1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (15:02 IST)

பல்லுயிர் பாதுகாப்பு: அழியும் நிலையில் இருந்த தவளை, தேரை, பல்லி இனங்களை மீட்ட பல நூறு குளங்கள்

BBC
சுவிட்சர்லாந்தில் அழியும் நிலையில் இருந்த பாதிக்கும் மேலான தவளை இனங்கள், தேரைகள் மற்றும் பல்லி இனங்கள், அந்த ஆபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சுவிட்சர்லாந்தில் ஆர்கா மண்டலத்தில் இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கில் புதிய குளங்களை தோண்டியுள்ளனர். இதன்மூலம், அழியும் நிலையில் இருந்த நிலநீர் வாழிககளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளன.

குறிப்பாக, ஐரோப்பிய மரத்தவளை இனத்தின் எண்ணிக்கை "பெருமளவில் உயர்ந்துள்ளதாக", ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குளங்கள் வெட்டுவது எளிதாகவும் திறன்வாய்ந்ததாகவும் இருப்பதால், உலகளவில் இந்த முறையை பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

வாழ்விட இழப்பு, நகரமயமாக்கல், சாலை வசதி, நோய்கள் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு சொந்தமில்லாத வேறு இனங்களின் நுழைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளவில் நிலநீர் வாழிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இத்தகைய நிலநீர் வாழிகளின் இழப்பை எதிர்கொள்ள பெருமளவில் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள 1999ஆம் ஆண்டில் ஆர்கா மண்டலத்தில் முடிவுசெய்யப்பட்டது. இதில், ஐரோப்பிய மரத்தவளை இனத்தின் எண்ணிக்கை அதிகளவில் சரிந்தது முக்கிய கவலையாக இருந்தது.

ஆர்காவின் ஐந்து மண்டலங்களில் அரசு அதிகாரிகள், லாப நோக்கற்ற அமைப்புகள், தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் அனைவரும் கடந்த 20 ஆண்டுகளாக 422 குளங்களை வெட்டியுள்ளனர்.

வாழ்விட பற்றாக்குறை, வேட்டையாடும் இனங்கள் அதிகளவில் இருப்பது மற்றும் அடர்ந்த தாவரங்கள் ஆகியவற்றின் காரணமாக, பழைய குளங்களில் சில நீர்நில வாழிகள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய குளங்களை உருவாக்குவதன் மூலம், அந்த இனங்கள் வாழ்வதற்கான இடத்தை இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் வழங்கியுள்ளனர்.
BBC

அழியும் நிலையில் இருந்த எட்டு இனங்களில், 52 சதவீதம் அதன் பிரதேச அளவிலான எண்ணிக்கை உயர்ந்துள்ளது, மேலும், 32% எண்ணிக்கை மேலும் அழியாமல் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தீர்வின் எளிமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, "இத்தகைய அளவில் தவளைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதை" பார்ப்பது உற்சாகமாக இருப்பதாக, இந்த ஆய்வை தலைமையேற்று வழிநடத்திய டாக்டர் ஹெலென் மூர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நாம் ஓர் இடத்தை உயிரினங்களுக்கு வழங்கினால், அந்த உயிரினங்கள் அங்கு வந்து, அங்கேயே தங்கி அந்த இருப்பிடத்தைப் பயன்படுத்தத் தொடங்கும்," என்கிறார் அவர். சிறிய வடிவிலான ஐரோப்பிய மரத்தவளைகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது.

இந்தத் தவளை இனம், புதர்கள், மரங்கள் மீது தாவுவதற்கு விருப்பம் கொண்டவை என விவரிக்கும் டாக்டர் மூர், இந்தத் தவளைகள் சில கிலோ மீட்டர்களுக்கு பயணிக்கும் அளவுக்கு நகரும் தன்மை கொண்ட தவளை இனங்களுள் ஒன்று எனத் தெரிவித்தார்.

தாங்கள் செழித்து வாழ்வதற்கு மிக குறிப்பிட்ட வாழ்விட தேர்வை கொண்ட இந்தத் தவளை இனங்கள், ஆழமற்ற குளங்களில் வாழும் இயல்புடையன. ஆனால், இவ்வகையான வாழ்விடங்கள் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இல்லாமலாகி விட்டதால், இந்த இனங்கள் குறையத் தொடங்கின.

பிரிட்டனை போல சுவிட்சர்லாந்து பெரிய சாலைகள் மற்றும் ரயில்வே இணைப்புகளை கொண்ட அதிக மக்கள்தொகை அடர்த்திகொண்ட நாடாகும். மேலும், அந்நாட்டின் நகரமயமாக்கப்படாத நிலங்களில் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூர் விவரிக்கிறார்.

"வாழ்விட இழப்பு முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று. அதனை சரிபடுத்தினால் ஏற்படும் வித்தியாசத்தை நாம் இப்போது பார்க்கிறோம். அழிந்துவரும் இனங்கள் தற்போது மீளத்தொடங்கியுள்ளன," என அவர் தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய மரத் தவளையின் பிராந்திய மக்கள் தொகை ஒரு பகுதியில் நான்கு மடங்காக அதிகரித்தது. இது 1999இல் ரியஸ்ஸ்டலில் 16 இடங்களில் மட்டுமே காணப்பட்டது, ஆனால் 2019இல் இந்த இனங்கள் 77 இடங்களில் வாழ்கின்றன.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தவளை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, வாழ்விடங்களை உருவாக்குவது எவ்வளவு வெற்றிகரமான செயல்முறை என்பதை நிரூபிப்பதாக உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தக் குளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மேலும் தவளை இனங்கள் செழித்து வாழும் வகையில் உறுதி செய்யப்படும்.

இந்த முயற்சியின் வெற்றி, மற்ற நில உரிமையாளர்களும் குளங்களை வெட்டுவதற்கு சம்மதிக்க வைக்கும் என்றும் இதனால் வாழ்விடங்களின் பன்மைத்துவம் ஏற்படும் என தான் நம்புவதாகவும் மூர் கூறுகிறார்.

இந்த ஆய்வு ப்ரொசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

Updated By: Prasanth.K