1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (14:53 IST)

'வந்தே பாரத்' விமானங்களின் கட்டணம் உயர்வு: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி ஹிந்து: விமான கட்டணம் உயர்வு; வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் எனும் திட்டத்தின் மூலம் விமான சேவையை மத்திய அரசு இயக்கி வருகிறது.
இந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி முதல் இந்த விமானங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் கிக்கியுள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செளதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கேரளா வருவதற்கு 18,760 ரூபாயாக இருந்த கட்டணம், 33,635 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு 107 விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.
ஆனால், நாடு திரும்பக் காத்திருக்கும் மக்களுக்கு இந்த கட்டண உயர்வு இடியாக அமைந்துள்ளது என தி ஹிந்து செய்தி கூறுகிறது.

தினத்தந்தி: தமிழகத்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசில் ஏ 1, ஏ2, ஏ3, பி 1, பி2 உள்ளிட்ட வகைகள் உள்ளன, அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், கொரோனா வைரசில் சில மாற்றங்கள் ஏற்பட்டு கிளேட் ஏ 1 3 ஐ(Glade A 1 3 i) என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது. மற்ற வகை வைரஸ்களை காட்டிலும் இது தீவிரத்தன்மை கொண்டது என்றும் தமிழகம் தவிர தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கிளேட் ஏ 1 – 3 ஐ வகை வைரசின் தாக்கம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து பரவி இருக்கலாம்.

கேரளாவில் ஆரம்பத்தில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா பாதிப்பின் தன்மை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸை ஒத்துள்ளது.அதே நேரத்தில் ஐதராபாத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவை (கிளாட் ஐ / ஏ3ஐ) சீனாவில் அல்ல, தென்கிழக்கு ஆசியாவில் எங்காவது தோன்றியிருக்கலாம் என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி: பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு?

கொரோனா சமூக முடக்கம் காரணமாகத் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்லூரி மாணவர்கள் குறிப்பாக இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் தங்களது பருவத்தேர்வுகளை எழுக முடியாத நிலையில் உள்ளனர். தமிழக பொறியியல் கல்லூரிகளுகளில் இறுதியாண்டில் மட்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக, 30% மாணவர்களுக்குத் தேர்வு மையங்களில் தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா: மாலத்தீவிலிருந்து திரும்பிய 700 இந்தியர்கள்

மாலத்தீவில் கொரோனா முடக்கம் காரணமாகச் சிக்கியிருந்த 700 இந்தியர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளனர் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த கப்பலில் 655 ஆண்களும், 45 பெண்களும் வந்துள்ளனர். இதில் 470க்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்ததாலும், மற்றவர்கள் சொந்த காரணங்களுக்காகவும் இந்தியா திரும்பியுள்ளனர்.

இதில் 508 பேர் தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலோனோர் (158) கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள்.