வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 மே 2023 (22:16 IST)

"திப்பு சுல்தான் - கொல்லப்பட்ட இந்துக்கள், அழிக்கப்பட்ட கலாசாரம்" - படத்தின் டீசர் சொல்ல வருவது என்ன?

"8,000 ஆலயங்களும், 27 தேவாலாயங்களும் தரைமட்டமாக்கப்பட்டன; 40 லட்சம் இந்துக்கள் இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்யப்பட்டனர், அவர்கள் அனைவரும் மாட்டிறைச்சி உண்ண கட்டாயப்படுத்தப்பட்டனர்; ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் சிறை வைக்கப்பட்டனர்; கோழிக்கோட்டில் 2,000 பிராமண குடும்பங்கள அழிக்கப்பட்டன; அவரது ஜிஹாத் போர் 1783-லேயே தொடங்கிவிட்டது ஆகிய வாசகங்களுடன் கடந்த 5ஆம் தேதி ’திப்பு’ திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது.
 
கடந்த வாரம் திரைக்கு வந்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. சுதிப்டோ சென் இயக்கிய அந்தப் படம் இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மேற்கு வங்கத்தில் அந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
வன்முறை மற்றும் பதற்றத்தை தணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கப்பட்ட அந்த படத்தை திரையரங்க உரிமையாளர்களே திரையிடாமல் நிறுத்தி விட்டனர். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரிவிலக்கு அளித்து, அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என வலியுறுத்தின.
 
மேலும், கர்நாடக மாநில தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி, ’தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் இஸ்லாம் பயங்கரவாதத்தை காட்சிப்படுத்தியிருப்பதாகவும், இந்தப் படத்திற்கு எதிராக இருப்பதன் மூலம் காங்கிரஸ் பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்றும் தெரிவித்தார். இந்தப் படம் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அது அடங்குவதற்குள், ‘திப்பு’ திரைப்படம் அடுத்த சர்ச்சையை துவக்கி வைத்திருக்கிறது.
 
 
'திப்பு சுல்தான்' ஒரு மாவீரன், சீர்திருத்தவாதி என காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அழைக்க. அவரை மதவெறியர், இந்து கன்னட எதிர்ப்பாளர் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
 
திப்பு சுல்தான் நவம்பர் 10, 1750-ல் தற்போதைய பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளியில் சுல்தான் ஃபதே அலி சாஹப் என்ற இடத்தில் பிறந்தார். ஹைதர் அலியின் மகனாகப் பிறந்து, மைசூருவின் இந்து ஆட்சியாளர்களான உடையார்களின் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார்.
 
குர்ஆன், இஸ்லாமிய சட்டவியல், மொழிகள், தத்துவம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக திகழ்ந்த திப்பு சுல்தான், 15 வயதிலேயே போர் நுட்பங்களில் தேர்ந்தவராக விளங்கினார்.
 
ஆங்கிலேயர்கள், மராட்டியர்கள் மற்றும் ஐதராபாத் நிஜாம் ஆகியோரின் கூட்டுப் படைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடினார். மேலும், மாபெரும் தேச பக்தராகவும் திப்பு சுல்தான் திகழ்ந்தார்," என்கிறார் வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான என்.வி.நரசிம்மய்யா.
 
நடைமுறையில் இது சாத்தியமா?
அதே நேரம், முதலில் ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை ஒரு 'கொடுங்கோலன்' என்று எழுதினார்கள்.
 
"அவர் ஓர் இஸ்லாமியர் என்பதாலும், மற்ற ஆட்சியாளர்களைப் போலவே தன் எதிரிகளைத் துன்புறுத்திக் கொன்றுள்ளார். அதேபோல், மதமாற்றங்களையும் செய்துள்ளார். ஆனால், அந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டை, கட்டாய மதமாற்றம் செய்து அவரால் ஆட்சி செய்ய முடியாது," என்கிறார் பேராசிரியர் ஜானகி நாயர்.
 
திப்புசுல்தான் செய்த சீர்திருத்தங்கள் இந்திய வரலாற்றில் முக்கியமானவை என வரலாற்றிசிரியர்கள் சொல்லும் நிலையில்தான், ‘திப்பு’ திரைப்படத்தின் டீசர் சர்ச்சைக்குரிய கருத்துகளுடன் வெளியாகியிருக்கிறது.
 
அதில் இடம்பெற்றுள்ள வாசகங்களைப்போல் திப்புசுல்தானை வரலாறு குறிப்பிடவில்லை. அவர் ஆக்கிரமிப்பாளரோ, படையெடுப்பாளரோ அல்ல. பெரும்பாலான இந்திய ஆட்சியாளர்களை விட அவர் பிறந்த மண்ணில் வேரூன்றி இருந்தவர் திப்பு சுல்தான்.
 
அவர் ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் என்று விவரிப்பது, அவர் குறித்த தவறான புரிதல் என பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுகிறார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஜானகி நாயர்.
 
ஆனால், திப்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங், திப்பு சுல்தான் குறித்த உண்மைகளை தான் அறிந்து கொண்ட போது அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறுகிறார். மேலும், தான் இதுமாதிரியான திரைப்படங்களையே நம்புவதாகவும், இதுபோலவே தனது மற்ற படங்களும் உண்மையைப் பேசும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
 
 
சந்தீப் சர்மா, வீர் சாவர்க்கரின் வரலாற்று திரைப்படத்தை தயாரித்து வருகிறார். ‘ஸ்வதந்திரிய வீர் சாவர்க்கர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரந்தீப் ஹூடா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
அத்துடன், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தையும் ‘அடல்’ எனும் பெயரில் தயாரித்து வருகிறார் சந்தீப் சர்மா.
 
திப்பு சுல்தான் குறித்த உண்மைகளை தெரிந்து வைத்திருந்தவர்கள், அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதையே தான் 70எம்எம் திரையில் காட்ட விரும்புகிறேன்.
 
உண்மையில், திப்பு 'சுல்தான்' என சொல்லப்படுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர் எனவும் தெரிவிக்கிறார் சந்தீப் சர்மா.
 
இதுவரை வரலாற்று புத்தகங்கள் 'திப்பு' குறித்த தவறான தகவல்களையே சொல்லியிருக்கின்றன. அவரது இன்னொரு பக்கம் குறித்து யாரும் பேசாததை, ‘திப்பு’ திரைப்படம் மூலம் மக்கள் தெரிந்து கொள்வார்கள் எனவும் சந்தீப் கூறுகிறார்.
 
படத்துக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு?
பவன் சர்மா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘திப்பு’ திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி, திரைக்கு வரவுள்ளது.
 
இந்தப் படத்திற்காக திப்பு சுல்தான் பற்றிய ஆய்வுகளை ரஜத் சேத்தி என்பவர் மேற்கொண்டுள்ளார். இவர், ஹார்வர்டு மற்றும் ஐஐடி காரக்பூரில் பட்டம் பெற்றவர் என படக்குழு தெரிவித்திருக்கிறது. இவர், அஸ்ஸாம் தேர்தலின்போது, பாஜகவிற்காக தேர்தல் பணிகளையும் மேற்கொண்டார்.
 
‘திப்பு’ படத்தின் அறிவிப்பு டீசரில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த வீடியோ கோவில்கள் எரியும் பின்னணியைக் கொண்டிருக்கின்றன.
 
உண்மையில், பேஷ்வா ராணுவத்தால் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் திப்பு சுல்தான் மாற்றினார். அவர் தனது மாகாண மக்களை ஆசீர்வதிக்குமாறு அம்மடத்தின் தலைமை குருவுக்கு பல கடிதங்களை எழுதினார்.
 
நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை ’ஹக்கீம் நஞ்சுண்டா’ என திப்பு சுல்தான் அழைத்தார். காரணம் அத்திருக்கோவிலில் தான் அவரது கண் பிரச்னை குணமானது. அந்த கோவில் உட்பட பல்வேறு கோவில்களுக்கும் பல்வேறு திருப்பணிகளை திப்பு சுல்தான் செய்துள்ளார் என்று பேராசிரியர் நரசிம்மய்யா கூறினார்.
 
 
டீசர் வெளியானதில் இருந்தே சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்புமாய் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், திப்பு சுல்தானைப் பற்றி நமக்கு கற்பிக்கப்பட்ட அனைத்தும் தவறானவைதான் என குறிப்பிட்டு படத்தின் இயக்குநர் பவன் சர்மா விளக்கமளித்துள்ளார்.
 
திப்பு மதவெறி பிடித்த மன்னன் என்பதை அறிந்து, தான் மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்ததாக குறிப்பிடும் பவன் சர்மா, போர் ஹீரோவாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ள பிம்பத்தை துணிச்சலுடன் திரைக்கு கொண்டு வருவேன் என கூறியுள்ளார்.
 
 
’திப்பு’ திரைப்பட அறிவிப்பு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், இந்தப் படம் நிச்சயம் பாஜகவின் பரப்புரை திரைப்படம்தான்.
 
வழக்கமாக வலதுசாரிகள் வெகுஜன ஊடகமான சினிமாவை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தொடங்கியிருக்கிறார்கள் என்றே நாம் பார்க்க வேண்டும் என்கிறார் திரை விமர்சகர் பரத்.
 
காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி படங்களின் தொடர்ச்சியாக 2024 தேர்தலை முன் வைத்த ‘திப்பு’ திரைப்படமும் வெளியாகும் என கூறும் அவர், ஆனால், வரலாறு, புனைவும் வெவ்வேறு என்பதை புரிந்துகொண்டு தங்களை படைப்புகளை கலைஞர்கள் உருவாக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
 
தொடர்ச்சியாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்புவது ஆபத்தானது எனும் பரத், தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை தடை செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை எனவும் அப்படியானால், நாம் தணிக்கை வாரியத்துக்கு எதிராகவே போராட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.
 
திரையரங்கில் ஒரு படத்தை வெளியிடக்கூடாது என்று சொன்னால், கருத்து சுதந்திரம் குறித்து பேசுவது பெரும் முரண் எனவும் குறிப்பிடுகிறார்.
 
’திப்பு’ அறிவிப்பு டீசர், திப்புவின் முகத்தில் கருப்பை பூசுவதைப் போன்று இடம்பெற்றுள்ளது. உண்மையில், இந்தப் படம், படக்குழுவினர் சொல்வதைப் போல, இதுவரையிலான திப்பு சுல்தானின் பிம்பத்தை உடைக்குமா என்பதை அறிய படம் வெளியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்.