1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (14:06 IST)

ஆபாச இணையதளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் - சட்டம் இயற்றிய இங்கிலாந்து

இங்கிலாந்தில் உள்ள ஆபாச இணையதளங்கள், புதிய இணைய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் தங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்பதைச் சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
 
இணைய பாதுகாப்பு வரைவு மசோதாவின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தச் சட்டம் ஆபாசமான விஷயங்களில் இருந்து குழந்தைகளுக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
பயனர்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளாக, கிரெடிட் கார்ட் வைத்திருப்பதை நிரூபிக்கவோ அல்லது மூன்றாம் தரப்பு சேவையின் மூலம் தங்கள் வயதை உறுதிப்படுத்தவோ மக்கள் கேட்கப்படுவார்கள்.
 
இதன்படி செயல்படத் தவறும் தளங்களுக்கு, அவற்றின் உலகளாவிய வருவாயில் 10% வரை அபராதம் விதிக்கப்படும். இணைய பாதுகாப்பு மசோதா அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பயனர்களைப் பாதுகாக்கும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
சிறார்கள் இணையத்தில் பொதுவாகக் கிடைக்கும் விஷயங்களை அணுகுவது மிகவும் எளிதானது என்ற அச்சத்தின் காரணமாக, குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் நீண்டகாலமாக ஆபாச தளங்களில் வயது சரிபார்ப்பு வசதி வேண்டுமெனக் கோரி வருகின்றன. இதேபோன்ற நடவடிக்கைகள் முன்னரும் முன்மொழியப்பட்டன. ஆனால், 2019-ல் கைவிடப்பட்டன.
 
11 முதல் 13 வயதுடையவர்களில் பாதி பேர் சிலநேரங்களில் ஆபாசத்தைப் பார்த்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. குழந்தைகளுடன் பணிபுரியும் வல்லுநர்கள், இது அவர்களுக்கு உடலுறவு மற்றும் அதற்கான சம்மதம் குறித்த ஆரோக்கியமற்ற பார்வைகளைக் கொடுக்கிறது. அவர்களை பாலியல் வேட்டையாடிகளிடையே ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் அவர்கள் மீதான துன்புறுத்தல் குறித்துப் புகாரளிப்பதைத் தடுக்கிறது என்று கூறுகின்றனர்.
 
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் கிறிஸ் பில்ப், "குழந்தைகள் பார்க்கக்கூடாத விஷயங்களை தங்கள் குழந்தைகள் பார்ப்பதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்ற மன அமைதி பெற்றோருக்குக் கிடைக்கவேண்டும்," என்று வயது சரிபார்ப்பு திட்டங்களை அறிவித்தபோது கூறினார்.
 
விதிகளைப் பின்பற்றாத இணையதளங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், ஆஃப்காம் கட்டுப்பாட்டாளர் அந்த இணையதளங்கள் இங்கிலாந்தில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கலாம். ஆஃப்காமுடன் ஒத்துழைக்கத் தவறினால், இந்த இணையதளங்களின் முதலாளிகளும் குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக நேரிடும்.
 
முன்பு, பயனர்கள் உருவாக்கிய உள்ளடக்கங்களை அனுமதிக்கும் வணிகரீதியான ஆபாச தளங்கள் மட்டுமே இணைய பாதுகாப்பு மசோதாவின் கீழ் இந்த வரம்பில் இருந்தன. ஆனால், இந்த மசோதாவின்படி அனைத்து வணிக ஆபாச தளங்களுமே இந்தக் கட்டுப்பாடுகளின்படி செயல்படவேண்டும்.
 
குழந்தைகள் மீதான வன்கொடுமையைத் தடுப்பதற்கான தேசிய சங்கத்தைச் சேர்ந்த (NSPCC) ஆண்டி பர்ரோஸ், இணைய தீங்குகள் மசோதாவை வலுப்படுத்துவதை வரவேற்றார். ஆனால், அது போதுமான அளவுக்குச் செல்லவில்லை என்றும் கூறினார்.
 
"இணைய பாதுகாப்பு மசோதாவில் உள்ள இடைவெளிகளில் ஒன்றை சரிசெய்ய ஆபாச படங்கள் எங்கு எடுக்கப்பட்டாலும் அவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்த்தது சரிதான்," என்று அவர் கூறினார்.
 
