்து, ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பகுதி நேர வேலை பார்ப்பது, பாவப்பட்ட அத்தை அல்லது மாமாவை வைத்துக் கொண்டு வில்லன்களைச் சமாளிப்பது என்று பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிருந்த கதை அது. ஆகவே, இந்தப் படத்தில் புதுவிதமான பாணியில் இயக்குனர் கதையை நகர்த்த நினைத்ததே மிகுந்த புத்துணர்ச்சி தருகிறது.
 
ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல படம் துவங்கும்போதே அதிரடி காட்சிகளோடு துவங்கி, சீரான இடைவெளியில் அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள், நகைச்சுவை என்று விறுவிறுப்பாக நகர்கிறது படம். கடந்த இருபதாண்டுகளில் வெளிவந்த அத்தனை ஸ்பைடர் மேன் திரைப்படங்களையும் பார்த்திருந்தாலும், இன்னமும் கூடுதலாக இந்தப் படத்தை ரசிக்க முடியும்.
 
படத்தில் டாக்டர் ஆக்டோபஸ், க்ரீன் காப்லின், மணல் மனிதன், மின்சார மனிதன், பல்லி மனிதன் என ஐந்து வில்லன்கள். ஒரு அட்டகாசமான சூப்பர் ஹீரோவும் விசித்திர சக்திகளை உடைய ஐந்து வில்லன்களும் இருந்தால் ஆக்ஷன்களுக்கு கேட்கவா வேண்டும்? இந்த வில்லன்களின் பின்புலம் தெரிந்திருந்திருந்தால், இவர்கள் வரும் காட்சிகளில் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் கூடுதலாக சில விஷயங்கள் இருக்கும். ஆனால், அப்படித் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இந்தப் படத்தில் சொல்லப்படும் சிறிய முன்கதைச் சுருக்கத்தை வைத்தும் அவர்கள் அட்டகாசங்களைப் படத்தில் ரசிக்க முடியும்.
 
படத்தின் பிற்பகுதியில் வேறு ஒரு சுவாரஸ்யத்தையும் இயக்குநர் வைத்திருக்கிறார். அது அட்டகாசமாக ஒர்க் ஆகியிருக்கிறது. நடிகர்கள், க்ராஃபிக்ஸ் காட்சிகள், பின்னணி இசை எல்லாம் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதால், இந்த வருடத்தின் சிறந்த சூப்பர் ஹீரோ படம் என்றுகூட இந்தப் படத்தைச் சொல்லலாம்.