திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (21:17 IST)

நிலத்தடி வெப்பநிலை மாற்றம்: சென்னை போன்ற நகரங்களில் கட்டடங்களுக்கு என்ன ஆபத்து?

சிகாகோ நகரம், நிலத்தடி வெப்பநிலை மாற்றம் எவ்வாறு கட்டிடங்களின் மண் மற்றும் அடித்தளத்தை பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஒரு மாதிரியாக பயன்படுத்தப்பட்டது.
 
 
உலகம் முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நிலத்தடி வெப்பநிலை மாற்றத்தைப் பெரிய நகரங்களுக்கு அடியில் பதுங்கியிருக்கும் 'அமைதியான ஆபத்து' என்று வரையறுக்கின்றனர்.
 
சமீப காலம் வரை, பொதுமக்களின் குடியிருப்புக்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் அதன் விளைவுகள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை.
 
நிலத்தடி நீர் மாசுபாடு, ஆஸ்துமா மற்றும் மாரடைப்பு போன்ற சுகாதார நிலைமைகளுக்கும் அதற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
ஆனால், அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு, நகர்ப்புறங்களில் பூமிக்குக் கீழ் உள்ள மண்ணின் மாற்றத்துடன் இந்த நிகழ்வை முதன்முறையாக தொடர்புபடுத்தி ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.
 
"வெப்பநிலை மாறுபாடுகளின் விளைவாக நிலம் சிதைவடைவது மட்டுமின்றி இந்த மாறுபாடுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிவில் கட்டமைப்புகள் எதுவும் இல்லை," என்று ஆராய்ச்சிக்குழுவின் தலைவர், சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் அலெஸாண்ட்ரோ ரோட்டா லோரியா கூறுகிறார் .
 
ஆனால், இந்த அச்சுறுத்தலையும் மக்களுக்குத் தேவையான ஆற்றலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறுகிறார். ரோட்டா லோரியாவின் கூற்றுப்படி, இந்த வெப்பத்தை சரியான சூழ்நிலையில் அறுவடை செய்தால் அதை ஒரு ஆற்றல் வளமாக பயன்படுத்தமுடியும்.
 
நிலத்தடி வெப்பநிலை மாற்றம் என்றால் என்ன?
"நிலத்தடி வெப்பநிலை மாற்றம் என்பது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே வெப்பநிலை அதிகரிப்பதை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர்," என்று பிபிசி முண்டோவுடனான உரையாடலில் ரோட்டா லோரியா சுருக்கமாகக் கூறுகிறார்.
 
"இது நிலத்தடி தட்பவெப்ப நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது. ஆனால் இது பூமியில் ஏற்படுத்தப்படும் மனிதத் தவற்றின் மற்றொரு விளைவாக இருந்தாலும், மேற்பரப்பில் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை," என்று அவர் கூறுகிறார்.
 
உலகெங்கிலும் உள்ள பல நகர்ப்புறங்களில், அடித்தளங்கள், நிலத்தடி போக்குவரத்து அமைப்புகள், கார் நிறுத்துமிடங்கள், வெப்பமூட்டும் நெட்வொர்க்குகள் மற்றும் கட்டுமானப் பொருட்களிலிருந்து பூமியின் மேற்பரப்புக்குக் கீழே வெப்பம் தொடர்ந்து பரவுகிறது, அவை பகலில் வெப்பத்தை உறிஞ்சி தக்கவைத்து இரவில் வெளியிடுகின்றன.
 
அதனால்தான் நகரங்கள் பொதுவாக கிராமப்புறங்களை விட வெப்பமானவை என்பதுடன் இந்த நிகழ்வின் விளைவுகளை அதிகம் வெளிப்படுத்துகின்றன.
 
நிலத்தடி காலநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் சுரங்கப்பாதை வழித் தடங்களில் சிதைவுகளை ஏற்படும்
 
இது நகரங்களை எவ்வாறு பாதிக்கிறது?
நிலத்தடி வெப்பநிலை மாற்றம் பற்றிய முதல் ஆய்வுகள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன.
 
இந்த வெப்பநிலை மாறுபாடுகள் சாதாரண தாவர வளர்ச்சி, நிலத்தடி நீர் பாயும் விதம், மக்களின் ஆரோக்கியம் மற்றும் நிலத்தடி போக்குவரத்து பாதைகளின் நிலை ஆகியவற்றை பாதிக்கலாம். இது ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
 
ரோட்டா லோரியாவின் ஆய்வுகள் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டுமானங்கள் மற்றும் உள்கட்டமைப்பில் இந்த நிகழ்வின் விளைவுகள் குறித்து கவனம் செலுத்துகின்றன.
 
பூமியின் மேற்புறத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள், நெறிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களின் செயல்பாடுகள் போன்ற விஷயங்கள் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதன் விளைவாக மாபெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் இந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
 
மக்களின் பாதுகாப்பு குறித்து இப்போதைக்கு யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
 
“ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுவது போல் இந்த பாதிப்பு ஏற்படாது. ஆனால் இந்த கட்டமைப்புகள் மெதுவாக சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றன. இது போன்ற மாற்றங்கள் மெதுவாக நடைபெறும் போது விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கலாம், ஆனால் அது போன்ற பாதிப்புகள் ஏற்பட நீண்ட காலம் ஆகும்,” என்கிறார் அவர்.
 
 
பூமியின் மேற்பரப்புக்குக் கீழே வெப்பம் அதிகரித்தல் குறித்து முதன்முதலாக ஆய்வுகளை மேற்கொண்டவர் ரோட்டா லோரியா.
 
"நிலத்தடி வெப்பநிலை மாற்றம் ஏற்கெனவே பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அந்த பாதிப்புகள் பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதால் அவற்றை இந்த நிலத்தடி வெப்பநிலை மாற்றத்துடன் நாம் தொடர்புபடுத்தவில்லை," என்று அவர் மேலும் கூறுகிறார்.
 
பல கட்டிடங்கள், நவீன கட்டிடங்கள் கூட, இன்றைய வெப்பநிலை மாறுபாடுகளை பொறுத்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
 
இருப்பினும், திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டடங்கள் பழைய கட்டமைப்புகளை விட சிறப்பாக சிக்கல்களைச் சமாளிக்கும் என்று ரோட்டா லோரியா கூறுகிறார். உதாரணமாக ஐரோப்பாவின் சில பகுதிகளில், சரியான திட்டமிடலின் மூலம் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இன்னும் தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கின்றன.
 
ஒவ்வொரு நகரத்திற்கும் தனிப்பட்ட முறையில், மதிப்பீடு மற்றும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆனால் லத்தீன் அமெரிக்காவைப் பொறுத்தவரை, ரோட்டா லோரியா கூறும்போது, "அடர்த்தியான நகரங்கள், நிலையற்ற மற்றும் மென்மையான நிலத்தில், நிலத்தடி காலநிலை மாற்றத்தின் விளைவாக சேதமடையும்," என்று சுட்டிக்காட்டுகிறார்.
 
ரோட்டா லோரியாவின் குழுவின் ஆராய்ச்சி முடிவுகளின்படி, அதிக வெப்பம் காரணமாக பூமியின் மேற்பரப்புக்குக் கீழே உள்ள மண் 10 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மேல் நோக்கி விரிவடையும் என்பது மட்டுமின்றி ஒரு கட்டடத்தின் எடை காரணமாக அது 8 மில்லி மீட்டர் வரை கீழ் நோக்கி நகரும் எனத்தெரியவருகிறது.
 
இது சாதாரணமாகத் தோன்றினாலும், பல கட்டடக் கூறுகள் மற்றும் அடித்தள அமைப்புகள் அவற்றின் செயல்பாட்டுத் தேவைகளை எதிர்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும்.
 
 
புதிய கட்டுமானங்கள் இந்த ஆபத்தைக் கணக்கில் கொண்டு, அதற்கேற்றவாறு இப்போதே கட்டடங்களை வடிவமைக்க வேண்டும் என்றும், அதனால் இது போன்ற ஆபத்துகளை நீண்ட காலத்துக்கு குறைக்கலாம் என்றும் ரோட்டா லோரியா கூறுகிறார்.
 
தற்போதுள்ள கட்டடங்களில் சில விஷேசமான செயல்முறைகள் மூலம், தரைக்குள் செல்லும் வெப்பத்தைக் குறைப்பது சாத்தியம் என்றும் அவர் கூறுகிறார்.
 
இது மட்டுமின்றி, இந்த வெப்பமயமாதலைச் சரியான முறையில் பயன்படுத்தினால் அதை பொதுமக்களுக்குத் தேவையான சக்தியாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
 
"வெப்பத்தைச் சேகரித்து கட்டிடங்களுக்குப் பயன்படும் ஆற்றலாக அதை மாற்றுவதற்கான புவிவெப்பத் தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், நிச்சயமாக தேவையை ஈடுசெய்ய போதுமான ஆற்றல் கிடைக்கும்," என்று ஆராய்ச்சியாளர் விளக்குகிறார்.
 
 
அமெரிக்காவின் நியூயார்க் போன்ற நிலத்தடி போக்குவரத்து முறைகளைக் கொண்ட பெரிய, அடர்த்தியான நகரங்கள், நிலத்தடி காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளது.
 
அமெரிக்காவின் சிகாகோ நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 150க்கும் மேற்பட்ட வெப்பநிலை உணரிகளின் வயர்லெஸ் நெட்வொர்க்கை நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழக ஆராய்ச்சிக் குழு நிறுவியது.
 
இந்த நெட்வொர்க்கின் மூலம் கிடைக்கும் தரவுகளை ஒப்பிடுவதற்காக, கட்டடங்களே இல்லாத ஒரு தொலைதூரப்பகுதியில் உள்ள கிரான்ட் பார்க்கிலும் ஒரு வெப்பநிலை உணரியை ஆராய்ச்சிக் குழுவினர் நிறுவினர்.
 
இந்த இரண்டு தரவுகளையும் ஒப்பிட்டபோது, சிகாகோ பெருநகரத்தின் நிலத்தடி வெப்பநிலை கிரான்ட் பார்க்கில் இருந்ததை விட 10 டிகிரி வரை அதிகமாக இருந்ததாகத் தெரியவந்தது.
 
"நாங்கள் சிகாகோவை எங்களது நேரடி ஆய்வகமாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் நிலத்தடி வெப்பநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள அனைத்து அடர்த்தியான நகர்ப்புறங்களுக்கும் பொதுவானது," என்று ரோட்டா லோரியா கூறுகிறார்.
 
இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள அடர்த்திமிக்க ஒவ்வொரு நகரையும் தனித்தனியாக மதிப்பிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
 
அவரது ஆய்வு முடிவுகள் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கும் பொருந்தும். அவரது கூற்றை அடியொற்றிய, இங்கேயும் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்தனியான ஆய்வு அவசியமாகிறது-