நாளிதழ்களில் இன்று: "அப்போலோவில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக நான் கூறவில்லை"

jayalalithaa
Last Modified வியாழன், 19 ஏப்ரல் 2018 (15:49 IST)
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

 
 

"அப்போலோவில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக நான் கூறவில்லை"

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக விசாரணை ஆணையத்தில் நான் கூறவில்லை என்று முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் தெரிவித்ததாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
புதன்கிழமை காலை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சர்கள் சிலர் பார்த்தனர் என்று தான் சாட்சியம் அளித்ததாக தகவல் வெளிவந்ததாக குறிப்பிடும் அவர், எந்த அமைச்சர்கள் பார்த்தார்கள் என்று தனக்கு எதுவும் தெரியாது என்றார்.. எந்த அமைச்சரும் ஜெயலலிதாவை பார்த்ததாக தெரியவில்லை என்றுதான் சாட்சியத்தில் கூறி உள்ளதாக ராமமோகனராவ் தெரிவித்தார் என அச்செய்தி மேலும் விவரிக்கிறது.
 
ஒரே நாளில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நகை விற்பனை
 
அக்‌ஷய திருதியைக்கு பலரும் தங்கம் வாங்கியதால், தமிழக நகை கடைகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகி உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
 
2017ஆம் ஆண்டு அக்‌ஷய திருதியை தினத்தில் தமிழகத்தில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான 25 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் கடந்த ஆண்டு அக்‌ஷய தினத்தில் ஒரு சவரன் 22 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் தற்போது 23 ஆயிரத்து 936 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி கூறுகிறது.
 
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தவில்லை - காங்கிரஸ்
 
தேர்தலுக்காக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தவில்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அந்நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ள காங்கிரஸ், இது தொடர்பான பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து தகவல்களை பெற்று அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வுப்பிரிவுத் தலைவர் பிரவீண் சக்ரவர்த்தி, காங்கிரஸ் மிகப் பெரிய கட்சி என்பதால் இது போன்ற பல நிறுவனங்கள் கட்சியை அணுகுவது வழக்கமானதுதான் என்றார். காங்கிரஸ் கட்சியிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் எந்த சேவையையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :