வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (18:03 IST)

விராட் கோலி முறியடித்த சச்சின் சாதனை: இந்திய மண்ணில் 21வது ஒரு நாள் கிரிக்கெட் சதம்

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை இடையேயான  3வது ஒருநாள் போட்டியில் இந்திய ஆட்டக்காரர் விராட் கோலி சதம் அடித்தார். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை அவர் முறியடித்தார். 
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. டி20 தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

80 பந்துகளில் சதம் விளாசி அசத்திய அவர், முடிவில் 87 பந்துகளில் 113 ரன் சேர்த்து கடைசி ஓவர்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 12 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் அவர் விளாசியிருந்தார். இதில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 
 
அடுத்ததாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 
 
 
ஏற்கனவே, 3க்கு 2 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா,  சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் ஷர்மா, 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி களமிறங்கினார். களத்தில் இருந்த இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சுப்மன் கில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
 
கடந்த ஆட்டத்தில் 4 ரன்களில் வெளியேறிய விராட் கோலி, இந்த ஆட்டத்தில் மிகவும் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்தப் பின் தனது அதிரடியை தொடர்ந்த விராட் கோலி, அடுத்த 21 பந்துகளில் அரை சதம் அடித்து 150 ரன்கள் என்னும் இலக்கை எட்டினார். இறுதி வரை ஆட்டம் இழக்காத அவர், 110 பந்துகளில் 166 ரன்களுடன் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை எடுத்தது. இலங்கை தரப்பில் லஹிரு குமார மற்றும் கசூன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும் கோலியின் இந்த இன்னிங்க்ஸ் அமைந்துள்ளது. தான் விளையாடிய கடந்த 4 ஆட்டங்களில் விராட் கோலி அடித்த 3வது சதம் இதுவாகும். கடந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதம் (113) கண்ட அவர், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம்(113), 2வது போட்டியில் 4 ரன்கள், தற்போது சதம் என எடுத்துள்ளார். 
 
சச்சினின் சாதனை முறியடிப்பு
 
ஒருநாள் போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் 12,600 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 
 
சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை 21 சதங்களுடன் கோலி முந்தியுள்ளார்.  இந்த மைல்கல்லை எட்ட சச்சினுக்கு 160 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், கோலி 100 போட்டிகளிலேயே அதனை தாண்டியுள்ளார். 
 
ஒரு நாள் போட்டி: சதத்தில் சச்சினை விரைவில் முந்த வாய்ப்பு
 
ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா 29 சதங்களுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் கோலியைப் பின்தொடர்கிறார். 
 
கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 46-வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் 74-வது சதமாகவும் இது பதிவாகியுள்ளது.