2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா

us
Last Modified சனி, 16 ஜூன் 2018 (12:55 IST)
கடந்த 6 வாரங்களில் அமெரிக்க எல்லையில் சுமார் 2,000 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற வயதுக்குவந்தோர் கைது செய்யப்படுவர்' என்கிற அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கைதாகின்றவர்கள் உடன் வந்த குழந்தைகள் அவர்களின் பராமரிப்பில் இருந்து அகற்றப்பட்டு விடுகின்றனர்.இந்தப் பிரச்சனை அமெரிக்க அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.எள்ளளவும் சகிப்புதன்மையற்ற இந்த அணுகுமுறையை நியாயப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை அட்டர்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் திருவிவிலியத்தை (பைபிள்) மேற்கோள்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோர் குற்றவியல் நடைமுறையில் தண்டிக்கப்படுகின்றனர். சட்ட விரேதமாக எல்லையை கடந்து அமெரிக்காவில் நுழைவது முதல்முறையாக இருந்தால், அதனை தவறான நடத்தை குற்றச்சாட்டாக கருதும் நீண்டகால கொள்கை முடிவில் இருந்து இந்த நடவடிக்கை மாறுபட்டதாகும்.வயதுவந்தோர் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகிறபோது, அவர்களோடு வருகின்ற குழந்தைகள் பிரிக்கப்பட்டு, ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த குழந்தைகளின் விவரங்கள்

ஏப்ரல் 19 முதல் மே மாதம் 31ம் தேதி வரை கைதான 1,940 வயதுவந்தோரிடம் இருந்து 1,995 குழந்தைகள் பிரிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாக பராமரிக்கப்படுவதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட இந்த குழந்தைகளின் வயது பற்றிய தகவல்கள் வழங்கப்படவில்லை.இந்த குழந்தைகள் அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவை துறையின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளனர்.
பெற்றோரின் வழக்குகளில் தீர்வு காண அதிகாரிகள் முயலுகிறபோது, இந்த குழந்தைகள் அரசு தடுப்பு முகாம்கள் அல்லது குழந்தை வளர்ப்பு மையங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
குழந்தைகளை இவ்வாறு பிரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற குடியேறிகள் தண்டனையில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக குழந்தைகள் இருக்க முடியாது என்று செசன்ஸ் தெரிவித்திருக்கிறார். புனித பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்திலுள்ள ஒரு வசனமான அரசின் சட்டங்களுக்கு கீழ்ப்படிவதை மேற்கோள்காட்டி அட்டர்னி ஜெனரல் பேசியுள்ளார்.

அரசியல் மறுமொழி

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த கொள்கையை குடியரசு கட்சியை சோந்த சிலர் ஆதரிக்கின்றனர். பிறர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இந்த நடவடிக்கையை தான் விரும்பவில்லை என்று அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பால் ராயன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இவ்வாறு பெற்றோரையும், குழந்தைகளையும் பிரிக்கின்ற நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருகின்ற குடிவரவு சட்ட வரைவை குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். இந்த வரைவின்படி, சட்ட விராதமாக குடியேறுவோர் குடும்பமாக தடுத்து வைக்கப்படுவர்.


குழந்தைகளாக அமெரிக்காவுக்கு வந்து, தற்போது சரியான ஆவணமில்லாமல் இருக்கின்ற 18 லட்சம் பேருக்கு குலுக்கல் முறையிலான பச்சை கார்டு (கிரீன் கார்டு) வழங்கும் நடவடிக்கையை நீக்கிவிட்டு, அத்தகையோருக்கு பாதுகாப்பு வழங்கவும், எல்லை பாதுகாப்பில் கூடுதலாக 2 கோடியே 50 லட்சம் டாலர் அதிகமாக்கவும் இந்த சட்ட வரைவில் முன்மொழியப்பட்டுள்ளது.
மிதவாதிகளையும், பிற்போக்குவாதிகளையும் சமரசம் செய்கின்ற இந்த சட்ட வரைவு, அடுத்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று தெரிகிறது.


அதிபர் இதற்கு ஆதரவு அளிப்பார் என்று குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தாலும், இத்தகைய சமரச சட்ட வரைவில் தான் கையெழுத்து போடபோவதில்லை என்று வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.ஆனால், அதிபர் டிரம்ப் தவறுதலாக பேசிவிட்டார் என்றும், இந்த நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவு அளிப்பார் என்றும் பின்னர் வெள்ளை மாளிகை விளக்கமளித்தது. குடியேறிகளின் குழந்தைகளை வைக்க டெக்ஸாஸிலுள்ள ஓரிடத்தை தெரிவு செய்திருப்பதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :