வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (14:02 IST)

குழந்தைகள் நேரலை செய்ய தடை விதிக்கும் டிக்டாக்

அடுத்த மாதம் முதல், டிக்டாக் செயலியில் நேரலை வசதியை பயன்படுத்த (லைவ் ஸ்ட்ரிமீங்) குறைந்த பட்சம் வயது 16இல் இருந்து 18 ஆக அந்த நிறுவனம் உயர்த்துகிறது.

ஒரு பிபிசி செய்தி விசாரணையில், சிரிய அகதிகள் முகாம்களில் நூற்றுக்கணக்கான கணக்குகளிலிருந்து, நேரலை மூலம் குழந்தைகள் யாசகம் கேட்டது கண்டறியப்பட்டது.

சிலர் ஒரு மணி நேரத்திற்கு 1000 டாலர் வரை உதவி பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு கிடைத்த பணத்தை எடுக்கும் போது, அதில் 70% வரை டிக்டாக் நிறுவனம் எடுத்துக்கொண்டது.

எதிர்காலத்தில், பெரியவர்கள் மட்டுமே "மெய்நிகர் நுட்பம் மூலம் பரிசுகளை அனுப்ப முடியும் அல்லது பணமாக்கக்கூடிய அம்சங்களை பயன்படுத்த முடியும்," என்று டிக்டாக் தெரிவித்துள்ளது.

இனி வரும் வாரங்களில், 18 வயதை தாண்டியவர்கள் மட்டுமே நேரலை வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், இந்த வயதுக் கட்டுப்பாடுகளை டிக்டாக் எவ்வாறு செயல்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இன்ஸ்டாகிராமுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் தாய் நிறுவனமாக இருக்கும் மெட்டா மற்றும் யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுள் ஆகியவை நேரலை வசதியை பயன்படுத்த குறைந்தபட்ச வயதாக 13 ஆக நிர்ணயித்திருக்கின்றன. இந்த தளங்களில் பயனர்கள் தாங்கள் பதிவேற்றும் உள்ளடக்கத்தை வயது வரம்புக்கு ஏற்ப பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

டிஜிட்டல் மூலம் பெறப்படும் உதவி

ஐந்து மாதங்களுக்கு, பிபிசியின் உலகளாவிய தவறான தகவல்களை கண்டறியும் பிரிவு, பிபிசி அரபு மற்றும் பிபிசி ஐ புலனாய்வு பிரிவு, வடமேற்கு சிரியாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட டிக்டாக் கணக்குகள் நேரலை செய்வதை கண்காணித்தன.

டிக்டாக் விதிகளின்படி, நீங்கள் நேரடியாக பரிசுகளைக் கோரக்கூடாது என்றும், இந்த தளத்தில் சிறார்களுக்கு தீங்கு விளைவிப்பது, ஆபத்தை ஏற்படுத்துவது அல்லது அவர்களிடம் சுரண்டுவது ஆகிவற்றை தடுக்க வேண்டும்.

குழந்தைகள் யாசகம் கேட்கும் 30 டிக்டாக் கணக்குகள் மீது, பிபிசி நியூஸ் அந்த செயலியில் உள்ள வசதிகளை பயன்படுத்தி புகாளித்தது. அப்போது டிக்டாக் நிறுவனம், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதன் கொள்கைகளை மீறவில்லை என்று கூறியது. அதுகுறித்த கருத்துக்காக பிபிசி நியூஸ் டிக்டாக்கை நேரடியாகத் தொடர்பு கொண்ட பிறகு, அந்த நிறுவனம் இந்த கணக்குகள் அனைத்தையும் தடை செய்தது.

தனது தளத்தில் இத்தகைய உள்ளடக்கங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், டிஜிட்டல் பரிசுகள் மூலம் தனது நிறுவனத்திற்கு வரும் கமிஷன் தொகை 70% க்கும் குறைவாக உள்ளது என்று டிக்டாக் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் சரியான தொகையை அந்நிறுவனம் உறுதி செய்யவில்லை.

டிக்டாக் என்பது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக செயலி. இந்த செயலி 3.9 பில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவரின் கூற்றுப்படி, இது 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் செயலியில் பயனர்கள் செலவு செய்ததன் மூலம் மொத்த வருவாயில் 6.2 பில்லியன் டாலரை விட அதிகமாக ஈட்டியுள்ளது.

Updated By: Prasanth.K