"முக்கியமாக, அவர்கள் எங்கள் கவலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளனர். அதோடு, சில ஆபத்தான தளங்களைத் தடுத்தாலும் குழந்தைகள் மிகவும் தீங்கு விளைவிக்கும் விஷயங்கள அணுகுவதை அனுமதித்த, 'ஒன்லி ஃபேன்ஸ்' என்ற குறுக்கு வழியை மூடியுள்ளனர்.
 
ஆனால், துஷ்பிரயோகம் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிடம் இருந்து குழந்தைகளுக்கு விரிவான பாதுகாப்பை வழங்குவது இந்தச் சட்டத்தில் இன்னும் குறைவாகவே உள்ளது. மேலும், அரசாங்கத்தின் சொல்லாட்சிகளுடன் பொருந்துவதற்கு குறிப்பிடத்தக்க வலுவூட்டல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும்."
 
இணையத்தில் ஆபாசமான உள்ளடக்கத்தை அணுகுவதற்கு முன், மக்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் முன்மொழிவுகள் டிஜிட்டல் பொருளாதாரச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அரசு அவற்றை செயல்படுத்தவில்லை.
 
கடந்த ஆண்டு இணைய பாதுகாப்பு மசோதாவின் முதல் வரைவு அறிவிக்கப்பட்டபோது, நீண்ட காலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட விஷயங்கள் அதில் இல்லை என்பதைக் கண்டு செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
தனியுரிமை குறித்த கவலைகள்
புதிய விதிகளுக்கு எவ்வாறு இணங்குவது என்பதை நிறுவனங்கள் முடிவு செய்ய வேண்டும். ஆனால், குறிப்பிட்ட வயது சரிபார்ப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆஃப்காம் பரிந்துரைக்கலாம்.
 
இருப்பினும் ஒருவரின் வயதைச் சரிபார்க்கும் நோக்கத்தோடு பொருத்தமற்ற தரவுகளை நிறுவனங்கள் செயலாக்கவோ சேமிக்கவோ கூடாது என்றும் அரசு கூறுகிறது.
 
இணைய சூதாட்டம் போன்ற துறைகளில் வயது சரிபார்ப்பு தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு இருந்தபோதிலும், அது தனியுரிமை அபாயங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் இன்னமும் உள்ளது.
 
ஆபாசத்தை பயன்படுத்துபவர்களின் தரவுத் தளமானது ப்ளாக்மெயில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய ஹேக்கிங் இலக்காக இருக்கும் என்று பிரச்சாரகர்கள் எச்சரித்துள்ளனர்.
 
டிஜிட்டல் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்க பிரச்சாரம் செய்யும் ஓபன் ரைட்ஸ் குழுவைச் சேர்ந்த ஜிம் கில்லாக், "குழந்தைகளின் பாதுகாப்பிற்கான சிறியளவு நடைமுறை பயன்களையும் மக்களின் தனியுரிமைக்கு அதிக தீங்குகளையும் விளைவிக்கும்" அதேநேரத்தில் வயது சரிபார்ப்பு நிறுவனங்களுக்கு இந்த விதிகள் பயனளிக்கும் என்று கூறினார்.
 
"இந்த முன்மொழிவு ஆபாசங்களைப் பார்ப்பதைக் கண்காணிப்பதில் இருந்தும் விவரக் குறிப்பிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
"தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பற்றிய அதே அடிப்படைத் தவறுகள் மீண்டும் செய்யப்படலாம் என்று நாம் கருதவேண்டும்."
 
ஆனால், வயது சரிபார்ப்பு வழங்குநர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் இயன் கோர்பி, "அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள், அவர்கள் பார்வையிடும் வலைதளங்களுக்கு அவற்றை அணுகுவோரின் அடையாளத்தை வெளியிடாமல் இணையத்தில் ஒருவரின் வயதை நிரூபிக்கப் பலவிதமான வழிமுறைகளை உருவாக்கியுள்ளன" என்கிறார்.
 
"தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களுக்கு இணங்க தணிக்கை செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்ட சுயாதீனமான, மூன்றாம் தரப்பு நிறுவனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், பெரியவர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும்போது, தங்கள் தனியுரிமையும் பாதுகாக்கப்படும் என்று நம்பலாம்."